மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 16 ஜூலை 2020

பாலியல் புகார்: அக்பர்தான் பதிலளிக்க வேண்டும்!

பாலியல் புகார்: அக்பர்தான் பதிலளிக்க வேண்டும்!

பத்திரிகையாளர்கள் சுமத்தியுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர்தான் கருத்து தெரிவிக்க வேண்டும் என ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.

மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சராக உள்ள எம்.ஜே.அக்பர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தார். ஏசியன் ஏஜ் நாளிதழின் ஆசிரியராக எம்.ஜே.அக்பர் பணிபுரிந்த காலத்தில் (1995) அவரை பேட்டி எடுக்கச் சென்றபோது தமக்குப் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று அவர் பதிவிட்டுள்ளார். இதேபோல் மேலும் சில பெண் பத்திரிகையாளர்களும் அக்பர் மீது புகார் கூறியுள்ளனர்.

இதையடுத்து அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்க மறுத்தபோதும், பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய பெண்கள் மற்று குழந்தைகள் வளர்ச்சித் துறை அமைச்சர் மேனகா காந்தி வலியுறுத்தியுள்ளார். வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தில் உள்ள அக்பர் இது தொடர்பாக எந்த கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் இந்த விவகாரம் தொடர்பாக நேற்று (அக்டோபர் 11) கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "இந்த விவகாரம் தொடர்பாக நான் பேசுவதைவிட சம்பந்தப்பட்டவர் (அக்பர்) பேசுவது நல்லது என நினைக்கிறேன். பெண் பத்திரிகையாளர்களுடன் உடன் நிற்கும் ஊடகங்களுக்கு என்னுடைய பாராட்டுகள். இதுதொடர்பாக கருத்து தெரிவிக்க வேண்டியது அவரைச் சார்ந்தது. ஏனென்றால் சம்பவம் நடைபெற்றபோது நான் அங்கு கிடையாது" என்று பதிலளித்துள்ளார்.

இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வைப்பவர்கள் கேலி, பாதிப்புகளுக்கு உள்ளாகக் கூடாது என்பதே எனது ஒரே வேண்டுகோள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேபோல், இந்த விவகாரத்தில் அக்பரின் கருத்தையும் கேட்க வேண்டும் என்றும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார்.

“இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். அவர் குற்றம் செய்தது தெரியவந்தால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon