மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 15 ஜன 2021

குடியரசு துணைத் தலைவருக்கு கறுப்புக் கொடி காட்ட முயற்சி!

குடியரசு துணைத் தலைவருக்கு  கறுப்புக் கொடி காட்ட முயற்சி!

ஜிப்மர் மருத்துக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள சென்ற குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு, மாணவர்கள் கறுப்புக் கொடி காட்ட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக தமிழகம் வந்திருந்த குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் இன்று (அக்டோபர் 12) புதுச்சேரி சென்றார். அவரை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, முதல்வர் நாராயணசாமி ஆகியோர் வரவேற்றனர். புதுச்சேரி அரசின் சார்பில் நிகழ்த்தப்பட்ட அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக்கொண்டார்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் 9ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட குடியரசு துணைத் தலைவர், மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி கவுரவித்தார். மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், “தேசிய அளவில் சிறந்த மருத்துவக் கல்லூரிகள் பட்டியலில் ஜிப்மர் மூன்றாவது இடம் வகிக்கிறது. இதற்காக உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நிறுவனத்தை கட்டமைப்பதற்கு நீண்ட காலமும், கடின முயற்சியும் தேவைப்படுகிறது. இதற்கு ஒட்டுமொத்த அணியும் பொதுவான இலக்கை நோக்கி பணியாற்ற வேண்டியுள்ளது. ஒத்துழைப்பு, கூட்டுறவு, முயற்சி மற்றும் புதிய கண்டுபிடிப்பு, சீர்திருத்தத்தின் மூலமாகவே ஒரு அமைப்பை வலுப்படுத்த முடியும்” என்று தெரிவித்தார்.

கறுப்புக் கொடி காட்ட முயற்சி

புதுச்சேரி காலாப்பட்டில் அமைந்திருக்கும் மத்திய பல்கலைக் கழகத்தில் புதுச்சேரி மாநில மாணவர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை 25 சதவிகிதமாக உயர்த்தக் கோரியும், காவலர் பணிக்கான வயது வரம்பை 22லிருந்து 24ஆக உயர்த்தக் கோரியும் மாணவர் கூட்டமைப்பினர், தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

பட்டமளிப்பு விழாவுக்காக லாஸ் பேட்டை விமான நிலையத்திலிருந்து வெங்கய்ய நாயுடு கார் மூலம் ஜிப்மர் மருத்துவக் கல்லூரிக்கு வருகை தந்தார். இதனையடுத்து முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே திரண்ட மாணவர்கள், மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். தாங்கள் மறைத்துவைத்திருந்த கறுப்புக் கொடியையும், குடியரசு துணைத் தலைவருக்கு காட்ட முயற்சித்தனர். இதனையடுத்து 20 மாணவர்களை கைது செய்த காவல் துறையினர், அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

குடியரசு துணைத் தலைவருக்கு கறுப்புக் கொடி காட்ட முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon