மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 11 ஜூலை 2020

கருணாஸ் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு!

கருணாஸ் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு!

கருணாஸ் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்புத் தெரிவித்துள்ளது.

2017ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் நெல்கட்டும்செவல் கிராமத்தில் உள்ள பூலித்தேவன் நினைவிடத்தில், அவரது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பல்வேறு தரப்பினரும் மாலை அணிவிக்க வந்தனர். அப்போது வாகனங்கள் நிறுத்துவது குறித்த மோதலில், தமிழ்நாடு தேவர் பேரவையின் மாநிலத் தலைவர் முத்தையாவின் வாகனம் அடித்து நொறுக்கப்பட்டது.

எம்எல்ஏவும், நடிகருமான கருணாசும், அவரது ஆதரவாளர்களும்தான் தாக்குதலில் ஈடுபட்டதாக, முத்தையாவின் சார்பில் புளியங்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த வழக்கில் தன்னை போலீசார் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி, கருணாஸ் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கருணாசுக்கு கடந்த 9ஆம் தேதி முன்ஜாமீன் வழங்கியது.

இதற்கிடையே கருணாஸ் வழக்கை ரத்து செய்ய கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், சம்பவம் நடந்தபோது தான் அந்த இடத்தில் இல்லை என்றும், இந்த வழக்கில் நீதிமன்றம் தனக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ளதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இந்த மனு இன்று (அக்டோபர் 11) நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை ரத்து செய்ய மறுப்புத் தெரிவித்த நீதிபதி வழக்குத் தொடர்பாக காவல்துறையினர் இரண்டு மாதங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.

இதற்கிடையே நெஞ்சுவலி காரணமாக கடந்த 3ஆம் தேதி வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த கருணாஸ், சிகிச்சை முடிந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

சமீபத்தில் சாதி குறித்து பேசியதாக 2 வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவர் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon