மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஜூலை 2020

கட்டட ஆய்வு: கல்வித் துறைக்கு நோட்டீஸ்!

கட்டட ஆய்வு: கல்வித் துறைக்கு நோட்டீஸ்!

தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளின் கட்டட உறுதித்தன்மையை ஆய்வு செய்யக் கோரித் தொடரப்பட்ட வழக்கில், பள்ளிக்கல்வித் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

மதுரையைச் சேர்ந்த செந்தில்முருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட அரசுப் பள்ளிக் கட்டடங்கள் அதிகளவில் இருக்கின்றன. அவற்றில் பல கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளன என்றும், அவற்றின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய ஐஏஎஸ் அதிகாரி உதயச்சந்திரன் தலைமையில் குழு அமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும், அவரது மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை, இன்று (அக்டோபர் 11) நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஸ்குமார்ஆகியோர் முன்பு வந்தது. அப்போது, இது குறித்து விசாரிக்க ஏற்கனவே குழு அமைக்கப்பட்டுள்ளதென்று அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து, பள்ளிகள் ஆய்வு தொடர்பாகத் தமிழகப் பள்ளிக்கல்வித் துறை மற்றும் தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர் நீதிபதிகள். இந்த வழக்கு விசாரணையை, வரும் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon