மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 11 ஜூலை 2020

1 மணி நேரத்தில் உத்தரவு: நீதிபதிகள் சாடல்!

1 மணி நேரத்தில் உத்தரவு: நீதிபதிகள் சாடல்!

மத்திய அரசுக்கு ஆவணங்களை அனுப்பாமல், சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி அரசாணை பிறப்பித்த தமிழக அரசின் நடவடிக்கைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிக்க ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையில் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவை அமைத்து, 2017ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் சிலைக்கடத்தல் சம்பந்தப்பட்ட வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு இன்று (அக்டோபர் 11) விசாரணைக்கு வந்தது. அப்போது, சிலைக்கடத்தல் வழக்கில் கைதான கூடுதல் ஆணையர் கவிதாவைப் பணியிடை நீக்கம் செய்தது நீதிமன்றக் கவனத்திற்கு உட்படுத்தப்பட்டது. இந்த அரசாணையைப் பிறப்பிக்க 3 மாதங்கள் ஆகியுள்ளதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், “சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றுவது தொடர்பாக மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. இது தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய ஆவணங்கள் முழுமையாகக் கிடைக்கப் பெறவில்லை” எனத் தெரிவித்தார். சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எந்த ஆவணங்களையும் மத்திய அரசுக்கு அனுப்பாமல் சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்ததற்கு அதிருப்தி தெரிவித்தனர் நீதிபதிகள்.

அரசுக்கு அவசியமென்றால் 1 மணி நேரத்தில் உத்தரவு பிறப்பிப்பதாகவும், இல்லையென்றால் ஒரு உத்தரவைப் பிறப்பிக்க 3 மாதங்கள் ஆவதாகவும் நீதிபதிகள் சாடினர். இதையடுத்து, சிலைக்கடத்தல் தொடர்பான ஆவணங்களை இன்றே மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதாகத் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விசாரணையின் முடிவில், இவ்வழக்கை வரும் அக்டோபர் 25ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon