மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

ஸ்டாலின், தினகரன் என்னை இயக்கவில்லை: கருணாஸ்

ஸ்டாலின், தினகரன் என்னை இயக்கவில்லை: கருணாஸ்

திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ், தன்னை யாரும் இயக்கவில்லை என்று பேட்டியளித்துள்ளார்.

முதல்வரை அவதூறாகப் பேசிய வழக்கு, ஐபிஎல் போராட்ட வழக்கு ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்ட திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், கடந்த மாதம் 29ஆம் தேதி ஜாமீனில் வெளிவந்தார். கடந்த ஆண்டு நெற்கட்டும் செவலில் பூலித்தேவன் பிறந்தநாள் விழாவில் ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கில் கருணாஸை கைது செய்ய கடந்த 3ஆம் தேதி நெல்லை போலீசார் சென்னை வந்தனர். ஆனால் நெஞ்சுவலி காரணமாக கருணாஸ், வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், அவரைக் கைது செய்ய இயலாமல் திரும்பினர்.

இந்த வழக்கில் கருணாஸுக்கு முன்ஜாமீன் அளித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்ட நிலையில், மருத்துவமனையிலிருந்து கருணாஸ் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையில் கருணாஸை, திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் நேரில் சந்தித்து நலம் விசாரித்திருந்தார்.

இந்த நிலையில் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, கருணாஸ் இன்று (அக்டோபர் 12) மரியாதை நிமித்தமாக சந்தித்தார். சுமார் 30 நிமிடங்கள் இச்சந்திப்பு நிகழ்ந்தது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், “திமுக தலைவர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். என்னை கைது செய்தது பழிவாங்கும் நடவடிக்கை என்று மக்கள் கூறுகின்றனர்” என்று தெரிவித்தார்.

சபாநாயகரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென நோட்டீஸ் அனுப்பியது குறித்த கேள்விக்கு, “சபாநாயகர் தராசு போன்றவர். நடுநிலையாக செயல்பட வேண்டிய சபாநாயகர், ஒருதலைப் பட்சமாக நடந்துகொள்கிறார். எனவே சபாநாயகரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்ற தனிநபர் தீர்மானத்தை நான் முன்மொழிந்துள்ளேன். அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அளவுக்கு நான் தவறு செய்யவில்லை. ஏற்கனவே அவர் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையை எடுத்துள்ளார். ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது ஒரு நடவடிக்கையும், தினகரன் அணியைச் சார்ந்த 18 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக ஒரு நடவடிக்கையும் எடுத்துள்ளார். அதுபோன்ற ஒருதலைப்பட்சமான நடவடிக்கையை என் மீதும் சபாநாயகர் எடுப்பதாக தெரிகிறது. இதனை முன்வைத்துதான் தனிநபர் தீர்மானத்தை முன்வைத்துள்ளேன்” என்று பதிலளித்தார்.

“என்னை திமுக தலைவர் ஸ்டாலின் இயக்குவதாக ஊடகங்களும் பொதுமக்களும் பரவலாகப் பேசிக்கொள்கின்றனர். அதுபோலவே தினகரனும் என்னை இயக்குவதாகக் கூறுகின்றனர். ஆனால், என்னையும் என் இனத்தையும் இயக்கும் ஒரே தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்தான்” என்று குறிப்பிட்ட கருணாஸ், தினகரன், விஜயகாந்த், திருநாவுக்கரசர் உள்ளிட்ட தலைவர்களையும் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon