மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 16 ஜூலை 2020

எய்ம்ஸ் விழாவில் மோடி: மத்திய அமைச்சர்!

எய்ம்ஸ் விழாவில் மோடி: மத்திய அமைச்சர்!

மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருப்பதாகத் தெரிவித்துள்ளார் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா.

மதுரை அருகே திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் 198.27 ஏக்கர் பரப்பளவில் 1,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ’எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த ஜுன் மாதம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க டிசம்பர் மாதத்திற்குள் நிதி ஒதுக்கப்படும் என்று, கடந்த இரு தினங்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா கூறியிருந்தார்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகச் சென்னை வந்தார் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா. இன்று (அக்டோபர் 12) சென்னை விமான நிலையத்தில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பாஜக தலைவர் தமிழிசை ஆகியோர் அவரை வரவேற்றனர்.

விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா. "மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டுக்கு மத்திய நிதிக்குழு விரைவில் ஒப்புதல் அளிக்கும். பின்னர் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தவுடன், ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் மதுரை தோப்பூரில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும். எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார்.

தமிழக மக்கள் பயனடையும் வகையில் மத்திய அரசு தமிழக அரசுடன் இணைந்து அனைத்து சுகாதாரத் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய 3 இடங்களில் ரூ.450 கோடி செலவில் பன்னோக்கு மருத்துவமனைகள் கட்டப்பட்டு வருகின்றன" என்று ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon