மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020

யார் தளபதி?

யார் தளபதி?

அண்மையில் சென்னையில் நடந்த ‘சர்கார்’ பட ஆடியோ வெளியீட்டில் விஜய் மேடையேறும்போது தளபதி, தளபதி என்று தொடர்ந்து அழைக்கவைத்து மேடையேற்றினார்கள். அப்போதே இது திமுகவினருக்கு உறுத்தியது.

கலாநிதி மாறன் சன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜய்யை முழுக்க முழுக்க தளபதி என்றே அழைக்கத் திட்டமிட்டிருப்பதாகவும், அதை ஒட்டியே புரமோஷன் வேலைகள் நடைபெறுவதையும் நாம் ஏற்கெனவே டிஜிட்டல் திண்ணை பகுதியில் எழுதியிருந்தோம்.

இந்த நிலையில் கடந்த அக்டோபர் 8ஆம் தேதி சென்னையில் நடந்த கலைஞர் வீரவணக்க நிகழ்ச்சியில் பெரியாரியவாதி வே.மதிமாறன் பேசிய பேச்சும், அந்தப் பேச்சைப் பதிவு செய்து ஒளிபரப்பிய யூடியூப் சேனல்களில் இருந்து அந்த பேச்சின் வீடியோ அகற்றப்பட்டிருப்பதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முதல் வரிசையில் ஸ்டாலின், ஆ.ராசா, டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் அமர்ந்திருக்கையில் அந்த மேடையில் பேசிய வே.மதிமாறன்,

“உலகத்தில் புரட்சித் தலைவர் என்றால் அது ஒரே புரட்சித் தலைவர் லெனின் தான். அதுபோல தமிழ்நாட்டில் தளபதி என்றால் ஒரே தளபதிதான். அது நம் ஸ்டாலின் அவர்கள்தான். இப்போது ஷூட்டிங்கல மிச்சம் இருக்கிற டயலாக்கை எல்லாம் மேடைக்கு எடுத்துட்டு வந்துடறாங்க. எம்.எல்.ஏ. ஆகிதான் முதலமைச்சர் ஆகணும்னு அடிப்படை அறிவு இல்லாதவர்கள் நம்மை ஆளணும் என்று நினைக்கும் சூழலில் மீண்டும் நான் சொல்கிறேன் தளபதி என்றால் நமது ஸ்டாலின் தான்” என்று பேசினார்.

ஏற்கனவே கலாநிதி மாறன் சர்கார் படத்தில் விஜய்யை தளபதி என்று புரமோட் செய்வதை முன் வைத்துதான் மதிமாறன் இப்படி பேசியிருந்தார். ஆனால், இந்தப் பேச்சின் காட்சிகள் யூடியூப்பில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் பரவின.

நாம் இதுபற்றி அதே நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டவரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான கிருபா முனுசாமியிடம் பேசினோம்.

“என் க்ளையன்ட்ஸ் சிலர் யூடியூப் சேனல் வெச்சிருக்காங்க. அவங்க மதிமாறனின் இந்த வீடியோவை வெளியிட்டிருக்காங்க. இதையடுத்து அவங்களுக்கு பெங்களூர்லேந்து ஒரு போன் வந்திருக்கு. சன் பிக்சர்ஸ் சார்பாக பேசுவதாக சொல்லிக்கொண்ட அவர்கள், ‘நீங்க போட்டிருக்கிற வீடியோ, காப்பிரைட்ஸை வைலேட் பண்ணுவதாக இருக்கு. அதனால அதை எடுத்துடுங்க’ என்று கேட்டிருக்கிறார்கள். என்ன ஏதென்று விசாரித்தபோது தளபதி பற்றி மதிமாறன் பேசிய பேச்சைதான் அப்படி சொல்லியிருக்கிறார்கள். இதுபற்றி மெயிலும் அனுப்பியுள்ளார்கள்.

இதுபற்றி என் க்ளையன்ட்ஸ் என்னிடம் பேசினார்கள். மீண்டும் நான் பேசினேன். என்னுடனும் பெங்களூரில் இருப்பவர்கள் அப்படித்தான் பேசினார்கள். நான் அவர்களிடம், ‘நீங்க சர்கார் படத்துக்கு காப்பிரைட் வெச்சிருக்கீங்களா? விஜய்க்கே காப்பிரைட் வெச்சிருக்கீங்களா?’ என்று கேட்டேன். மேலும், அந்த வீடியோவில் அவர் சர்கார், விஜய் போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தவே இல்லையே என்றும் கேட்டேன். ஆனால் அவர்கள் விடாப்பிடியாக அந்த வீடியோவை நீக்குங்கள் என்றே கேட்டார்கள்.

முறையா லீகல் நோட்டீஸ் அனுப்புங்க என்று சொல்லிவிட்டேன். ஆனால், என்ன நடந்தது என்றால் மறுநாளே... அந்த யூடியூப் சானலில் இருந்த மதிமாறனின் தளபதி பற்றிய பேச்சை யூடியூப்பே நீக்கிவிட்டதாகத் தெரிந்தது. இது வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

கருத்துச் சுதந்திரம் பற்றி ஒருபக்கம் பேசிக் கொண்டே இன்னொருபக்கம் தளபதி என்ற வார்த்தைக்கே சிலர் சொந்தம் கொண்டாடி வீடியோவை நீக்கும் வரை போய்விட்டார்கள் என்பது கண்டிக்கத்தக்கது” என்றார் வழக்கறிஞர் கிருபா முனுசாமி.

மதிமாறன் தளபதி பற்றிப் பேசிய பேச்சு யூடியூப்பில் இருந்து நீக்கப்படுவதைப் பற்றி அறிந்த கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகம் நேற்று (அக்டோபர் 11) அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. ‘தமிழ்நாட்டுக்கு ஒரே தளபதிதான்... எழுத்தாளர் வே.மதிமாறன் கலைஞருக்கு வீர வணக்கம்’ என்ற பெயரில் அவருடைய முழு உரையையும் யூடியூப்பில் பதிவேற்றியிருக்கிறது கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி.

ஆக, தளபதி என்ற வார்த்தையை வைத்துக்கொண்டு திமுக தலைமைக்கும், விஜய் - கலாநிதி மாறன் அணிக்கும் இடையே மோதல் அதிகமாகியிருக்கிறது. இது எதுவரை போகும் என்பதே இப்போதைய அரசியல் ஹாட்!

- ஆரா

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon