மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 11 ஜூலை 2020

ஓபிஎஸ் அதிமுக உறுப்பினர் இல்லை: சசிகலா தரப்பு!

ஓபிஎஸ் அதிமுக உறுப்பினர் இல்லை: சசிகலா தரப்பு!

“அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு அடிப்படை உறுப்பினர்கள் மூலம் உடனே தேர்தல் நடத்த வேண்டும்” என்று சசிகலா தரப்பிலிருந்து தேர்தல் ஆணையத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுகவில் எடப்பாடி-பன்னீர் அணிகள் இணைந்த பிறகு நடைபெற்ற பொதுக் குழுவில் கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி, பொதுச் செயலாளர் பதவி ரத்து செய்யப்படுவதாகவும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி கொண்டு வரப்படுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையே அதிமுக கட்சி விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களை ரத்து செய்யக் கோரி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், இம்மனுவை 4 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டுமென தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பாக ஈபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் பதிலளிக்க வேண்டுமெனவும் தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக பழனிசாமி, பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து நேற்று அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த பதில்மனுவில், கே.சி.பழனிசாமி மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சசிகலா தரப்பிலிருந்து தலைமைத் தேர்தல் ஆணையத்தில் இன்று (அக்டோபர் 11) மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. 13 பக்கங்கள் கொண்ட அம்மனுவில், “அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு அடிப்படை உறுப்பினர்கள் மூலம் ஆணையத்தின் கண்காணிப்பில் உடனே தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும், அதிமுக கட்சி விதிகளில் செய்த மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்கக் கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், “அதிமுகவின் பொதுச் செயலாளர் மற்றும் மற்ற உட்கட்சிப் பதவிகளுக்கு விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என்று மனு அளித்துள்ளோம். கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி மதுசூதனன் நீக்கப்பட்டார். அதே மாதம் 14ஆம் தேதி பன்னீர்செல்வம், செம்மலை ஆகியோர் நீக்கப்பட்டனர். இதைத்தான் அவர்களும் தேர்தல் ஆணையத்தில் கூறியுள்ளனர். கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட ஒரு நபர், நீக்கப்பட்ட பிறகு மற்றொரு நபரை நீக்கம் செய்ய முடியாது” என்று தெரிவித்தார்.

மேலும் அவர், “பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலா நீக்கம் செய்யப்படவில்லை. தினகரன் நீக்கப்பட்டார் என்ற வாதமும் ஏற்புடையதல்ல. அப்படி எந்தவொரு ஆவணத்தையும் தேர்தல் ஆணையத்தில் அவர்கள் இதுவரை தாக்கல் செய்யவில்லை. நாங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள மனுவிலேயே சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளர் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறோம்” என்றும் கூறியுள்ளார்.

முன்னதாக சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா அதிமுகவின் உறுப்பினரே கிடையாது என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon