மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

அரசிடம் புகாரளித்த ஏற்றுமதியாளர்கள்!

அரசிடம் புகாரளித்த ஏற்றுமதியாளர்கள்!

போதிய அளவில் கடன்கள் வழங்கப்படாததால் ஏற்றுமதியாளர்கள் அரசிடம் புகாரளித்துள்ளனர்.

டீசல் விலை உயர்வால் போக்குவரத்துச் செலவுகள் அதிகரிப்பு, நீரவ் மோடி கடன் மோசடிக்குப் பிறகு கடன் பெறுவதில் சிக்கல்கள், ஜிஎஸ்டி ரீஃபண்ட் பெறுவதில் தொடர் தாமதம் என ஏற்றுமதியாளர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அரசிடம் மனு அளித்துள்ளனர். மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியால் எந்தப் பலனும் கிட்டவில்லை என்று ஏற்றுமதியாளர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

இதுகுறித்து இந்திய ஏற்றுமதி சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவரான கணேஷ் குமார் குப்தா டி.என்.என் ஊடகத்திடம் பேசுகையில், “பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஏற்பட்ட கடன் மோசடிக்குப் பிறகு சிறு ஏற்றுமதியாளர்கள் கடன் பெறுவது பெரும் சிக்கலாக உள்ளது. கடனுக்கான முன்மொழிதல்கள் மண்டல அலுவலகங்களுக்கும், பிராந்திய அலுவலகங்களுக்கும் அனுப்பப்படுவதால் கடன் பெறுவதற்கு நீண்ட காலம் ஆகிறது. பெரிய ஏற்றுமதியாளர்களுக்கும் கூட செலவுகள் 5 முதல் 6 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

அரசின் கையில் ரூ.8,000 முதல் ரூ.9,000 கோடி வரையிலான ஜிஎஸ்டி ரீஃபண்ட் தொகை நிலுவையில் உள்ளது. மாநில அரசுகளோ ரூ.15,000 கோடி அளவிலான உள்ளீட்டு வரிக் கடன்களை வழங்காமல் உள்ளன. இவ்வளவு பிரச்சினைகளின் மொத்த விளைவாக இந்திய ஏற்றுமதிக்கான செலவுகள் அதிகரித்துள்ளன. ஏற்கெனவே சரக்குப் போக்குவரத்துச் செலவுகள் உயர்வு, உள்கட்டமைப்புச் செலவுகள் போன்றவற்றால் ஏற்றுமதியாளர்கள் போராடி வருகின்றனர். கடந்த நிதியாண்டில் ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்படும் கடன்களின் அளவு 26 விழுக்காடு சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon