மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020

எந்த கட்சியும் பின்னால் இல்லை: சின்மயி

எந்த கட்சியும் பின்னால் இல்லை: சின்மயி

சின்மயி விவகாரத்தில் அவருக்கு பின்னால் அரசியல் கட்சிகள் இருப்பதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இன்று (அக்டோபர் 12) சின்மயி ஃபேஸ் புக் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ மூலம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

டிவிட்டர் மூலமாகவே புகார் கூறிவந்த சின்மயி இன்று தனது ஃபேஸ் புக் பக்கத்தில் லைவில் தோன்றினார். அப்போது அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார். சுவிட்சர்லாந்து சம்பவம் பற்றி ஏற்கெனவே அவர் கூறியிருந்த நிலையில் ஏன் அப்போது புகார் அளிக்கவில்லை என்ற காரணம் குறித்து பேசினார். “எனக்கு ஜெர்மன் மொழி தெரியும். சுவிட்சர்லாந்தில் சுரேஷ் ஜெர்மன் மொழியில் பேசிக்கொண்டிருக்கும் போது நான் கேட்டேன், தங்களது குழந்தையையே வைரமுத்து இருக்கும்போது தனியாக அனுப்பவேண்டாம் என சொல்லிக்கொண்டிருந்தார். அதற்கான காரணம் எனக்கு அப்போது தெரியவில்லை. அந்த நேரம் இணையம், ஸ்மார்ட்போன், என எந்த தொழில்நுட்பமும் இந்த அளவு வளர்ந்துவிடவில்லை. சேனல்களே நான்கைந்து தான் இருந்தது. வைரமுத்து இந்த மாதிரி செய்தார் என நான் சன் டிவியின் வாசலில் கோஷம் போட்டிருக்க வேண்டும் என்கிறீர்களா? இப்போதே என்னை நோக்கி இத்தனை கேள்விகளை கேட்கிறவர்கள் அந்த நேரம் திரையுலகை கடந்து அரசியல் செல்வாக்குள்ள அவர் மீது நான் குற்றம் சாட்டியிருந்தால் நம்பியிருப்பீர்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மீ டூ மூவ்மெண்ட் மூலம் இப்போது நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சின்மயி தெரிவித்துள்ளார். “2012ஆம் ஆண்டு டில்லியில் நடைபெற்ற நிர்பயா சம்பவத்தின் போதே அந்த பெண் என்ன உடை அணிந்திருந்தார், அந்த நேரத்தில் ஏன் தனியாக ஆண் நண்பருடன் சென்றார் என்ற கேள்விகளை தொடுத்த சமூகம் தானே இது. ஆனால் அந்த பிரச்சினைக்கு பின் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சமூகத்தின் பார்வை கொஞ்சம் மாறியிருக்கிறது. தற்போது ஆரோக்கியமான சூழல் உள்ளது.

இது பெண்களுக்கான பிரச்சினை மட்டுமல்ல, ஆண்களும் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுவர்களாக இருந்த போது பாதிக்கப்பட்ட ஆண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியில் சொல்லாமல் தவித்துவந்தவர்கள் தான் இன்று இஞ்சினியர்களாக டாக்டர்களாக உள்ளனர். பணிபுரியும் இடங்களில் என்றில்லாமல் வீட்டில் கூட தங்களது உறவினர்களால், பெற்றோர்களின் நம்பிக்கைக்கு உரியவர்களால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன” என்று இப்பிரச்சினையின் தீவிரம் குறித்துப் பேசினார்.

சின்மயி தற்போது இந்த பிரச்சினையை கையில் எடுத்துள்ளதற்குப் பின்னால் அரசியல் கட்சிகள் உள்ளதாக சமூகவலைதளங்களில் பேசப்பட்டுவருகின்றன. அதற்கு பதிலளிக்கும்விதமாக பேசிய அவர், “எனக்கு பின்னால் ஒரு அரசியல் கட்சி இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆதார் கட்டாயம் என்று சொன்னபோது அதை எதிர்த்து பல்வேறு ட்விட்டுகளை நான் போட்டுள்ளேன். பணமதிப்பழிப்பு நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்தேன். அதனால் எனக்குப் பின் அந்த கட்சி இருப்பதாகச் சொல்வதில் நியாயமில்லை” என்று கூறினார்.

பாடகர்கள் சந்திக்கும் மற்ற பிரச்சினைகள் குறித்து கூறிய அவர், “சங்கத்திலேயே குறிப்பிட்ட நிறுவனங்கள் ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சிகளில் பங்குபெறவேண்டாம் என சொல்வார்கள். ஏனெனில் பாடகர்கள் அனுபவிக்கும் கஷ்டங்கள் நிறைய உள்ளன. வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று பாஸ்போர்ட், டிக்கெட்டுகளை வைத்துக்கொள்வது, பணத்தை கொடுக்காதது, மிரட்டல் விடுப்பது என நிறைய உண்டு. அதை பாலியல் துன்புறுத்தலாகச் சொல்லவில்லை. ஆனால் இதுபோன்ற பல பிரச்சினைகள் எங்களுக்கு உண்டு” என்று தெரிவித்தார்.

இறுதியாக, “இந்த நேரத்திலும் பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளியாக்குவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இனிமேலும் ஏன் இத்தனை ஆண்டுகள் கழித்து சொல்கிறீர்கள் என கேட்காதீர்கள் இன்றையிலிருந்து இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து கூறினாலும் அதை காதுகொடுத்து கேட்கவேண்டியது சமூகத்தின் கடமை. பலரின் பிரச்சினைகள் வெளிவந்துகொண்டிருப்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். சமூகத்தில் பெரிய மாற்றங்கள் நடைபெற்றுவருகிறது. பாதிக்கப்பட்டவர்களைக் குற்றவாளியாக்காதீர்கள்.. நன்றி”என்று கூறியுள்ளார்.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon