மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 4 டிச 2020

பத்ம விருதுகளுக்கு 50,000 பேர் பரிந்துரை!

பத்ம விருதுகளுக்கு 50,000 பேர் பரிந்துரை!

பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 40 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் பத்ம விருதுகள், மத்திய அரசின் சார்பில் குடியரசு தினத்திற்கு முந்தைய நாளான ஜனவரி 25ஆம் தேதியன்று வழங்கப்பட்டு வருகிறது. இதில் சமூகப் பணி, ஆட்சிப் பணி, இலக்கியம், கல்வி, மருத்துவம், பொறியியல், தொழில், விளையாட்டு உள்ளிட்ட எட்டுப் பிரிவுகளின் கீழ் பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. இதன் கீழ் பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷண், பத்ம பூஷண் ஆகிய மூன்று விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த விருதுகள் பற்றிய விழிப்புணர்வை பல தரப்பட்ட மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில், 2016ஆம் ஆண்டு முதல் விருதுகளுக்கான பரிந்துரைகளை ஆன்லைன் மூலம் அனுப்பும் முறை அமல்படுத்தப்பட்டது. அதன்படி, 2019ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை அளிக்கலாம் என்று கடந்த மே 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 15ஆம் தேதி வரை மத்திய உள்துறை அமைச்சகம் கால வரம்பு நிர்ணயித்திருந்தது.

இதுவரை மொத்தம் 49,992 பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது உள்துறை அமைச்சகம். 2017ஆம் ஆண்டு 35,595 பரிந்துரைகளும், 2016ஆம் ஆண்டில் 18,768 பரிந்துரைகளும் பெறப்பட்டுள்ளன. உயரிய விருதுகளுக்கு நாட்டின் எந்த மூலையில் இருப்பவரின் பெயரும் பரிந்துரைக்கப்படலாம் என்று எளிமைப்படுத்தப்பட்டதே, தற்போது பரிந்துரைகள் அதிகரித்ததற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

ஆன்லைன் மூலம் சராசரி குடிமகனும் பத்ம விருதுகளுக்குப் பரிந்துரை அளிக்கலாம் என மாற்றம் செய்யப்பட்டதால் ஆன்லைன் மூலம் பரிந்துரைப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon