மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 4 ஜூலை 2020

வேணு சீனிவாசன் கைது தடை நீட்டிப்பு!

வேணு சீனிவாசன் கைது தடை நீட்டிப்பு!

சென்னை கபாலீஸ்வரர் கோயில் புதுப்பித்தல் பணியில் முறைகேடு நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், டிவிஎஸ் நிறுவனத் தலைவர் வேணு சீனிவாசனைக் கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில், சில ஆண்டுகளுக்கு முன்னர் புதுப்பித்தல் பணி நடைபெற்றது. அப்போது முறைகேடு நடந்தாகவும், அங்குள்ள சிலைகள் மாற்றப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இது குறித்து சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்பட்டிருப்பதால், முன்ஜாமீன் கோரி டிவிஎஸ் நிறுவனத் தலைவர் வேணு சீனிவாசன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு, வேணு சீனிவாசனைக் கைது செய்வதற்குத் தடை விதித்தது. இன்று (அக்டோபர் 11) மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, “இந்த வழக்கில் இந்து அறநிலையத் துறையிடம் சில ஆவணங்களைக் கேட்டோம். அதைத் தருவதில் காலதாமதம் ஏற்படுகிறது” என்று தெரிவித்தார் காவல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர்.

இந்த வழக்கில் இந்து அறநிலையத் துறையைச் சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள், மனுதாரர் வேணு சீனிவாசனைக் கைது செய்யக் கூடாது என்ற உத்தரவை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டனர். அதன்பின், இந்த வழக்கு விசாரணையை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon