மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 16 ஜூலை 2020

கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் : தினகரன்

கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் : தினகரன்

ஜனநாயகம் காக்கப்பட கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் புதியதாக ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்குக் கிணறுகள் தோண்ட மாநில அரசு அனுமதி அளிக்காது என்று தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்திருந்தார். ஆனால் தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்களைப் பதிக்கும் திட்டங்களை நிறைவேற்றும் முன்பு பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்ற விதியிலிருந்து விலக்கு அளிக்குமாறு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனிடம், கருப்பணன் கோரிக்கை வைத்ததாகத் தகவல் வெளியானது.

இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக டிடிவி தினகரன் இன்று (அக்டோபர் 11) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் நடைபெறுவது மக்கள் விரோத அரசு என்பதை ஒவ்வொரு நொடியும் நிரூபிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசின் மற்றொரு பாதக செயல்தான், மக்களின் கருத்து கேட்காமலேயே ஹைட்ரோ கார்பன் திட்டம் உட்பட பல்வேறு முக்கிய திட்டங்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய சுற்றுச் சூழல்துறை அமைச்சரிடம், தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் கொடுத்திருக்கும் கோரிக்கை மனு எடுத்துரைக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

“மக்களின் கருத்துக்கேட்பு கூட்டங்களால், ஏற்படும் காலதாமதத்தால், முதலீட்டாளர்கள் நஷ்டப்படுகிறார்கள் என்று கூறுவது இந்த அரசு யாருக்காக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாக காட்டுகிறது. மக்களின் கருத்துக்கேட்பு என்பது முக்கிய திட்டங்களுக்கு அவசியமானது என்று சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கை 2006 எடுத்துரைக்கிறது. மேலும் இந்திய அரசியலமைப்பு சட்டமும் வழிவகை செய்துள்ள போதிலும், அதை மறுக்கும் இந்த அரசின் நடவடிக்கைகள் மக்கள் விரோதமானது மட்டுமல்ல சட்ட விரோதமானதும் கூட” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

“மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் தமிழகத்திற்குள் வர அனுமதிக்க மாட்டோம் என்று கூறிவரும் தமிழக அரசு, தற்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை விரிவுப்படுத்திடும் நோக்கத்தோடும், வேதாந்தா போன்ற தனியார் குழுமங்கள் தங்கு தடையின்றி தங்களது சொந்த லாபத்திற்காகத் தமிழகத்தில் வணிகம் செய்வதற்கு மத்திய அரசிடம் தமிழக அரசு இக்கோரிக்கையினை முன்வைத்துள்ளது, மக்கள் விரோத பழனிசாமி அரசின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது.

ஜனநாயகம் எல்லா நிலைகளிலும் காக்கப்பட, மக்களின் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும், மத்திய அரசின் முன் வைத்த இந்த மக்கள் விரோத வஞ்சக கோரிக்கையை பழனிசாமி அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்” எனவும் தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon