மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 11 ஜூலை 2020

கருணைக் கொலை: மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு!

கருணைக் கொலை: மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு!

மூளை பாதிப்புக்குள்ளான 10 வயதுச் சிறுவனைக் கருணைக் கொலை செய்ய அனுமதிக்குமாறு தொடரப்பட்ட வழக்கில், அச்சிறுவனுக்கு உதவக்கூடிய திட்டங்கள் ஏதும் உள்ளதா என்பது குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் வரும் அக்டோபர் 23ஆம் தேதியன்று விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

வலிப்பு நோய் மற்றும் மூளை பாதிப்புக்கு உள்ளாகியுள்ள தனது 10 வயது மகனைக் கருணைக் கொலை செய்ய அனுமதிக்கக் கோரி, கடலூரைச் சேர்ந்த திருமேனி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.பாஸ்கரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, சிறுவனைப் பரிசோதனை செய்வதற்கான மருத்துவ நிபுணர்களை நியமித்து உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவின்படி, கடலூரில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார் திருமேனியின் மகன். அதன்பின், அந்த சிறுவனுக்குச் சென்னை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. மூன்று மருத்துவர்கள் கொண்ட நிபுணர் குழுவினர், இது குறித்து அறிக்கை தயார் செய்தனர். நிபுணர் குழு தாக்கல் செய்த அறிக்கையை படித்துப் பார்த்த நீதிபதிகள், சிறுவனைக் குணப்படுத்த முடியாது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டனர்.

நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.பாஸ்கரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, இன்று (அக்டோபர் 11) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறுவனைச் சிகிச்சை மூலம் தங்களால் குணப்படுத்த முடியும் என்று அரும்பாக்கத்தைச் சேர்ந்த அமோல் மறுவாழ்வு மையம், ஆரணி சித்த மருத்துவர் விஜய ஸ்ரீராம் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

இதைக் கேட்ட நீதிபதிகள், சிறுவனுக்கு உதவக்கூடிய திட்டங்கள் ஏதும் உள்ளதா என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் வரும் அக்டோபர் 23ஆம் தேதியன்று விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon