மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 23 ஜன 2021

தூய்மையான கங்கை: போராடிய பேராசிரியர் மரணம்!

தூய்மையான கங்கை: போராடிய பேராசிரியர் மரணம்!வெற்றிநடை போடும் தமிழகம்

கங்கை நதியைச் சுத்தம் செய்யவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் வலியுறுத்தி, தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பேராசிரியர் ஜி.டி.அகர்வால் நேற்று உயிரிழந்தார்.

கான்பூரில் உள்ள தொழில்நுட்ப மையம் ஒன்றில் பேராசியராகப் பணிபுரிந்தவர் ஜி.டி.அகர்வால். கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது, தேசிய கங்கை நதி நீர் ஆணையம் மற்றும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலராகவும் பதவி வகித்தார். அதன்பின், இவர் சமூகச் செயற்பாட்டாளரானார். வடமாநிலங்களில் பல்வேறு பிரச்சினைகளுக்காகப் போராடி வந்தார். சமீபத்தில் ஆன்மிக ஈடுபாடுகளில் மூழ்கி, தனது பெயரை சுவாமி ஞானஸ்வரூப் சனந்த் என்று மாற்றிக்கொண்டார். 2009ஆம் ஆண்டு பாகீரதி நதியின் குறுக்கே அமைக்கத் திட்டமிடப்பட்ட மின் திட்டத்தை எதிர்த்து, இவர் 38 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். இவரது போராட்டத்தை அடுத்து, அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

கடந்த ஜூன் 22ஆம் தேதி முதல் உத்தராகண்ட்டில் உள்ள ஹரித்துவாரில் இவர் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். கங்கையைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்றும், நதியின் குறுக்கே இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும், அந்த நதியில் அமல்படுத்தப்படும் சுரங்கப் பணி மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களைக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தனது கோரிக்கைளைத் தெரிவித்து, ஹரித்வாரில் உள்ள மைத்ரி சதான் ஆசிரமத்தில் கடந்த 111 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்து வந்தார்.

இதனால் அவரது உடல் எடையில் சுமார் 20 கிலோ வரை குறைந்து, உடல் ரீதியான பிரச்சினைகள் ஏற்பட்டன. அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, ரிஷிகேஷில் உள்ள மருத்துவமனையொன்றில் அவர் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி, நேற்று (அக்டோபர் 11) அவர் உயிரிழந்தார்.

ஜி.டி.அகர்வாலின் மரணம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், கங்கை நதியைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் சமூக ஆர்வலர்கள்.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon