மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 14 ஆக 2020

சிறப்புக் கட்டுரை: கோலப்பனின் தந்தையை எங்கே புதைத்தார்கள்?

சிறப்புக் கட்டுரை: கோலப்பனின் தந்தையை எங்கே புதைத்தார்கள்?

அரவிந்தன்

மனுசங்கடா படம் குறித்த பார்வை

தன் தந்தை இறந்த அடுத்த நாள் அவருக்குப் பால் ஊற்றுவதற்காக அவரைப் புதைத்த இடத்துக்குச் செல்லும் கோலப்பனால் தன் தந்தையைப் புதைத்த இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நான்கைந்து இடங்களில் சடலத்தைப் புதைத்த தடம் காணப்படுவதால் அவனால் எந்தக் குழியில் தன் தந்தை மீளாத் துயிலில் ஆழ்ந்திருக்கிறார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

தந்தையைப் புதைத்த அடுத்த நாளே அவரைப் புதைத்த இடம் மகனுக்கு எப்படி அடையாளம் தெரியாமல் போகும்? கோலப்பனுக்கு அப்படித்தான் ஆயிற்று. காரணம், அவன் தந்தையைப் புதைத்தது அவன் அல்ல. தன் அப்பாவைப் புதைக்கும்போது அவனால் அருகில் இருக்கக்கூட முடியவில்லை.

கோலப்பன் ஏன் தன் அப்பாவின் உயிரற்ற உடலைப் புதைக்க முடியவில்லை என்பதற்குப் பின்னால் இருக்கும் அதிர்ச்சிகரமான யதார்த்தத்தின் கூர்மையான பதிவுதான் ‘மனுசங்கடா’. எழுத்தாளரும் திரைப்பட இயக்குநருமான அம்ஷன் குமார் எழுதி, தயாரித்து, இயக்கியுள்ள இந்தப் படம், சமத்துவமற்ற நமது சமுதாயத்தின் அசிங்கமான முகத்தினைத் திரை விலக்கிக் காட்டுகிறது.

சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் கோலப்பன் நண்பர்களுடன் அறை எடுத்துத் தங்கியிருக்கிறான். ஒருநாள் அதிகாலையில் அப்பா இறந்துவிட்ட செய்தி வருகிறது. அடித்துப் பிடித்துக்கொண்டு தன் சொந்த ஊருக்குச் செல்கிறான். அவரை நல்லடக்கம் செய்வதற்கான வேலைகளில் அவனும் ஊரிலுள்ள அவன் நண்பர்களும் ஈடுபடுகிறார்கள். ஊருக்கு வெளியே வசிக்கும் இவர்களுடைய வீடுகளில் யாரேனும் இறந்தால் உடலைப் பொதுப் பாதை வழியே எடுத்துச் செல்ல முடியாது. பாதையற்ற பாதையாக இருக்கும் தனி வழியில் எடுத்துச் சென்று தனி இடத்தில் புதைக்க வேண்டும்.

இந்த முறை அதை மாற்ற வேண்டும் என்று கோலப்பனும் அவன் நண்பர்களும் முடிவு செய்கிறார்கள். அதற்காக அவர்கள் எடுக்கும் முயற்சி என்ன, கடைசியில் என்ன ஆனது என்பதுதான் ‘மனுசங்கடா’. தமிழகத்தில் நடந்த சம்பவம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

காவல் நிலையம், உள்ளூர் நிர்வாகம் ஆகியவை கைவிட்ட நிலையில் சென்னைக்குச் சென்று நீதிமன்றப் படியேறி, சட்டப்படி உத்தரவை வாங்கிக்கொண்டு வந்த பிறகும் கோலப்பனின் எண்ணம் ஈடேறவில்லை. சட்டம், அரசு அமைப்பு ஆகியவற்றையெல்லாம்விடக் கள யதார்த்தம் வலுவானது. அது பல நூற்றாண்டு காலமாகப் பாதுகாக்கப்பட்டு உருவேற்றப்பட்டுவரும் சாதியப் பெருமிதத்தையும் எண்ணிக்கை பலத்தையும் தன் அடித்தளமாகக் கொண்டது. நியாயமான உரிமைகளைக் கோருபவர்கள் உதிரிகள். அந்த உதிரிகளுக்காக அரசியல் சாசனம் கவலைப்படலாம். நீதிமன்றங்கள் கவலைப்படலாம். சில ஊடகங்களும் கவலைப்படலாம். ஆனால், சாதி அடுக்கில் கீழே இருக்கும் எண்ணிக்கை பலமற்ற அந்த உதிரிகளின் நியாயத்தை அரசு அமைப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளாது. பொதுச் சமூகம் கண்டுகொள்ளாது. நீதிமன்றமே சொன்னாலும் ஆதிக்கச் சாதியின் விருப்பத்தை அசைக்க முடியாது. இதுதான் நமது யதார்த்தம். எவ்வளவு அதிர்ச்சியாக இருந்தாலும், எவ்வளவு கசப்பாக இருந்தாலும் இதுதான் யதார்த்தம்.

கோஷங்களையோ, பொய்யான தீர்வுகளையோ, அசட்டுத்தனமான நாயக சாகசங்களையோ, இனிப்பு தடவிய நம்பிக்கைகளையோ முன்னிறுத்தி இந்த யதார்த்தத்தைச் சிறிதும் பூசிமெழுகாமல் காட்சிப்படுத்தியுள்ளார் அம்ஷன் குமார். பொய்யான தீர்வுகளை முன்வைத்து யதார்த்தத்தை எளிமைப்படுத்திக் காட்டுவது மோசமான யதார்த்தத்தைக் காட்டிலும் அபாயகரமானது. தமிழ் சினிமாவின் மரபணுவில் கலந்துவிட்ட இந்த அபாயத்தை அம்ஷன் குமார் முற்றாகத் தவிர்த்துவிட்டிருக்கிறார். தான் தேர்ந்துகொண்ட களத்துக்கும் பிரச்சினைக்கும் முழு நியாயம் செய்திருக்கிறார்.

கோலப்பனின் உறவினர்களும் நண்பர்களும் எடுக்கும் முயற்சி ஒவ்வொன்றும் தீர்வை நோக்கி எடுத்து வைக்கப்படும் சரியான அடி. காவல் துறை, வட்டாட்சியர் அலுவலகம், நீதிமன்றம் என அவர்கள் போகாத இடம் இல்லை. கோரிக்கை, வாக்குவாதம், மறியல், போராட்டம், தீக்குளிப்பு முயற்சி என்று செய்யாத முயற்சி இல்லை. இத்தனையும் சேர்ந்து அவர்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்திருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை. எல்லாவற்றையும் மீறி ஆதிக்கச் சாதியின் திமிரும் எண்ணிக்கை பலமும் அதிகாரப் பீடத்தின் அடாவடித் தந்திரங்களும் வெற்றி பெறுகின்றன. அப்படித்தான் வெற்றிபெறும், அதுதான் இன்றுவரையிலுமான யதார்த்தம் என்பதை உணர்த்தும் வகையில் தன் திரைக் கதையாடலை அமைத்திருக்கிறார் அம்ஷன் குமார்.

சில காட்சிகள் மனதில் அழுத்தமாகப் பதிகின்றன. காவல் துறையினர் பலவந்தமாகச் சடலத்தைக் கைப்பற்ற முனையும்போது கூட்டமாகச் சேர்ந்து உடலை வீட்டுக்குள் எடுத்துச்சென்று கதவைத் தாழிட்டுக்கொள்ளும் காட்சி அதில் ஒன்று. பொதுப் பாதைக்குள் கொண்டு செல்லப்படும் என்னும் உத்தரவாதம் கிடைக்கும்வரை அந்த மக்கள் போராடும் விதம் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அவர்களை வெளியே வரவழைக்கக் காவல் துறை செய்யும் தந்திரங்கள் அமைப்பின் குரூர புத்தியை அப்பட்டமாகக் காட்டுகின்றன. காவல் துறைக்கு மரியாதை கொடுத்துப் பேசிக்கொண்டிருக்கும் மக்கள் ஒருகட்டத்தில் மோதலுக்குத் தயாராகும் தருணமும் அப்போது ஒலிக்கும் பறையொலியும் பார்வையாளர்களுக்குள் பரபரப்பைப் பற்றவைக்கின்றன. தலையின் மண்ணெண்ணெயைக் கொட்டிக்கொண்டு உயிரை விடத் தயாராகும் மக்கள் பதைபதைக்க வைக்கிறார்கள். கோலப்பனின் அம்மாவின் கூக்குரல் நம் மனசாட்சியை உலுக்குகிறது.

இந்திய இறையாண்மையின் மதிப்பிற்குரிய சின்னங்களில் ஒன்றாகக் கம்பீரமாக நிற்கும் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெறும் காகிதமாக மாறுவது, தலித்துகளின் அவல நிலை எவ்வளவு தீவிரமானது, ஆதிக்கச் சாதியினரின் வன்மம் எவ்வளவு ஆழமானது என்பதை உணர்த்துகிறது. ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான ஊடகம் இந்த அநீதிக்கு நேரடி சாட்சியமாக நின்று இங்கு நடப்பவற்றையெல்லாம் வெளி உலகுக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறது. ஊடக வலிமை என்பதும் சாதி ஆணவத்தின் முன்பு கேலிக்கூத்தாகி விடுகிறது. நீதிமன்றம், ஊடகம் என எதுவுமே தாழ்த்தப்பட்ட மக்களின் அடிப்படை உரிமையை உறுதிசெய்ய, பெற்றுத்தர உதவவில்லை என்பதைப் படம் அழுத்தமாகப் பதிவு செய்கிறது. காவல் துறையின் குயுக்தியும் வலிமையும் சேர்ந்து சடலத்தைக் கைப்பற்றி அநாதைப் பிணம்போலப் புதைப்பதுதான் நடந்தேறுகிறது. அதுதான் இன்று சாத்தியம். அதுதான் நடக்கும். அதுதான் நடக்கிறது. அப்படி இல்லை என்று சொல்வது நிதர்சனத்தைப் பார்க்க மறுப்பதே ஆகும் என்பதை வலிமையாக உணர்த்துகிறது மனுசங்கடா படம்.

யதார்த்தத்தைச் சிதைக்காத சித்திரிப்புதான் இந்தப் படத்தின் கலாபூர்வமான வெற்றி.

நவீன நாடகங்களில் நடித்துவரும் ராஜீவ் ஆனந்த் கோலப்பனாக நடித்திருக்கிறார். கோலப்பனின் அம்மாவாக நடிக்கும் மணிமேகலை, கோலப்பனின் தோழர்களில் ஒருவராக நடித்துள்ள விதுர் ராஜன், கோலப்பனின் தோழியாக நடித்திருக்கும் ஷீலா ராஜ்குமார், உரிமைகளுக்காகப் போராடும் வழக்கறிஞராக நடிக்கும் கருணா பிரசாத் ஆகியோர் கதையை நன்கு உள்வாங்கித் தன் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பி.எஸ்.தரனின் ஒளிப்பதிவு சம்பவம் நடக்கும் இடத்தின் சூழலை அதன் சகலவிதமான தன்மைகளோடும் நம் கண்முன் நிறுத்துகிறது. ஆனந்த் ஷங்கரின் இசை பாத்திரங்களில் ஒன்றாக மாறி, படத்தோடு இரண்டறக் கலந்துவிட்டிருக்கிறது.

சுடுகாட்டைச் சமரசம் உலாவும் இடமாகக் கண்டு கவிஞர் மருதகாசி எழுதிய பாடல் படத்தின் முக்கியமான தருணத்தில் ஒலிக்கிறது. சுடுகாடு சமரசம் உலாவும் இடம்தான். ஆனால், சாதியைத் தவிர மற்ற எல்லாச் சமரசங்களும் அங்கு உண்டு என்பதே நிஜ நிலவரம் என்பதையும் படம் சொல்கிறது.

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகக் களம் இறங்கிப் போராடும் தலைவர்களைக் கட்டப் பஞ்சாயத்து செய்பவர்கள் என முத்திரை குத்தும் காவல் துறை, சட்டப்படி பல விஷயங்களைச் செய்ய அதிகாரம் இருந்தும் அசல் கட்டப் பஞ்சாயத்து மையமாகச் செயல்படுவதைப் போகிற போக்கில் காட்டுகிறது படம். தானே சவக் குழியில் விழுவதாகக் கோலப்பன் கனவு காணும் காட்சி வலுவாக உருப்பெற்றுள்ளது. மக்களின் நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து கோபமாகவும் ஆவேசமாகவும் உருமாறுவதும் இயல்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த ஆவேசம் நிராசையாக மாறும் கையறு நிலையின் புள்ளியில் படம் தன் பயணத்தை அமைதியாக முடித்துக்கொள்கிறது. அந்த அமைதியைக் கிழித்தபடி எழும் ‘மனுசங்கடா’ என்னும் குரல் பார்வையாளர்களின் செவிப்பறைகளில் நெடுநேரம் அதிர்ந்துகொண்டிருக்கிறது. மனசாட்சியில் அதன் எதிரொலி கேட்கிறது.

கேட்க வேண்டியவர்களின் காதுகளையும் மனங்களையும் இந்தக் குரலும் பாடல் சொல்லும் செய்தியும் எப்போது தொடும் என்னும் கேள்வி நம் முன் நிற்கிறது.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon