மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 அக் 2018

அதிக விலைக்கு நிலக்கரி கொள்முதலா?

அதிக விலைக்கு நிலக்கரி கொள்முதலா?

அதிக விலைக்குத் தனியாரிடம் நிலக்கரி கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவெடுத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதற்கு ஸ்டாலின், தினகரன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் நிலக்கரி இருப்பு குறைவாக உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமருக்குக் கடந்த மாதம் கடிதம் எழுதியிருந்தார். மத்திய அரசு நிலக்கரி கொடுக்காவிட்டால், தமிழகத்தில் மின்தடை ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். மேலும் நிலக்கரி வழங்க வலியுறுத்தி நிலக்கரி துறை அமைச்சர் பியூஸ் கோயலை, அமைச்சர் தங்கமணி நேரில் சந்தித்திருந்தார். இதற்கிடையே அதானி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடமிருந்து, அதிக விலை கொடுத்து ஒரு லட்சத்துப் பத்தாயிரம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவெடுத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்குக் கண்டனம் தெரிவித்து நேற்று (அக்டோபர் 11) அறிக்கை வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், “இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து அதானி என்டர்பிரைசஸ் இறக்குமதி செய்யும் நிலக்கரிக்கு டன்னுக்கு 5008.45 ரூபாயும், ஸ்ரீ ராயல் சீமா என்ற கம்பெனிக்கு டன்னுக்கு 4936.25 ரூபாயும், யாசின் இம்பெக்ஸ் இந்தியாவுக்கு டன்னுக்கு 5098 ரூபாயும் கொடுப்பதற்கு அதிமுக அரசு ஒப்புக்கொண்டு, டெண்டர் விட வேண்டும் என்ற விதிகளையும் தளர்த்தி கொள்முதலில் ஈடுபடுகிறது என்ற செய்தி இந்த அரசு உறக்கமின்றி ஊழல் செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறது என்பது தெளிவாக்கியுள்ளது. கோல் இந்தியாவிடமிருந்து ஒரு டன் நிலக்கரி 2000 ரூபாய்க்கு வாங்கும் நிலையில், அதிக விலை கொடுத்து அதானி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடமிருந்து நிலக்கரியை வாங்குவது அதிமுக அரசின் கையாலாகாத்தனமாகவும் கைலாகுத்தந்திரமாகவும் தெரிகிறது” என்று விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு டெண்டர் சட்ட விதிகளைத் தளர்த்தி, அதிக விலை கொடுத்து நிலக்கரியை வாங்க வேண்டிய நெருக்கடி ஏன் மின் பகிர்மானக் கழகத்திற்கு வந்தது என்ற சந்தேகத்தினை முன்வைத்துள்ள ஸ்டாலின், “அதானியின் கம்பெனிகள் ஏற்கனவே தமிழ்நாடு மின் வாரியத்திற்குத் தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டு அந்த நிறுவனங்கள் மீது மத்திய வருவாய் புலனாய்வுத் துறை விசாரணை நடக்கும்போது, மீண்டும் அதே நிறுவனத்திடமிருந்து நிலக்கரி வாங்குவது ஏன்? தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத் தலைவரும், அரசின் மின்துறைச் செயலாளரும் எப்படி டெண்டர் இல்லாமல் நிலக்கரி வாங்க ஒப்புக் கொண்டார்கள்” என அடுக்கடுக்காக கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.

டெண்டர் விதிகளைத் தளர்த்தி, முறைகேடுகள் மூலம் ஒரு லட்சத்துப் பத்தாயிரம் டன் நிலக்கரி வாங்குவதை அதிமுக அரசு உடனே கைவிட வேண்டும் என்றும் நிலக்கரி தேவை என்றால் வெளிப்படையான டெண்டர் மூலம் வாங்க வேண்டும் என்றும் தனது அறிக்கையில் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செப்டம்பர் 22ஆம் தேதியே தமிழ்நாட்டின் நிலக்கரி கையிருப்பானது வெறும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது எனச் செய்திகள் வெளிவந்தபோது அமைச்சர் தங்கமணி நிலக்கரி கையிருப்பு போதுமான அளவில் இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால், அதன் பின்னர் மத்திய அரசிடம் நிலக்கரி உடனடியாகத் தேவைப்படுகிறது என நேரிலேயே சென்று கேட்டும் வந்தார். இவ்வாறு முரண்பட்ட நடவடிக்கையில் இந்த அரசு ஈடுபட்டு வருவதோடு, தற்போது ஊழல் செய்வதற்காகவே இவ்வாறு சட்ட விலக்கு தந்து இக்கொள்முதல் தொடங்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு... என்னென்ன சிறப்பு?

5 நிமிட வாசிப்பு

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு... என்னென்ன சிறப்பு?

வருமான வரி தாக்கலுக்கு கால அவகாசம்!

2 நிமிட வாசிப்பு

வருமான வரி தாக்கலுக்கு கால அவகாசம்!

ஈமு கோழி மோசடி: மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

4 நிமிட வாசிப்பு

ஈமு கோழி மோசடி: மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

வெள்ளி 12 அக் 2018