மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 19 செப் 2020

செஞ்சி: திருடப்பட்ட சிலைகள் மீட்பு!

செஞ்சி: திருடப்பட்ட சிலைகள் மீட்பு!

செஞ்சி அருகே பழைமையான கோயிலொன்றில் திருட்டுப் போன ஐம்பொன் சிலைகளில் நான்கு சிலைகளை போலீசார் மீட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பெரும்புகை என்னும் கிராமத்தில், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த மல்லிநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் சந்திரன் என்பவர் பூசாரியாக உள்ளார்.

கடந்த செப்டம்பர் 16ஆம் தேதியன்று, இக்கோயிலில் இருந்த மல்லிநாத தீர்த்தங்கரர் சிலைகள், இரண்டு தர்நேந்திரர் சிலைகள் மற்றும் ஒரு நாகதேவதை சிலை என்று மொத்தம் ஐந்து ஐம்பொன் சிலைகள் திருட்டுப் போயிருந்தது. இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தடயங்களைச் சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், நேற்று (அக்டோபர் 11) விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை அருகே அத்தியூர் காட்டுப்பகுதியில் ஒரு சாக்குப் பை கிடந்தது கண்டறியப்பட்டது. இதுபற்றிப் போலீசாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. உடனே அங்கு விரைந்த போலீசார், சாக்குப் பையில் இருந்த மல்லிநாதர், பாசநாத தீர்த்தங்கரர் உள்ளிட்ட நான்கு ஐம்பொன் சிலைகளைக் கைப்பற்றினர். இந்தச் சிலைகள் பலகோடி ரூபாய் மதிப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த மாதம் மல்லிநாதர் கோயிலில் ஐந்து ஐம்பொன் சிலைகள் காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்ட நிலையில், மேலும் மூன்று சிலைகள் காணாமல் போனது தெரியவந்துள்ளது. மற்றொரு மல்லிநாதர் சிலை, தரணேந்திர யட்சன், பத்மாவதி யட்சி, ஜோலாமாலினி உள்ளிட்ட சிலைகளை விரைவில் கண்டுபிடித்து விடுவோம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon