மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020

சிறப்புப் பார்வை: #METOO தோலுரிப்புகள் தொடர வேண்டும்!

சிறப்புப் பார்வை: #METOO தோலுரிப்புகள் தொடர வேண்டும்!

(தமிழகத்தில் #METOO இயக்கம் தொடங்கிய சில நாட்களுக்குள் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. பலவிதமான புகார்களும் கருத்துகளும் அவதூறுகளும் கிளம்பிவருகிறது. பாதிப்புக்கு உள்ளானவர்கள் பற்றிய அவதூறுகள் அதிகரித்துவரும் நிலையில் இந்தப் பிரச்சினையில் பெண்களின் நிலை குறித்து ஃபேஸ்புக்கில் வெளியான சில பார்வைகளை இங்கே முன்வைக்கிறோம். தொடர்ந்து இந்தப் பிரச்சினை குறித்துப் பன்முகக் கோணங்களில் விவாதங்களை மின்னம்பலம் முன்னெடுக்கவிருக்கிறது – ஆசிரியர்)

ஒருமுறை சில வருடங்களுக்கு முன்பு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள். அப்போது நெறியாளர் தருண் தேஜ்பால் பிரச்சினை பற்றி ஒரு கேள்வி எழுப்பினார். அப்போது என் பதில் இதுவாகத்தான் இருந்தது. தெஹல்கா ஒரு ஊடக நிறுவனமாக முக்கியப் பணிகளைச் செய்திருக்கிறது. முக்கியமாக குஜராத் வன்முறைகளை வெளிக்கொண்டு வந்ததில். ஆனால், அந்த ஒரு காரணத்திற்காக தருண் தேஜ்பால் இந்தப் பாலியல் அத்துமீறலை / வன்முறையைச் செய்திருக்க மாட்டார் எனக் கருதுவது தவறு. அவர் அச்சம்பவம் நடக்கும்போது ஊடகத் தலைவராக மட்டுமன்றி, ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் அதிபதியாக மாறியிருந்தார். புகார் கொடுத்திருந்த பெண் கொடுத்திருந்த தரவுகள், எழுதிய புகார்கள், ஹெச்ஆருக்கு எழுதியவை எல்லாவற்றையும் ஆய்வு செய்து, விசாரணை நடத்துவதே சரி என்றேன். அன்று மற்றொரு விருந்தினராக வந்த பிஜேபி பிரமுகர் கொஞ்சம் ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்தார். I said it is very important to compartmentalise issues.

ஏன் வாயைத் திறக்கவில்லை?

இன்றளவும் POSH சட்டம் பல்கலைக்கழகங்களில் நடைமுறைப்படுத்தப்பட உழைத்திருக்கும் என் பேராசிரியைத் தோழிகள் பாலியல் துன்புறுத்தலைச் சந்திக்கும் ஆராய்ச்சி மாணவிகளைப் பற்றி அத்தனை பிரச்சினைகளைச் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் முதல் தலைமுறைப் பட்டதாரிப் பெண்கள். அதில் நிறைய பேருக்கு பிஎச்டி முடித்து வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய சூழல். அவர்கள் வாயைத் திறக்கவில்லை.பேசியவர்களும் ரொம்பத் தாமதமாகத்தான் பேசினார்கள்.

ரொம்ப முக்கியமாக முற்போக்கு அரசியல் பேசுகிறவர்கள், பக்திமான்கள், சித்தர் என அழைக்கப்பட்டவர்கள், மத போதகர்கள் அனைவரும் செய்த பாலியல் வன்முறை / அத்துமீறல்கள் பற்றி என்னிடம் பகிர்ந்தவர்கள் உண்டு. முற்போக்கு அரசியலில் பாலின சமத்துவ அரசியலை ஒரு முக்கியக் கூறாகப் புரிந்துகொண்டவர் எத்தனை பேர்?

பெண் தொழிலாளர்கள், ஆயத்த ஆடைப் பணியாளர்களிடம் சில வேலைகள் செய்துகொண்டிருக்கிறேன். அவர்கள் கூலி உயர்வுக்கும்,தொழிலாளர் உரிமைக்கும் பேசும்போது பாலியல் வன்முறை குறித்தும், POSH சட்டப்படி Internal Complaints Committee செயல்படாதது பற்றியும் பேசுகிறார்கள். வருங்காலத்தில் இன்னும் அதிகமாகப் பேசுவார்கள்.

தமிழில் அறிவார்ந்த கட்டுரையாளர் ஒருவர் தொண்ணூறுகளில் ஆரம்பத்தில் ஒரு குழந்தையை வன்முறை செய்த செய்தி எங்களுக்குச் சொல்லப்பட்டது. அந்தப் பெண் இப்போது பெரியவர். மணமாகி, குழந்தை இருக்கிறது. அவர் இத்தனை வருட ஆத்திரத்தை இப்போது வெளியில் சொன்னால் என்ன ஆகும் என ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்தேன்.

இந்த POSH சட்டம் சரியாகச் செயல்படுத்தப்பட வேண்டும்.இச்சட்டத்தைப் பற்றி என் அலுவலகத்தில் ஒரு பயிற்சி ஏற்பாடு செய்திருந்தோம். அப்போது அச்சட்டத்தின் ஒரு கூறு விவாதிக்கப்பட்டது. அப்போது பயிற்றுநர் சொன்னார்: நேற்று வரை அவள் உங்கள் கேர்ள் ஃப்ரெண்டாக இருக்கலாம். இன்று இல்லையெனில் அவள் சம்மதம் இல்லாமல் நீங்கள் செய்யக்கூடிய எதுவும் தண்டனைக்குரியது. Consent is the decisive factor. இந்தச் சட்டத்தின்படி அனைத்துப் பாலாரும் புகார் அளிக்கலாம்.

எதுவும் இங்கு எளிது இல்லை

என் தோழி தகப்பனால் வன்முறைக்கு ஆளானவள். அதை வெளியே சொல்லவில்லை. நீங்கள் குறிப்பிடும் எழுத்தாளர் அனுராதா ரமணனும் 12 வருடங்களுக்குப் பின்தான் பேசினார்.

99.9 சதவிகிதப் பெண்கள் இப்பிரச்சினைகளை வெளியே பேசுவதே இல்லை. அதிகாரத்தை எதிர்ப்பதில், வெளியே சொல்வதால் சமூகத்தின் அபவாதத்தைத் தாங்குவது என எதுவும் இங்கு எளிது இல்லை.

நம்பிக்கைக்கும் நேசத்திற்கும் உரிய ஆண் உடன் பணியாளர்கள், நண்பர்கள் இல்லையா எனக் கேட்காதீர்கள். நிறைய இருக்கிறார்கள்!

- கீதா நாராயணன் (Geetha Narayanan)

என்றும் கேட்கலாம்

சென்ற நூற்றாண்டின் அறுபது, எழுபதுகளில் எங்கள் வீட்டில் உறவினர்கள், கிராமத்திலிருந்து வந்தவர்கள், வேலை தேடிவந்து இடமில்லாமல் தங்கிக்கொண்டிருப்பவர்கள் போன்றவர்கள் கூட்டம் எப்போதுமே இருக்கும். இவர்களால் வீட்டில் இருந்த இளம் பெண்களுக்குத்தான் அதிகத் தொல்லை. பாலியல் தொல்லை. எனக்குத் தெரிந்து பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டவர்கள் நெருங்கிய உறவினர்கள். சித்தப்பா, மாமா, அண்ணன் போன்ற முறையினர்கள். தொல்லையிலிருந்து தப்பிக்க பல வழிகளைப் பெண்கள் கையாண்டார்கள்.

*சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்

நிறைகாக்கும் காப்பே தலை*

என்ற குறளுக்கு உதாரணம் அன்றையப் பெண்கள். இங்கு நிறை என்பது உடல் சார்ந்தது மட்டும் அல்ல. தங்களுடைய இருப்பையும் அவர்கள் மிக அருமையாக, எந்தவித மிகையும் இல்லாமல் காத்துக்கொண்டிருந்தார்கள்.

ஆனால், உறவை அறுத்துக்கொண்டதில்லை. வெளியில் தெரிந்தால் பெண்ணுக்குத்தான் அவமானம் என்று பெரியவர்கள் நினைத்தார்கள். இது வாழ்க்கை கற்றுத்தரும் பாடம் என்று மற்றவர்கள் நினைத்தார்கள். மொத்தத்தில் பெண்களைப் பேசாமல் இரு என்று சொன்னார்கள். என்னைப் போன்ற இளைஞர்களை அடக்கினார்கள்.

இன்றுவரை யார் என்ன செய்தார்கள் என்பது பெண்களுக்கு நினைவிருக்கிறது. இப்போதுகூடப் பேசும்போது, தங்கள் பெண்களுக்கு, பேத்திகளுக்கு அறிவுரை சொல்லும்போது பழைய சம்பவங்களைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால் இன்றும் உறவுகள் நீடிக்கின்றன. அன்று தொல்லை கொடுத்தவர்கள் இன்று பெரும் கிழவர்கள் அல்லது உலகத்தை விட்டே சென்று விட்டவர்கள். மற்றபடி சொந்தங்களுக்காக உயிரையும் கொடுக்கப் பல தடவைகள் தயாராக இருந்தவர்கள். பல உதவிகளை மனமாறச் செய்தவர்கள்.

இன்றைய பெண்களின் சிந்தனை

தொல்லைகளுக்கு ஆளானவர்கள், 'வயது அப்படி மற்றபடி நல்லவர்கள்' என்று இன்றும் சொல்வார்கள். எங்கள் குடும்பத்து இன்றையப் பெண்கள் வேறுவிதமாகச் சிந்திக்கிறார்கள். 'மற்றபடி நீங்கள் நல்லவர். இதற்காகத்தான் செருப்பால் அடிக்கிறேன் என்று சொல்லி நீங்கள் அடித்திருக்கலாம்' என்று சொல்பவர்கள்.

அன்றுதான் கேட்டிருக்க வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை. என்றும் கேட்கலாம். அது பாதிக்கப்பட்ட பெண்களின் உரிமை.

- பி.அனந்த கிருஷ்ணன் (Ananthakrishnan Pakshirajan)

முகத்திரையைக் கிழிப்பதே முக்கியம்

METOO , இதிலும் இரண்டு பிரிவுகள் மாறி மாறி அடித்துக் கொண்டு, வழக்கம் போல குழப்படி, ரத்த விளார்கள், மண்டை உடைப்புகள்.

ஒரு குரூப்... இதெல்லாம் சாதாரணம்யா, அப்ப போய் எல்லாம் பண்ணிட்டு வந்துட்டு இப்ப கதை பேசுறாய்ங்க... பூரா நிர்மலா தேவிங்க சார்... எனக் காது குடைகிறது.

இன்னொரு குரூப். இந்த ஆணாதிக்க, அதிகாரவர்க்க பொறம்போக்குகளை வெட்ட வேண்டும், கனெக்‌ஷனை கட் பண்ண வேண்டும். நடு ரோட்டில் வைத்து அவனைக் குறிவைத்துச் சுட வேண்டும் எனக் கலவரத்தில் குதிக்கிறது.

METOOவைப் பொறுத்தவரை இது இரண்டுமே தேவையில்லாத ஆணிகள் #METOOவின் நோக்கம் முகத்திரையைக் கிழிப்பது. நான் ஒரு கனவான், ஜென்டில்மேன் என்று உலாவரும் வெள்ளுடை வேந்தர்களை இவன் இப்படித்தான்... லட்சணம் இதுதான்... என இச்சமூகத்திற்கு வெட்ட வெளிச்சம் போட்டு காட்டுவது... அது METOO மூலம் மிகச் சிறப்பாக நடந்தேறி வருகிறது.

பதின் வயதுக் குழப்பங்கள், உடலில், மனதில் ஏற்படும் மாற்றங்கள், அதீத ஆர்வம், அதிக பயம், எடுத்தார் கைப்பிள்ளை போல எவன் சொன்னாலும் மிரட்டினாலும் பணிந்துவிடும் மனது எனப் பல காரணிகள் இந்த அவலங்களை அப்போது சொல்ல முடியாததற்குக் காரணமாக இருந்தாலும், இதற்கு மிக முக்கியக் காரணம்...

சமூக வலைதளம் போல ஒரு மேடை அப்போது இல்லை. ஊடகங்களில் இருந்து ஊறுகாய் விற்கும் இடம் வரை அத்தனை இடங்களையும் வெள்ளுடை வேந்தன்கள் ஆக்கிரமித்திருந்ததால் இந்தக் கதைகள் மேடையேறவில்லை. இப்போது ஏறுகிறது.

என்ன பிரயோசனம் தெரியுமா?

சரி 20 வருஷங்கள், 30 வருஷங்கள் கழிச்சு சொல்லி என்னங்க பிரயோசனம் என்கிறீர்களா ? நீங்கள் இதைப் படித்துக்கொண்டிருக்கும் இந்த நிமிடம்கூட கிழக்குக் கடற்கரை சாலையின் ஏதாவதொரு பங்களா முன்போ, இல்லை பெசன்ட் நகர் அலுவலகம் முன்போ ஓர் இளம்பெண் பயமும் பதற்றுமுமாக ஆட்டோவில் இருந்து இறங்கி நின்றுகொண்டிருக்கலாம். வரச் சொன்னதுக்கு உள்ள போலாமா... உள்ள போனா என்னாவோம் எனப் பல்வேறு எண்ண அலைக்கழிப்புகளில் சிக்கிக் கை நடுக்கத்துடன் ரத்தம் வழிய நகம் கடித்திருக்கலாம்.

இப்போது வாட்ச்மேன் அவளைப் பார்த்திருப்பான். வாம்மா... அய்யா உனக்காக உள்ள காத்திருக்கார் என அவள் கையில் இருக்கும் மஞ்சள் பையை வாங்கி ஓர் ஓரம் வைத்துவிட்டு.. ஐயா ரொம்ப நல்லவருமா... சம்பளத்த கண்டிப்பா கொடுத்துருவாரு. இதெல்லாம் வெளிய யாருகிட்டயும் சொல்லாத... முக்கியமா உங்கம்மா கிட்ட சொல்லாத... கஷ்டப்படுவாங்க என இளகியிருக்கலாம்.

“எனக்கு அம்மா இல்லைண்ணே.. சின்ன வயசிலேயே...” என அந்தப் பெண் சொல்ல வந்ததை இடைமறித்து,

“அய்யா பாப்பா வந்துடுச்சு” என கதவை டொக்கி விட்டு அவன் நகர்ந்திருக்கலாம்.

அண்ட்ராயர் சகிதம் அதுவரை மதுவில் நீந்தியிருந்த வெள்ளைத் திமிங்கலம், முகநூலில் எதையோ பார்த்து முகம் வெளிறி,

“யோவ்... இருக்கிற பிரச்சனையில் நீ வேற... ஊர் பூரா ஊற வெச்சு அடிக்கிறாங்க... அது தெரியாம.. மொதல்ல அந்த புள்ளைய அனுப்பு” என தொந்தி நடுங்கப் பதறலாம்.

அத்தனை பெண் மான்களும் தாய் மான்கள்தான்

சிங்கங்களின் வேட்டையில் இருந்து தெய்வாதீனமாகத் தப்பிய மான்குட்டி பதறி, நடுநடுங்கி, பதற்றத்தில் குதித்தோடி, தன் கூட்டத்தில் முதலில் நிற்கும் பெண் மானை நோக்கி ஓடும். அதன் கால்களுக்கிடையில் சற்று நேரம் அமர்ந்த பிறகே... இது நம்ம அம்மா இல்லையே எனத் தெரிய வரும். ஆனால், அந்தக் குட்டி தன் கால்களுக்கிடையில் வந்து நின்றபோதே அது தன் குட்டி இல்லை எனப் பெண் மான் அறியும். ஆயினும் அந்தப் பெண் மான் நகராது அப்படியே நிற்கக் காரணம்…

குட்டிகளைப் பார்த்துக்கொள்வதில் கூட்டத்தில் இருக்கும் அத்தனை பெண் மான்களும் தாய் மான்கள்தான்.. குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதில் அத்தனை பெண்களும் தாய்மார்கள்தான்.

அதற்காயினும் #METOO தோலுரிப்புகள் தொடர வேண்டும்.

- ஹரிஹரசுதன் தங்கவேலு (Hariharasuthan Thangavelu)

நிதானமாகச் சிந்திக்க வேண்டிய நேரம்

தங்கள் சாதி ஆட்கள் தவறு செய்தால் அவர்கள் மீது பழிவராமல் பாதுகாப்பதுதான் பார்ப்பனர் இயல்பு. அதையும் உடைக்கிறார் சின்மயி.

இன்னும் யார் யார் மீது பாலியல் புகார்கள் சொல்லப்படுகின்றன என்று அவர் வெளியிட்டுள்ள பட்டியலில் இருக்கும். அனைவரும் கர்னாடக இசைத் துறையில் புகழ்பெற்ற பார்ப்பனர்கள். எனவே கவர்னரைக் காப்பாற்ற திசை திருப்பல் என்ற காரணம் எல்லாம் பொருந்தவில்லை தோழர்களே.

காலம் கடந்த குற்றச்சாட்டு என்பதால் மட்டுமே அது பொய் என்று சொல்லி விட முடியாது.

கொஞ்சம் நிதானமாகச் சிந்திக்க வேண்டிய நேரம்.

*- அருள்மொழி அண்ணாமலை (Annamalai Arulmozhi)

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon