மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

முதல்வருக்கு எதிரான வழக்கு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!

முதல்வருக்கு எதிரான வழக்கு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!

தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை மீது கடுமையான விமர்சனங்களை வைத்திருக்கும் சென்னை உயர் நீதிமன்றம், நெடுஞ்சாலை ஒப்பந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று, இன்று (அக்டோபர் 12) தீர்ப்பளித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு தமிழ்நாட்டு அரசியல் போக்கையே மாற்றி எழுதக் கூடிய தீர்ப்பாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

முதலில் புகார், பின் வழக்கு

திமுக அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார். அந்த புகாரில், தமிழகத்தின் பெரும்பாலான நெடுஞ்சாலைத்துறை கட்டுமான மற்றும் பராமரிப்புப் பணிகள், திட்டங்களில் முறைகேடு நடந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த திட்டங்களை முதல்வர் பழனிசாமியின் சம்பந்தி பி. சுப்பிரமணியம், உறவினர் நாகராஜன், செய்யாத்துரை, நண்பர் சேகர்ரெட்டி ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கும் வெங்கடாஜலபதி அண்ட் கோ, ஸ்ரீ பாலாஜி டோல்வேஸ் பிரைவேட் லிமிடெட், எஸ்.பி.கே. அண்ட் கோ நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக வழங்கியுள்ளதாகக் கூறினார் ஆர்.எஸ்.பாரதி.

மேலும், தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ரூ.4800 கோடி மதிப்பிலான டெண்டர்களை ஒதுக்கியதன் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பதவியையும், முதலமைச்சர் பதவியையும் தவறாகப் பயன்படுத்தி சட்டவிரோத ஆதாயம் அடைந்துள்ளதாக குற்றம் சாட்டினார். எனவே இதன் அடிப்படையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை 1988-ம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 13இன் கீழ் தண்டிக்க வேண்டும் என புகாரில் கோரிக்கை வைத்திருந்தார்.

இரண்டு மாதங்களாகியும் இந்தப் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஆகஸ்டு 23ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இது நீதிபதி ஜெகதீஷ் சந்திராவிடம் விசாரணைக்கு வந்தது.

வழக்கு விசாரணை!

இந்த வழக்கு விசாரணையின்போது லஞ்ச ஒழிப்புத் துறை இதுபற்றி ஆராயுமாறு உத்தரவிட்டார் நீதிபதி. இந்த புகாரில் முதல்வர் மீது வழக்குப் பதிய எந்த முகாந்திரமும் இல்லை என்று லஞ்ச ஒழிப்புத் துறை பதில் அளித்தது. அடுத்த கட்ட விசாரணையில் உலக வங்கி இதில் கண்காணித்ததா என்று கேள்விகளால் துளைத்தார் நீதிபதி. பின், இந்த வழக்கு விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை மேற்கொண்ட நடவடிக்கைகளை சீலிடப்பட்ட கவரில் வைத்து தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார் நீதிபதி. அதன்படியே நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு ,லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்தனர்

இந்த நிலையில் திமுக சார்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.அதில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்கவேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. அப்போது குறுக்கிட்ட அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன் லஞ்ச ஒழிப்புத்துறை ஆரம்பகட்ட விசாரணையில் முதலமைச்சர் மீதான புகாருக்கு எந்த ஒரு அடிப்படை முகாந்திரம் இல்லை என்றும் மேலும் ஒப்பந்தங்களில் எந்த ஒரு விதிமுறை மீறல் இல்லை என்றும் வாதிட்டார்.

திமுக தரப்பிலிருந்தோ, “லஞ்ச ஒழிப்பு துறை தாக்கல் செய்த அறிக்கைகளை பார்க்கும் போது விசாரணை நியாயமாக நடக்காது என்பது தெளிவாகத் தெரிவதால் இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என வலியுறுத்தப்பட்டது.

இதனையடுத்து நீதிபதி, லஞ்ச ஒழிப்பு துறையின் இயக்குனரை யார் நியமிப்பது? என கேள்வி எழுப்பினார். அதற்கு, “மூத்த கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியை அரசு நியமிக்கும்” என அரசு தலைமை வழக்கறிஞர் பதிலளித்தார். இதையடுத்து வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஜெகதீஷ் சந்திரா தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

இன்று தீர்ப்பு!

அக்டோபர் 9 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட இந்த வழக்கில் இன்று அக்டோபர் 12 தீர்ப்பளித்தார் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா.

லஞ்ச ஒழிப்புத் துறை ஆட்சியில் இருப்பவர்களின் கீழ் செயல்படும் துறை என்பதால் அது விசாரித்தால் நேர்மையாக இருக்காது என்பதால் சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதாக உத்தரவிட்டார் நீதிபதி.

மேலும், இந்த விசாரணையை சிபிஐயின் எஸ்.பி பதவியில் இருக்கும் அதிகாரி விசாரிக்க வேண்டும். இந்த விசாரணைக்காக ஆவணங்கள் அனைத்தையும் சிபிஐயிடம் லஞ்ச ஒழிப்புத் துறை ஒரு வாரத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதி, “சிபிஐ இந்த வழக்கில் 3 மாதத்தில் முதற்கட்ட விசாரணையை முடிக்க வேண்டும். நெடுஞ்சாலை துறை டெண்டர்களுக்கு உலக வங்கி நிதி வழங்கியது தொடர்பாக அதன் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டும், அதில் முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்” என்று உத்தரவிட்டார். உலக வங்கி உள்ளிட்ட அதிகாரிகளை விசாரிக்க வேண்டியிருப்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் நீதிபதி என்கிறார்கள் உயர் நீதிமன்ற வட்டாரத்தில்.

வெள்ளி, 12 அக் 2018

அடுத்ததுchevronRight icon