மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

சிறப்புக் கட்டுரை: விவசாயத் துறையில் பெண்களின் பங்கு!

சிறப்புக் கட்டுரை: விவசாயத் துறையில் பெண்களின் பங்கு!

2015-16ஆம் ஆண்டுக்கான வேளாண் கணக்கெடுப்பின் முதற்கட்ட அறிக்கை அக்டோபர் 1ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் இந்தியாவில் நிலம் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் வைத்திருக்கும் நிலத்தின் அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் சுருக்கத்தைக் காண்போம்.

2015-16ஆம் ஆண்டுக்கு முந்தைய ஐந்து ஆண்டுகளில் வேளாண்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பகுதிகள் 1.53 விழுக்காடு சரிவைக் கண்டிருப்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. 2010-11ஆம் ஆண்டில் 157.14 மில்லியன் ஹெக்டேரில் வேளாண்மை செய்யப்பட்டிருந்தது. ஆனால், வேளாண் நில உரிமையாளர்களின் எண்ணிக்கையும், வேளாண் துறையில் பெண்களின் பங்களிப்பும் இந்தக் காலகட்டத்தில் அதிகரித்தே உள்ளது.

2015-16ஆம் ஆண்டில் தோராய வேளாண் நிலத்தின் சரிவு 1.08 ஹெக்டேராக உள்ளது. இது 2010-11ஆம் ஆண்டில் 1.15 ஹெக்டேராக இருந்தது. 2010-11ஆம் ஆண்டில் பெண் நில உரிமையாளர்களின் எண்ணிக்கை 12.79 விழுக்காட்டிலிருந்து 13.87 விழுக்காடாக அதிகரித்துள்ளது. பெண்கள் வைத்திருக்கும் நிலத்தின் அளவு 10.36 விழுக்காட்டிலிருந்து 11.57 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

வேளாண் மேலாண்மைப் பணிகளிலும், வேளாண் நிலங்களிலும் வேலைபார்க்கும் பெண்களின் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்துள்ளது என்பதை 2015-16ஆம் ஆண்டுக்கான ஆய்வு காட்டுகிறது.

முதல் வேளாண் கணக்கெடுப்பு 1970-71ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அப்போது முதல் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. வேளாண் நிலங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. 2010-11ஆம் ஆண்டு வரையில் 9 கணக்கெடுப்புகள் வெளியாகியிருந்த நிலையில் தற்போது 10ஆவது கணக்கெடுப்பு விவரம் வெளியாகியுள்ளது.

ஒட்டுமொத்தமாக நிலம் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 2010-11ஆம் ஆண்டில் 13.8 கோடியாக மட்டுமே இருந்த நிலையில் 2015-16ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 14.6 கோடியாக அதிகரித்துள்ளது. இது 5.33 விழுக்காடு உயர்வாகும். முழுவதுமாக அல்லது பகுதியாக வேளாண்மைக்குப் பயன்படுத்தப்பட்டுள்ள எல்லா நிலங்களும் இந்த ஆய்வில் கணக்கில் கொள்ளப்படுகின்றன.

2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் சிறு குறு விவசாயிகளாகக் கருதப்படுகின்றனர். 2015-16ஆம் ஆண்டு கணக்குப்படி சிறு குறு விவசாயிகள்தான் 86.21 விழுக்காடு நிலங்களைக் கொண்டுள்ளனர். சிறு குறு விவசாயிகள் வைத்திருக்கும் நிலத்தின் அளவு 2010-11ஆம் ஆண்டில் 84.97 விழுக்காடாக மட்டுமே இருந்தது. தற்போதைய கணக்கெடுப்பின்படி இவர்களால் விவசாயம் மேற்கொள்ளப்படும் நிலத்தின் அளவு ஒட்டுமொத்த வேளாண் நிலப்பரப்பில் 47.34 விழுக்காடாக உள்ளது. 2010-11ஆம் ஆண்டில் இது 44.31 விழுக்காடாக இருந்தது.

அரை நடுத்தர மற்றும் நடுத்தர (2 முதல் 10 ஹெக்டேர்) நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் 2015-16ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 13.22 விழுக்காட்டினர் உள்ளனர். விவசாயம் மேற்கொள்ளப்படும் நிலத்தில் அரை நடுத்தர மற்றும் நடுத்தர விவசாயிகளின் பங்கு 43.61 விழுக்காடாக உள்ளது. பெரு நில உரிமையாளர்களின் (10 ஹெக்டேருக்கும் அதிகமாக நிலம் வைத்திருப்பவர்கள்) வெறும் 0.57 விழுக்காடு மட்டுமே உள்ளனர். நாட்டின் மொத்த விவசாய நிலத்தில் பெரு நில உரிமையாளர்களின் பங்களிப்பு 9.04 விழுக்காடாக உள்ளது. 2010-11ஆம் ஆண்டில் இவர்களின் பங்கு 0.71 விழுக்காடாகவும், இவர்கள் விவசாயம் மேற்கொண்ட நிலத்தின் அளவு 10.59 விழுக்காடாகவும் இருந்தது.

வேளாண் நிலங்களை அதிகமாக வைத்திருக்கும் மாநிலங்களின் பட்டியலில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 2.38 கோடி விவசாயிகள் நிலம் வைத்துள்ளனர். பீகாரில் 1.64 கோடி விவசாயிகளும், மகாராஷ்டிராவில் 1.47 கோடி விவசாயிகளும், மத்தியப் பிரதேசத்தில் 1 கோடி விவசாயிகளும், கர்நாடகாவில் 86.8 லட்சம் விவசாயிகளும், ஆந்திரப் பிரதேசத்தில் 85.2 லட்சம் விவசாயிகளும், தமிழ்நாட்டில் 79.4 லட்சம் விவசாயிகளும், ராஜஸ்தானில் 76.5 லட்சம் விவசாயிகளும், மேற்கு வங்கத்தில் 72.4 லட்சம் விவசாயிகளும் நிலம் வைத்துள்ளனர்.

ராஜஸ்தானில் அதிகபட்சமாக 20.87 மில்லியன் ஹெக்டேரில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. மகாராஷ்டிராவில் 19.88 மில்லியன் ஹெக்டேரிலும், உத்தரப் பிரதேசத்தில் 17.45 மில்லியன் ஹெக்டேரிலும், மத்தியப் பிரதேசத்தில் 15.67 மில்லியன் ஹெக்டேரிலும், கர்நாடகாவில் 11.72 மில்லியன் ஹெக்டேரிலும் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.

நிலம் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள மாநிலங்களில் மத்தியப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. மத்தியப் பிரதேசத்தில் 12.74 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் 11.85 விழுக்காடும், ராஜஸ்தானில் 11.12 விழுக்காடும், கேரளாவில் 11.02 விழுக்காடும், மேகாலயாவில் 10.9 விழுக்காடும், கர்நாடகாவில் 10.78 விழுக்காடும், நாகாலாந்தில் 10.5 விழுக்காடும் நிலம் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேசமயம் கோவாவில் 28.7 விழுக்காடும், மணிப்பூரில் 0.09 விழுக்காடும் நிலம் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

மேலும் ஆந்திரப் பிரதேசம், பிகார், சத்தீஸ்கர், குஜராத், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், கேரளா, ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில்தான் 91.03 விழுக்காடு நில உரிமையாளர்கள் உள்ளனர். இந்த மாநிலங்களில் வேளாண் பகுதி 88.08 விழுக்காடாக உள்ளது. வேளாண் பரப்பளவில் பல்வேறு மாநிலங்களில் இந்த ஐந்து ஆண்டுகளில் சரிவு ஏற்பட்டுள்ளது.

தனிநபர் நில உரிமையாளர்களின் எண்ணிக்கை 5.04 விழுக்காடும், கூட்டு உரிமையாளர்களின் எண்ணிக்கை 7.07 விழுக்காடும், நிறுவனங்களின் நில மதிப்பு 10.88 விழுக்காடும் அதிகரித்துள்ளது.

2015-16ஆம் ஆண்டுக்கான வேளாண் கணக்கெடுப்பின் முதற்கட்டத் தரவுகளின் அடிப்படையில் இந்திய வேளாண் நில உரிமையாளர்களின் எண்ணிக்கை குறித்தும், அவர்கள் வைத்திருக்கும் நிலங்களின் அளவு குறித்தும் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் உறுதி செய்த பிறகு விரிவான தரவுகள் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளன. இந்த விரிவான அறிக்கை விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொகுப்பு: பிரகாசு

நேற்றைய கட்டுரை: எங்கே செல்லும் இந்தப் பாதை?

மின்னஞ்சல் முகவரி: [email protected]

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon