மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 11 ஜூலை 2020

குவின்ட் அலுவலகத்தில் ரெய்டு: வலுக்கும் கண்டனம்!

குவின்ட் அலுவலகத்தில் ரெய்டு: வலுக்கும் கண்டனம்!

தி குவின்ட் ஊடகத்தின் அலுவலகம் மற்றும் அதன் உரிமையாளர் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித் துறை சோதனைக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் தி குவின்ட் இணைய செய்தி தளத்தின் அலுவலகமான குவின்டில்லியன் மீடியா பிரைவேட் லிமிடெட் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளராக மீடியா சார்ந்த தொழிலதிபரான ராகவ் பாஹ்ல் உள்ளார். இந்நிலையில், குவின்டில்லியன் மீடியா பிரைவேட் லிமிடேட் அலுவலகம், தி குவின்ட் செய்தி தளத்தின் ஆசிரியர் ராகவ் பாஹ்ல், குவின்டில்லியன் மீடியா பங்குதாரராக உள்ள தி நியூஸ் மினிட் இணைய செய்தி தளம் அமைந்துள்ள இடம் ஆகிய இடங்களில் வருமான வரித் துறையினர் இன்று (அக்டோபர் 11) சோதனை நடத்தியுள்ளனர்.

நொய்டாவில் உள்ள குவின்டில்லியன் மீடியா அலுவலகத்தில் முதலில் ஆய்வு நடத்துவதாக தெரிவித்த வருமான வரித் துறை அதிகாரிகள் பின்னர் ஒரு தளத்தில் சோதனை நடத்துவதாக விளக்கமளித்துள்ளது.

இந்த சோதனை தொடர்பாக இந்திய பத்திரிகையாசிரியர்கள் சங்கத்திற்கு கடிதம் எழுதியிருந்த ராகவ் பாஹ்ல், செய்தி தொடர்பான தங்களது ஆவணங்களை எதையும் வருமான வரித் துறையினர் மாதிரி எடுக்கக்கூடாது என வருமான வரித் துறை அதிகாரியிடம் பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே இந்த சோதனைக்கு இந்திய பத்திரிகையாசிரியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில், “ தி குவின்ட் நிறுவனம் மற்றும் அதன் நிறுவனர் ராகவ் பாஹ்ல் இல்லத்தில் வருமான வரித் துறை நடத்தும் சோதனைக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்திய பத்திரிகையாசிரியர்கள் சங்கத்தின் நிர்வாக குழுவின் உறுப்பினராகவும் ராகவ் உள்ளார். தாங்கள் வருமான வரித் துறைக்கு இணக்கமாக நடந்து வருவதாகவும் இது தொடர்பான அனைத்து நிதி ஆவணங்களையும் சமர்ப்பிக்கத் தயாராக இருப்பதாகவும் ராகவ் கூறியுள்ளார்.

நோக்கமுடைய வருமான வரித் துறை சோதனைகளும் ஆய்வுகளும் ஊடக சுதந்திரத்தை பாதிக்கும் என நாங்கள் நம்புகிறோம். எனவே, அதுபோன்ற முயற்சிகளை அரசு தவிர்க்க வேண்டும்” என்று கூறியுள்ளது.

டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “அவர்கள்(பாஜக அரசு) சோதனை நடத்துவார்கள், தொந்தரவு செய்வார்கள், தாக்குதல் மற்றும் அடக்குமுறையைப் பின்பற்றுவார்கள். அதுதான் அவர்களின் கொள்கை. அரசாங்கம் ஊடகங்களை நசுக்க முயற்சிக்கிறது” என்று குறிப்பிட்டார்.

வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தனது ட்விட்டர் பக்கத்தில், “அரசாங்கத்தை விமர்சித்ததாலேயே தி குவின்ட் மற்றும் ராகவ் பாஹ்ல் வருமான வரிச் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்பதில் சந்தேகம் இல்லை. ஊடகங்களை அச்சுறுத்தவும் இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது. வருமான வரித் துறை, அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ. ஆகியவை இந்த ஆட்சியில் பயன்படுத்தப்பட்டது போன்று எந்த ஆட்சியிலும் தவறாக பயன்படுத்தப்பட்டதில்லை” என்று பதிவிட்டுள்ளார்.

பல்வேறு ஊடகவியலாளர்கள் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon