மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 9 ஆக 2020

ஐடி ரெய்டு: அச்சுறுத்தலுக்கு ஆளாகும் ஊடகங்கள்!

ஐடி ரெய்டு: அச்சுறுத்தலுக்கு ஆளாகும் ஊடகங்கள்!

தி குவின்ட் மற்றும் தி நியூஸ் மினிட் இணையதள அலுவலங்களில் நடத்தப்பட்ட சோதனைகள், ஊடக அச்சுறுத்தல் பற்றிய கேள்விகளைப் பலமாக எழுப்பியுள்ளன. குறிப்பாக, குவின்ட் சிஇஓவின் செல்போனில் உள்ள விவரங்களைப் பிரதி எடுக்க முயற்சித்ததும், செல்போன்களைத் தருமாறு அந்நிறுவனத்தின் ஊழியர்களை வருமான வரித் துறை அதிகாரிகள் மிரட்டியதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், நொய்டாவில் தி குவின்ட் என்ற இணையதளத்தைத் தொடங்கினார் தொழிலதிபர் ராகவ் பாஹ். மத்திய மற்றும் பல்வேறு மாநில அரசுகளை தொடர்ச்சியாக விமர்சித்து வருகின்றன இதில் வெளியாகும் செய்திகள் மற்றும் கட்டுரைகள். இதேபோல, பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் தி நியூஸ் மினிட் இணைய செய்தித் தளத்திலும் குறிப்பிட்ட அளவில் பங்கு முதலீட்டு செய்துள்ளார் ராகவ்.

நேற்று (அக்டோபர் 11) காலையில் ராகவின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர் வருமான வரித் துறை அதிகாரிகள். அப்போது, வீட்டில் அவரது மனைவியும் தி குவின்ட் சிஇஒவும் ஆன ரிது கபூர் இருந்துள்ளார். இந்த தகவல் கிடைத்தவுடன், ராகவ் உடனடியாகப் பத்திரிகையாசிரியர்கள் சங்கத்துக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். வருமானம் தொடர்பான ஆவணங்கள் தவிர, பத்திரிகை தொடர்பான ஆவணங்களைச் சோதனையிடக் கூடாது என்று யாதவ் என்ற வருமான வரித் துறை அதிகாரியிடம் தெரிவித்ததாக, அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரி ஏய்ப்பு செய்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், ராகவின் அலுவலகங்கள் மற்றும் வீட்டில் இந்த சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிவித்தது வருமான வரித் துறை. நொய்டாவிலுள்ள தி குவின்ட் அலுவலகத்துக்கு, நேற்று காலை 8 மணியளவில் டொயோட்டா இனோவா வாகனங்களில் வந்தனர் வருமான வரித் துறை அதிகாரிகள். அப்பகுதியைச் சேர்ந்த போலீசாரும் உடன் இருந்தனர். அப்போது, தாங்கள் ஒரு சர்வே நடத்துவதாகவே அவர்கள் கூறியுள்ளனர். ஒரு மணி நேரம் கழித்து, வருமான வரிச் சட்டம் 132 பிரிவின் கீழ் வாரண்ட் வாங்கி வந்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

அந்நிறுவனத்தில் அதிக நேரம் இருப்பது யார், நிறுவனம் எவ்வளவு பெரியது, இங்கு எவ்வாறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன? இந்நிறுவனத்திற்கான முதலீடு எங்கிருந்து வருகிறது என்று ஆசிரியர் குழுவிடம் விசாரணை செய்துள்ளனர். நீங்கள் கேட்கும் கேள்விகள் சோதனையோடு தொடர்புடையதா என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதன்பிறகும், பத்திரிகை தகவல்கள் நிரம்பிய கம்ப்யூட்டர்களைச் சோதனை இட்டுள்ளனர். நேற்றிரவு, தங்களது கம்ப்யூட்டர்களில் இருந்து பத்திரிகை தொடர்பான தகவல்களை நகலெடுக்கக் கூடாது என்று வருமான வரித் துறை உயரதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினர் தி குவின்ட் ஊழியர்கள்.

நேற்று காலை 10 மணியளவில், பெங்களூருவிலுள்ள தி நியூஸ் மினிட் அலுவலகத்தில் 3 போலீசாரோடு 5 வருமான வரித் துறை அதிகாரிகள் வந்துள்ளனர். தி குவின்ட் இணையதளத்தை நடத்திவரும் குவின்டிலியன் மீடியா எனும் நிறுவனம், தி நியூஸ் மினிட் தளத்தின் பங்குகளை வாங்கியுள்ளது. தி குவின்ட் நிறுவனத்தில் சோதனை நடந்து வரும் நிலையில், முதலீட்டாளர்களில் ஒருவர் என்ற அடிப்படையில் இங்கும் சோதனை நடத்தியது வருமான வரித்துறை என்றிருக்கிறார் தி நியூஸ் மினிட் பத்திரிகையின் இணை நிறுவனரும் அதன் பொறுப்பாசிரியருமான தான்யா ராஜேந்திரன்.

முதலில் ஆன்லைனில் அப்டேட் செய்யக்கூடாது என்று வருமான வரித் துறை அதிகாரிகள் கேட்டதாகவும், அதன் பின்னர் தங்களது வேண்டுகோளின் பேரில் அதற்குச் சம்மதித்ததாகவும் கூறியுள்ளார். அதே நேரத்தில் பத்திரிகை தொடர்பான இமெயில்களையோ, தொலைபேசி அழைப்புகளையோ எந்தவிதத்திலும் அவர்கள் பாதிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

நேற்று நடத்தப்பட்ட சோதனைகளை ஊடகங்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகக் கருதுவதாகத் தெரிவித்துள்ளார் ராகவ் பாஹ். இதுபற்றி, பத்திரிகையாசிரியர்கள் சங்கத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார். சோதனையின்போது பத்திரிகை தொடர்பான ஆவணங்களைச் சோதனையிட்டதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளன இந்தியப் பத்திரிகையாசிரியர்கள் சங்கம், ஆம்னெஸ்டி மற்றும் பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக் குழு உள்ளிட்ட சில அமைப்புகள்.

தி பிரிண்ட் இணையதள நிறுவனரும் பத்திரிகையாசிரியர்கள் சங்கத் தலைவருமான சேகர் குப்தா, ஊடகங்களை அச்சுறுத்தும்விதமான இதுபோன்ற நடவடிக்கைகள் ஏன் நடக்கிறது என்று அரசு விளக்கமளிக்க வேண்டுமென்று தெரிவித்துள்ளார்.

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், வருமான வரித் துறை நடத்திய சோதனையானது ஊடகங்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் என்பதில் எந்தவிதச் சந்தேகமுமில்லை என்று கூறியுள்ளார். சமீபகாலமாக, ராகவ் பாஹ் மற்றும் அவரது நிறுவனங்கள் அரசுக்கு எதிரான விமர்சனங்களைத் தொடர்ச்சியாக முன்வைப்பதே இதற்குக் காரணம் என்று தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டிப்பதாகக் கூறியுள்ளார் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி.

நேற்று மாலை இந்தியப் பத்திரிகையாசிரியர்கள் சங்கம் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. “புகார்களின் அடிப்படையில், குறிப்பிட்ட சட்ட வரையறைகளுக்குட்பட்டு வருமான வரித்துறையானது சோதனை நடத்தலாம்; அந்த அதிகாரமானது, அரசை விமர்சிப்பதனால் உண்டான அச்சுறுத்தலாக இருக்கக்கூடாது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, இந்த நடவடிக்கையானது பத்திரிகைச் சுதந்திரத்தின் மீதான நேரடித் தாக்குதல் என்று வர்ணித்துள்ளது பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக் குழு. ரிது கபூரின் செல்போனில் இருந்த பத்திரிகை தொடர்பான தகவல்களை நகலெடுத்ததற்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.

தி இந்து நாளிதழில் இந்த சோதனை தொடர்பாக வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்த கருத்து வெளியாகியுள்ளது. அதில் ராகவ் பாஹ், கமல் லால்வானி, அனூப் ஜெயின் மற்றூம் அபிமன்யூ சதுர்வேதி ஆகிய நான்கு தொழிலதிபர்கள் வருமான வரிச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தை விற்றதனால் கிடைத்த தொகையின் மூலமாக, சுமார் 100 கோடி ரூபாய் வரை வருமான வரி ஏய்ப்பு நடத்தப்பட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது. மற்ற மூவரும், அந்த நிறுவனம் விற்கப்பட்டதில் பங்கு பெற்றுள்ளனர். இதனால், நால்வரையும் ஒரே நேரத்தில் சோதனைக்கு உட்படுத்தியுள்ளோம்” என்று வருமான வரித் துறையினர் விளக்கம் தெரிவித்துள்ளனர்.

தி குவின்ட் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையானது, இன்று காலை 6 மணி வரை தொடர்ந்தது. 22 மணி நேரம் நடந்த இந்த சோதனையில், ராகவுக்குச் சொந்தமான கம்ப்யூட்டரில் இருந்து வருமான வரித் துறையில் இருந்து எந்த தகவலையும் பெற முடியவில்லை என்று கூறியுள்ளார் குவிண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த பூனம் அகர்வால்.

மூலம்: ஸ்க்ரோல்

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon