மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 29 நவ 2020

வைரமுத்துவின் காலில் விழுந்தது ஏன்?

வைரமுத்துவின் காலில் விழுந்தது ஏன்?

சின்மயி விவகாரத்தில் அவருக்கு ஆதரவாகப் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் அவருக்கு எதிராக விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அவர் மீதான விமர்சனங்கள் குறித்து விரிவாகப் பதிலளித்துள்ளார் அவரது தாயார் பத்மாசினி.

2004ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் வைரமுத்து தனக்குப் பாலியல் மிரட்டல்விடுத்ததாக சின்மயி தெரிவித்திருந்தார். அவரது தாய் பத்மாசினியும் இதுகுறித்து விளக்கியிருந்தார். விமர்சனங்களை வைப்போரின் முதல் கேள்வியாக இருப்பது பதினான்கு ஆண்டுகளுக்கு பின் இப்போது ஏன் இந்த விஷயத்தை வெளிக்கொண்டு வருகிறீர்கள், இதன் பின்னால் அரசியல் காரணங்கள் இருக்கிறதா என்பதே. இது குறித்து சின்மயியின் தாயார் பத்மாசினி நியூஸ் ஜெ சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், “மீ டூ மூவ்மெண்ட் இப்போதுதான் உருவாகியுள்ளது. இந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான ஆரோக்கியமான சூழல் இப்போது உருவாகியுள்ளது. வைரமுத்து குறித்து எழுந்த புகார்களுக்கு ஆதரவளித்து சின்மயி பேசியபோது ‘உனக்கு என்ன தெரியும்’ என்ற வகையில் அவளை நோக்கி கேள்வி எழுப்பியபோது அவள் வெடித்து இந்த சம்பவத்தைக் கூறியுள்ளாள்” என்றார்.

பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் திருமணத்துக்கு அவரை அழைத்து காலில் விழ வேண்டிய தேவை என்ன என்று சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. இதைத் தெளிவுபடுத்திய பத்மாசினி, “திருமணத்திற்கு 250 பத்திரிகைகளை அடித்துத் தனிப்பட்ட முறையில் நானே அனைவரையும் அழைத்தேன். அவரை மேடை ஏற்றி வைரமுத்து காலில் சின்மயியை விழும்படி நானே கூறினேன். ஏனென்றால் தவறான கண்ணோட்டத்தில் பார்த்த பெண், மகள் போல் காலில் விழும்போது மனதில் மாற்றம் ஏற்படும். இது போன்று தான் எங்கள் குடும்பத்தில் செய்வர். யாரையும் வேண்டாம் என ஒதுக்கும்போது அது மேலும் அதிகமாகும்” என்றார்.

“சுவிட்சர்லாந்தில் மட்டுமல்லாமல் வைரமுத்துவின் வீட்டிற்கு மேல் உள்ள அவரது அலுவலகத்தில் தனக்கு நடந்த கொடுமையைப் பற்றி சின்மயி கூறுவாள். அதைப் பற்றி நான் கூறக் கூடாது அவளே கூறுவாள்” என்றும் பத்மாசினி கூறியுள்ளார்.

வைரமுத்து மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களால் இந்தச் சம்பவம் வெளியான பின்னர் மிரட்டல் வந்ததா என்ற கேள்விக்கு பதிலளித்த பத்மாசினி, “எனக்கு இப்போது வரை எந்த மிரட்டலும் வரவில்லை. ஆனால் டிவிட் போடக்கூடாது என சின்மயிக்கு மிரட்டல் வந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

வைரமுத்து மீது புகார் அளித்து தண்டனை வாங்கித் தர முயற்சிக்கவில்லையா என்ற கேள்விக்கு, “மீ டூ மூவ்மென்ட்டை பொறுத்தவரைத் தனிப்பட்ட ஒருவருக்கு தண்டனை வாங்கித் தருவதால் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடாது. வருங்காலத்தில் இளைஞர்கள், இளைஞிகள் வாழ்வதற்கு சௌக்கியமான சூழலை ஏற்படுத்தி தருவதற்காகத் தான் இது முன்னெடுக்கப்பட்டுவருகிறது. அவருக்கு வயதாகிவிட்டது. தண்டிப்பதால் மட்டும் ஏதும் நடந்துவிடாது. இனி அதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கவேண்டும்” என்று கூறியுள்ளார்.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon