மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 11 ஜூலை 2020

சின்மயி அடுத்து என்ன சொல்லப்போகிறார்?

சின்மயி அடுத்து என்ன சொல்லப்போகிறார்?

வைரமுத்து மீதான பாலியல் புகார் என சுருங்கிவிடாமல், இந்திய அளவில் இயங்கும் அத்தனைத் துறைகளிலும் பெயர்பெற்ற பிரபலங்களைப் பற்றியும் தொடர்ந்து பாலியல் புகார்கள் வெளியானபடி இருக்கின்றன.

மற்ற விவகாரங்களில் குற்றம் சாட்டப்படுபவர் அல்லது பாதிக்கப்பட்டவரின் பெயர் சொல்லப்படாமல் இருக்கும்போது இரு தரப்பிலிருந்து அடுத்தகட்ட ரியாக்‌ஷன் கிடைப்பதில்லை. ஆனால், சின்மயி வெளியிட்ட அவர் தரப்பு வாதத்துக்கு வைரமுத்துவும் பதிலளித்துவிட்டதால், தற்போது அடுத்தகட்ட சாட்சியங்களாகக் கருதப்படுபவர்கள் ஒவ்வொருவராக வெளியே வந்து வைரமுத்துவுக்கு ஆதரவான தங்களது குரலை வெளிப்படுத்துகின்றனர்.

சுவிட்சர்லாந்து பயணத்தின்போது, சுரேஷ் என்பவரின் மூலமாக வைரமுத்து சின்மயியை ஹோட்டல் ரூமுக்கு அழைத்ததையும், அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டு சின்மயியும் அவரது தாயும் இந்தியாவுக்குக் கிளம்பி வந்ததையும் ஏற்கனவே கூறியிருந்தார் சின்மயி. அதில், தனது பெயர் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறும் சுரேஷ் “வைரமுத்து குறித்து தவறான தகவல் பரப்புவதை சின்மயி உடனே நிறுத்தவேண்டும். அந்த நிகழ்ச்சி முடிந்தபிறகு, நான் என் மனைவி, சின்மயி மற்றும் அவரது தாயார் ஆகிய நால்வரும் என் வீட்டிற்குச் சென்றுவிட்டோம். நிகழ்ச்சி முடிந்த அடுத்த நாள் அடுத்தநாள் காலை வைரமுத்து சென்னைக்குத் திரும்பிவிட்டார். இதில், சின்மயி சொல்லும் சம்பவங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்பே இல்லையே’ என தொலைக்காட்சி ஊடகங்களுக்கு சுரேஷ் கொடுத்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

வைரமுத்து மீதான குற்றசாட்டுகளுக்கு எதிராக சுரேஷின் பதில் இருந்ததால், சின்மயிக்கு மக்களிடமிருந்தும், திரையுலகினரிடமிருந்தும் கிடைத்த ஆதரவில் தேக்கம் ஏற்பட்டது. இந்தச் சூழலை தெளிவாக விளக்கவேண்டிய அவசியம் சின்மயிக்கு இருந்ததால், ஒரு ட்விட்டர் த்ரெட் மூலமாக பேசினார் சின்மயி.

“ஆமாம், நாங்கள் சுரேஷ் வீட்டில் தான் தங்கினோம். நாங்கள் மட்டுமல்ல, அங்கு பாடுவதற்காக வந்திருந்த மாணிக்க விநாயகம் அவர்களும் அங்கே தான் தங்கினார். ஆனால், நிகழ்ச்சி முடிந்தபிறகு அவர்களுக்கெல்லாம் இந்தியா செல்வதற்கான டிக்கெட் வழங்கப்பட்டது. ஆனால், நான் மட்டும் வைரமுத்து தங்கியிருந்த ஹோட்டலுக்கு செல்ல நிர்பந்திக்கப்பட்டோம். வேறு சில வேலைகள் இருப்பதால், என்னால் உங்களது பயண ஏற்பாடுகளை கவனிக்கமுடியாது என்று சொல்லி, வேறொருவரிடம் எங்களது பயண ஏற்பாடுகள் பற்றிய பொறுப்பை ஒப்படைக்கப்போவதாகக் கூறினார். இப்படி செய்தால் தூதரகத்தில் அவரைப்பற்றி புகார் சொல்வோம் என என் அம்மா மிரட்டினார்” என்று சுரேஷ் பேசியவை குறித்த தனது விளக்கங்களை சின்மயி வெளியிட்டுள்ளார்.

வைரமுத்துவுக்கு ஆதரவாக பேசியதோடு மட்டுமல்லாமல், சின்மயி பேசியவை பொய் என்று நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் விரைவில் வெளியில் வரும் என சுவிட்சர்லாந்திலிருந்து பேசிய சுரேஷ் குறிப்பிட்டிருப்பதால், இப்போதைக்கு அமைதியாக இருத்தலே நலம் எனும் வகையில் சின்மயி பக்கம் ஒலித்த ஆதரவுக்குரல்கள் கொஞ்சம் குறைந்திருக்கின்றன.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon