மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 20 நவ 2019

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக்கு ஆபத்து?

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக்கு ஆபத்து?

மொபைலில் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். ஆன்லைனில் வந்த வாட்ஸ் அப்பில் இருந்து மெசேஜ் வந்து விழுந்தது.

“நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்துக்குப் போனது திமுக. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும், முகாந்திரம் இருந்தால் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்யலாம் என்றும் உத்தரவிட்டிருக்கிறது. இந்தத் தீர்ப்பு பற்றிய விரிவான விவரங்கள் மின்னம்பலத்தில் தனிச் செய்தியாக வருகிறது.

இந்தத் தீர்ப்பின் அரசியல் ரியாக்‌ஷனை நான் தருகிறேன். மிஞ்சிப் போனால் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ்தான் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு வரும் என எடப்பாடி தரப்பு பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் இருந்தது. ஆனால், இப்போது வழக்கை சிபிஐக்கு மாற்றியதால், அதிர்ச்சி ஆகியிருக்கிறார் எடப்பாடி. ‘ஏற்கெனவே நம்மை வெச்சு மத்திய அரசு ஆட்டம் காட்டிட்டு இருக்கு. இப்போ இந்த வழக்கை சி.பி.ஐக்கு மாத்திட்டாங்க. இனி அவங்க வைக்கிறதுதான் சட்டம்னு பேசுவாங்க. அவங்க சொல்றதை கேட்கலைன்னா குடைச்சல் கொடுப்பாங்க’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார்.

அதே நேரத்தில், பன்னீர் அணி செம சந்தோஷத்தில் இருக்கிறதாம். பன்னீர் என்னை வந்து சந்தித்தார் என்று தினகரன் பத்திரிகையாளர் சந்திப்பில் சொன்னதும், அதற்கு பன்னீர் விளக்கம் கொடுத்ததும் தெரிந்ததுதான். ஆனால், தினகரன் அப்படியான ஒரு புகாரை சொன்ன பிறகு உளவுத் துறை மூலமாக விசாரித்திருக்கிறார் எடப்பாடி. உளவுத் துறை கொடுத்த ரிப்போர்ட்டில், ‘தர்மயுத்தத்துக்குப் பிறகு ஓ.பி.எஸ். துணை முதல்வராக பொறுப்பேற்ற பிறகும் கூட, உங்களை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதற்காக சில விஷயங்களை தொடர்ந்து செய்திருக்கிறார். தினகரன் சொல்வது உண்மைதான்!’ என்று கொடுத்திருக்கிறார்கள். அதைப் பார்த்த பிறகு பன்னீர் மீதான கோபம் எடப்பாடிக்கு குறையவே இல்லையாம்.

இந்த நிலையில்தான் தன்னிலை விளக்கம் கொடுக்க, எடப்பாடியை சந்திக்க நேரம் கேட்டாராம் பன்னீர். ஆனால், எடப்பாடியோ, இதுவரை பன்னீரை சந்திக்க நேரம் ஒதுக்கவே இல்லையாம். இன்று எடப்பாடி வழக்கு சி.பி.ஐ.விசாரணைக்கு மாற்றப்பட்டது என்ற தகவல் பன்னீருக்கு சொல்லப்பட்டதும், ‘ஒரு சிக்கல் வந்தால் எப்படியெல்லாம் கஷ்டம் வரும்னு இப்போ அவருக்குப் புரியும்’ என்று அவரோடு இருந்த நிர்வாகிகள் சிலர் கமெண்ட் அடித்திருக்கிறார்கள். கூடவே எடப்பாடிக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடியை பன்னீர் தரப்பு பட்டாசு போடாத குறையாக கொண்டாடிக் கொண்டிருக்கிறது”என்று முடிந்தது அந்த மெசேஜ். அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக்.

தொடர்ந்து, போஸ்ட் ஒன்றும் போட்டது.

”எடப்பாடி மீதான வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியிருப்பது திமுகவினரைதான் அதிக சந்தோஷத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதே நாளில் புதிய தலைமைச் செயலகம் தொடர்பான வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதை விட திமுக தரப்புக்கு மகிழ்ச்சி கொடுத்திருப்பது எடப்பாடி மீதான தீர்ப்புதான். இதுபற்றி திமுகவினரிடம் ஆலோசித்த ஸ்டாலின், ‘இனி நமக்கு எல்லாமே வெற்றிதான். 18 எம்.எல்.ஏ.க்கள் தீர்ப்பும் சீக்கிரம் வந்துடும். அதையடுத்து ஆட்சிக்கு ஆபத்து வந்துடும். தொடர்ச்சியான சட்டப் போராட்டத்தின் மூலமாக இந்த ஆட்சியை வீழ்த்திடலாம். எடப்பாடி போலவே நாம் ஏற்கனவே வழக்கு போட்ட விஜயபாஸ்கர், தங்கமணி, வேலுமணி, டிஜிபி ராஜேந்திரன் என இந்த ஆட்சி சம்பந்தப்பட்டவங்க எல்லார் மீதான புகார் பத்தியும் மக்களிடம் விரிவாக எடுத்துச் சொல்லணும்’ என்று சொல்லிவிட்டு உடனே வழக்குத் தொடுத்தவர் என்ற முறையில் ஆலந்தூர் பாரதியை பிரஸ் மீட் வைக்கச் சொன்னார் ஸ்டாலின்.

இதேநேரம் திமுக சீனியர்கள் ஸ்டாலினிடம், ‘இது நமக்கு மிகப்பெரிய வெற்றி. எடப்பாடி வசமாக பொறியில் சிக்கியிருக்கிறார். இவரைப் போலவே மற்ற ஊழல் அமைச்சர்களையும் சிக்க வைக்கணும். ஆனா அதை திமுக மட்டும் செஞ்சா மக்களிடம் இந்த ஆட்சியைப் பத்திய அதிருப்தியை முழுசா கொண்டுபோய் சேர்க்க முடியாது. அதனால எல்லா கட்சிகளையும் இந்த ஆபரேஷனில் சேர்த்துக்குவோம். திமுக தலைமையில் கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்து எடப்பாடி அரசுக்கு எதிராக தொடர்ந்து பிரசார இயக்கத்தை நடத்துவோம்’என்று சொல்ல அதற்கு ஸ்டாலினும் ஒ.கே. சொல்லியிருக்கிறாராம். இதைத் தொடர்ந்து காவிரி பிரச்னை போல இந்த பிரச்னையிலும் எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி போராடத் தயாராகிறது திமுக” என்று முடிந்தது அந்த போஸ்ட்.

அதற்கு லைக் போட்டுவிட்டு ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப்.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon