மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 19 செப் 2020

ஆன்லைனில் மொபைல் விற்பனை ஜோர்!

ஆன்லைனில் மொபைல் விற்பனை ஜோர்!

பண்டிகை சீசன் தொடங்கிய முதல் இரண்டு நாட்களிலேயே இந்தியாவில் ஆன்லைன் தளத்தில் சுமார் 50 லட்சம் மொபைல் போன்கள் விற்பனையாகியுள்ளன.

இந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பண்டிகை சீசனை முன்னிட்டு ஆன்லைன் மின்னணு வர்த்தக நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்குப் பல்வேறு சிறப்புச் சலுகைகளை அறிவிப்பது வழக்கம். மக்களும் இந்தச் சமயத்தில் தங்களுக்கு விருப்பமான மொபைல் போன், வீட்டு உபயோகப் பொருட்கள், ஆடைகள் உள்ளிட்டவற்றை ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து வாங்குவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பண்டிகை சீசனை முன்னிட்டு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் அக்டோபர் 10 முதல் சிறப்புச் சலுகைகளை அறிவித்திருந்தன. சலுகை அறிவிக்கப்பட்ட முதல் இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 46 லட்சம் மொபைல் போன்களை ஆன்லைன் தளங்களில் மக்கள் வாங்கியுள்ளனர்.

மொபைல் போன்களுக்கு ரூ.2,000 வரை ‘கேஷ் பேக்’ சலுகையும், 50 சதவிகிதம் வரையில் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டிருந்தது. அமேசான் நிறுவனத்தைப் பொறுத்தவரையில், ஒன் பிளஸ்6, ரெட்மி 6ஏ, ரெட்மி ஒய்2, ரெட்மி 6 புரோ உள்ளிட்ட மொபைல் போன்கள் அதிகமாக விற்பனையாகியுள்ளன. ஃபிளிப்கார்ட் தளத்தில் அக்டோபர் 11ஆம் தேதி ஒரு நாளில் மட்டும் 30 லட்சம் மொபைல் போன்களை விற்பனை செய்துள்ளது. இது உலகளவில் ஒரு நாளில் விற்பனையாகும் அதிகபட்ச மொபைல் போன் எண்ணிக்கையாகும். மொபைல் போன்கள் தவிர்த்து, டிவி உள்ளிட்ட பெரிய வீட்டு உபயோகப் பொருட்கள் அதிகமாக ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. டிவிகளுக்கு 65 சதவிகிதம் வரையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருந்தது. முதல் இரண்டு நாட்களில் மொபைல் போன் தவிர்த்து 6 லட்சம் மின்னணு சாதனங்கள் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon