மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 11 ஜூலை 2020

சிறப்புக் கட்டுரை: அங்கீகரிக்கப்படாத வேலைகள், அளிக்கப்படாத ஊதியங்கள்!

சிறப்புக் கட்டுரை: அங்கீகரிக்கப்படாத வேலைகள், அளிக்கப்படாத ஊதியங்கள்!

ஜெயதி கோஷ்

இந்தியாவில் வேலைவாய்ப்பைப் பற்றிய விவாதங்களில் நிலவும் ஒரு சிக்கல் என்னவென்றால் வேலைவாய்ப்பையும் வேலையையும் போட்டுக் குழப்பிக்கொள்வது. வேலையின் எந்தப் பகுதிக்கு வருமானம் கிடைக்கிறதோ அந்தப் பகுதி மட்டுமே வேலைவாய்ப்பாகும். ஆனால், இந்தியாவில் பரந்த அளவிலான வேலை, ஊதியமற்ற வேலையாக உள்ளது. அது சமூக ரீதியாக அங்கீகரிக்கப்படும் வேலைகூட அல்ல. நாம் அதை அங்கீகரிப்போமேயானால் இந்திய வேலைவாய்ப்பைப் பற்றி விளக்கமளிக்க முடியாத போக்குகளாகத் தோன்றும் பல விஷயங்கள் எளிதில் புரிந்துகொள்ளக்கூடியவையாக மாறும்.

குறிப்பாகப் பெண்களுடைய வேலையைப் பொறுத்தவரை இது உண்மையாகும். உழைப்பாளர் சக்தியில் பெண்கள் பங்கெடுக்கும் விகிதங்கள் கணிசமாகக் குறைந்திருப்பது குறித்து தேசிய மாதிரி ஆய்வுகள் அலுவலகத்தின் (NSSO) அதிக மாதிரிகள் அடிப்படையில் கிடைத்த ஆதாரங்கள் பற்றி அதிக விவாதங்கள் நடைபெற்றுள்ளன.

15 மற்றும் அதற்கு அதிகமான வயதுடைய கிராமப்புறப் பெண்கள் வேலையில் பங்கெடுக்கும் விகிதம் 1999–2000இல் 35 விழுக்காடுகளாக இருந்ததிலிருந்து 2011–12இல் 23 விழுக்காடுகளாகக் குறைந்துள்ளது. அதே காலகட்டத்தில், நகர்ப்புறப் பெண்களுக்கான விகிதம் உண்மையில் மிகவும் குறைந்த விகிதமான 16.6%இல் இருந்து மாறவேயில்லை. இதற்குப் பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதிக எண்ணிக்கையில் இளம் பெண்கள் கல்வி கற்பதில் ஈடுபடுகின்றனர், அசல் ஊதியங்கள் விகிதம் அதிகரிப்பதால் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் கடின உடலுழைப்பைக் கோரும் குறைந்த ஊதிய வேலைகளைத் தவிர்க்கிறார்கள் என்று பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

கண்ணுக்குத் தெரியாத பெண் தொழிலாளர்கள்

ஊதியமற்ற வேலையையும் சேர்த்து கணக்கிலெடுத்தால், இந்தியாவில் உழைப்பாளர் மத்தியில் ஆண்களைவிடப் பெண்களின் பங்கு அதிகம்.

Source: NSSO

(தொழிலாளர்களாக அங்கீகரிக்கப்பட்டவர்கள்

அனைத்துத் தொழிலாளர்களும்

உழைப்பில் பங்கெடுக்கும் விகிதம்

ஆதாரம்: NSSO)

ஆனால், இந்த NSSO எண்ணிக்கைகள் அங்கீகரிக்கப்பட்ட வேலைவாய்ப்பு பற்றியது — அது முறைசாரா வேலைவாய்ப்பாகவும் சுய வேலைவாய்ப்பாகவும் இருந்தாலும்கூட. இதே NSSO ஆய்வு அறிக்கைகளில் "உழைப்பாளர் சக்தியில் இல்லாதவர்கள்" என்று விவரிக்கப்படும் சில வகையினங்களும் உள்ளன. இதில் கணக்கிலெடுக்க வேண்டிய வகையினங்கள் கோட் 92 (Code 92) (வீட்டு வேலைகளை மட்டும் கவனிப்பவர்கள்), கோட் 93 (வீட்டு வேலைகளைக் கவனிப்பவர்கள் மற்றும் காய்கறிகள், வேர்கள், சுள்ளிகள் / விறகுகள், கால்நடைத் தீனிகள் ஆகியவற்றைச் செலவின்றிச் சேகரிப்பது, நீர் நிரப்பிக்கொண்டு வருவது, தையல் வேலை, துணி தோய்ப்பது, நெய்வது போன்ற வேலைகளையும் சேர்த்து கவனிப்பவர்கள்) ஆகிய பிரிவுகளின் கீழ் வருபவர்கள்.

ஊதியமற்ற வேலைகள்

இந்த இரு வகைகளிலுமே ஊதியமற்ற வேலைகளில் ஈடுபடும் பெண்கள் ஏராளமாக உள்ளனர். கோட் 97 என்றும் ஒரு வகை உள்ளது. "இதரர்கள்" என்ற இந்தப் பிரிவில் பிச்சைக்காரர்கள், பாலியல் தொழிலாளர்கள் போன்றோர் அடங்குவர். இதில் ஒரு விசித்திரமான முறையின்மை உள்ளது. ஏனெனில் இந்த நடவடிக்கைகள் அனைத்திலுமே பணப் பரிவர்த்தனை அடங்கியுள்ளது. ஆனால், இவை வேலையாக வகைப்படுத்தப்படவில்லை. கோட் 92, 93 மற்றும் 97ஐக்கூட நாம் வேலையாக வரையறைக்கப்படுவதில் சேர்த்துக்கொண்டால் நமக்குக் கிடைக்கும் முடிவுகள் மிகவும் வேறுபட்டுள்ளன. இந்த இரு வகையினங்களையும் நாம் அங்கீகரிக்கப்பட்ட தொழிலாளர்கள் என்று அழைப்போம். 1999-2000க்குப் பிறகு இவை எவ்வாறு மாறியுள்ளன என்பதை மேற்கண்ட அட்டவணை காட்டுகிறது.

மூன்று விஷயங்கள் இதில் பட்டவர்த்தனமாகத் தெரிகின்றன.

1. உண்மையில் இந்தியாவில் ஆண்களைவிட பெண்கள் அதிகமாக வேலையில் பங்கெடுக்கின்றனர். 2011-12இல், மொத்த ஆண்கள் வேலையில் பங்கெடுக்கும் விகிதத்தோடு (79.8%) ஒப்பிடுகையில் மொத்தப் பெண்கள் வேலையில் பங்கெடுக்கும் விகிதம் அதிகம் (86.2%).

2. 15 வயதிலிருந்து 24 வயதுவரை உள்ள பெண்களில் அதிகம் பேர் கல்வி கற்பது, பெண்கள் வேலையில் பங்கெடுக்கும் விகிதம் குறைந்ததன் காரணம்.

3. இது மிகவும் முக்கியமான காரணம். பெண்கள் வேலையில் பங்கெடுக்கும் விகிதங்கள் குறைந்தது முற்றிலும் ஊதியத்துடன் கூடிய வேலையிலிருந்து ஊதியமற்ற வேலைக்கு மாறிச் சென்றதைப் பிரதிபலிக்கிறது. இந்தியாவில் பெரும்பாலான பெண்கள் "வேலை செய்வதில்லை" என்று பார்க்கும் வழமையான பார்வையிலிருந்து இது முற்றிலும் மாறுபட்ட சித்திரமாகும்.

அப்படியொரு மாற்றம் நிகழ்ந்தது ஏன்? அதிகரிப்பு கோட் 93 (வீட்டு வேலை மற்றும் அதையொட்டிய வேலைகள்) பிரிவிலேயே அதிகம் நிகழ்ந்துள்ளது. 1993–94 ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2011–12இல் இந்த வகையினத்தில் கிராமப்புறப் பெண்கள் விஷயத்தில் கிட்டத்தட்ட 8 சதவிகிதமும் நகர்ப்புறப் பெண்கள் விஷயத்தில் 2 சதவிகிதமும் அதிகரிப்பு உள்ளது. ஏழைப் பெண்கள் விஷயத்தில்தான் இது மிக அதிகமாகக் காணப்படுகிறது.

கண்டுகொள்ளப்படாத வேலைகள்

நுகர்வு செலவினத்தின்படி பார்த்தால் கீழேயுள்ள 40% குடும்பங்களில் இந்த அதிகரிப்பு கிராமப்புறங்களில் 13 விழுக்காடுகளாகவும் நகர்ப்புறங்களில் 5 விழுக்காடுகளாகவும் உள்ளது. ஊதியமற்ற வேலையில் ஈடுபடும் அத்தகைய பெண்களில் கணிசமான பகுதி (2011–12இல் 40% கிராமப்புறப் பெண்களும் 22% நகர்ப்புறப் பெண்களும்) பெரும்பாலும் வீட்டு உபயோகத்திற்காக நீர் நிரப்பிக்கொண்டு வரும் வேலையில் ஈடுபடுகின்றனர். இதற்காக ஆகும் நேரமும் முன்பைவிட அதிகரித்துள்ளது. ஏழைப் பெண்களில் பாதிக்கும் அதிகமானோர் இதைச் செய்ய வேண்டியுள்ளது. இயற்கை எரிபொருட்களையும் சேகரித்துக் கொண்டுவர வேண்டியுள்ளது (ஷைனி சக்ரபார்தி என்பவரின் "1993–94 க்கும் 2011–12 க்குமிடையே இந்தியத் தொழிலாளர் சந்தியில் நிலவிய பாலினரீதியான ஊதிய பாகுபாடு" என்ற தலைப்பில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட டாக்டர் பட்ட ஆய்வறிக்கையிலிருந்து எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள்).

அடிப்படை வசதிகள் இல்லாதிருப்பது ஊதியமற்ற வேலை அதிகரிப்பதற்கு ஒரு முக்கிய காரணம் என இது காட்டுகிறது. மற்றொரு NSSO ஆய்வு (2012இல் நடத்தப்பட்ட 69ஆவது சுற்று ஆய்வு) கிராமப்புறங்களில் நீர் கொண்டுவர டிரிப் ஒன்றுக்கு சராசரியாக இருபது நிமிடமாகிறது என்றும் நீர் கிடைக்கும் இடத்தில் மேற்கொண்டு 15 நிமிடம் காத்திருக்க வேண்டியுள்ளது என்றும் வீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய பல டிரிப்கள் தேவைப்படுகின்றன என்றும் கண்டறிந்தது.

நகர்ப்புறங்களில் நீர் கிடைக்கும் இடத்திற்குச் செல்வதற்கு 15 நிமிடங்களும் அங்கே காத்திருப்பதற்குச் சராசரியாக 16 நிமிடங்களும் ஆயின. எரிபொருளையும் கால்நடைகளுக்கான தீவனங்களையும் சேகரிப்பதில் பெண்கள் கணிசமான நேரத்தைச் செலவழித்தனர். வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள பெண்களுக்குச் சமையல் எரிவாயு அடுப்புக்கான முதல் சிலிண்டரை இலவசமாக வழங்கும் உஜ்வலா திட்டம் மேலோட்டமாகப் பார்த்தால் வெற்றியடைந்துள்ளது; இருப்பினும் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில் அது தோல்வியடைந்துள்ளது. காரணம், பல குடும்பங்களால் அதற்கு அடுத்த சிலிண்டர்களை வாங்க முடியவில்லை.

கூடுதலாக என்னவென்றால், ஊதியமற்ற இப்பெண் தொழிலாளர்களின் கிட்டத்தட்ட மூன்றில் இரு பங்கினர் குடும்பத்தில் இவ்வேலைகளைச் செய்ய வேறு எவரும் இல்லாததால் அவர்களே செய்ய வேண்டியுள்ளது. அவர்களுள் கணிசமான பெரும்பான்மையினர் ஊதியமுள்ள வேலை கிடைத்தால் ஏற்றுக்கொள்வோம் எனக் கூறினர்.

கவனித்துக்கொள்ளும் வேலைகள்

வீட்டு வேலைகளோடு சேர்த்துச் செய்ய வேண்டிய இந்த வேலைகள் மட்டுமின்றிக் கூடுதலாக "கவனித்துக்கொள்ளும் வேலை சார்ந்த பொருளாதாரம்" சம்பந்தப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளும் உள்ளன: குழந்தைகளையும் முதியவர்களையும் உடல்நலக் குறைவில் உள்ளவர்களையும் மாற்றுத் திறனாளிகளையும் கவனித்துக்கொள்வது போன்ற வேலைகளே அவை. குடும்பத்தில் இவையனைத்தும் பெரும்பாலும் பெண்களுடைய வேலைகளாகவே பார்க்கப்படுகின்றன. இந்த வேலைகள் வெளியே கொடுக்கப்பட்டு காசுக்காகச் செய்யப்பட்டால் அதைச் செய்பவர்கள் தொழிலாளர்களாகப் பார்க்கப்படுகின்றனர். குடும்பத்திலேயே உள்ள பெண்கள் இதைச் செய்தால் அத்தகைய பெண்கள் "உழைப்பாளர் சக்தியில் இல்லாதவர்களாக" வகைப்படுத்தப்படுகின்றனர்.

பெண்களாலேயே பெரும்பாலும் செய்யப்படும் வேலையின் கணிசமான பகுதிக்கு அங்கீகாரம் இல்லாமலிருப்பது பல முக்கிய பொருளாதார மற்றும் சமூக விளைவுகளையும் கொண்டுள்ளது. ஊதியமற்றதாகவும் ஊதியம் உள்ளதாகவும் உள்ள தொடர்ச்சியைக் கொண்ட பெண்களுடைய வேலை பெண்கள் மற்றும் அவர்கள் செய்யும் வேலை ஆகிய இரண்டின் மதிப்பையும் குறைத்துக் காட்டுகிறது. எனவே, பெண்கள் உழைப்பாளர் சந்தைக்குள் நுழையும்போது அவர்களுடைய ஊதியம் ஆண்களுடைய ஊதியத்தைவிடக் குறைவாக இருக்கிறது. அவர்கள் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்யத் தயாராக இருக்கின்றனர் என்பது மட்டுமல்ல அவர்களுடைய வேலையில் பெரும்பகுதி இலவசமாகச் செய்யப்படுகிறது என்பதும் காரணம். ஊதியங்களில் பாலின ரீதியான இடைவெளி அதிகமாக இருக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா. ஆண்களுடைய ஊதியங்களில் மூன்றில் இரு பங்கு அளவுக்கே பெண்களுடைய ஊதியம் உள்ளது.

இதோடு சம்பந்தப்பட்ட ஒரு விஷயம் என்னவென்றால், பெண்கள் அதிகமாகக் காணப்படும் வேலைகள் குறைந்த ஊதியத்தைக் கொண்டவையாக உள்ளன. இதே வேலைகளைச் செய்யும் ஆண்களுக்கும் குறைவான ஊதியமே கிடைக்கிறது. எடுத்துக்காட்டாக, கவனித்துக்கொள்ளும் வேலையைச் செய்பவர்கள் மத்தியில் இந்நிலை உள்ளது. ஆனால், இந்தியாவில் பொதுச் சேவை வசதிகளை மலிவாகச் செய்துதர அரசாங்கம் இத்தகைய சூழ்நிலையைப் பயன்படுத்துகிறது. அங்கன்வாடி தொழிலாளர்கள், உதவியாளர்கள் ஆகியோருக்கு அதிகாரபூர்வமான குறைந்தபட்சக் கூலியில் ஒரு சிறு பகுதியையே கொடுத்து தன்னார்வலர்களாக அவர்களை வேலைக்கு அமர்த்துவதன் மூலம் இதைச் செய்கிறது. அதேபோல, மாநில அரசுகளால் பெண்கள் தற்காலிக ஆசிரியர்களாகவும் துணைநிலை செவிலியர்களாகவும் மகப்பேறு பார்க்கும் தாதிகளாகவும் அதிக விகிதத்தில் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர்.

மூன்றாவதாக, இந்த ஊதியமற்ற வேலைகள் அனைத்துமே அங்கீகரிக்கப்பட்ட பொருளாதாரத்துக்கும் 'முறைசார்ந்த துறைக்கும்" பெரும் துணை புரிகிறது. வருமானம் அளிக்கப்படாத, கண்டுகொள்ளப்படாத இந்தத் தொழிலாளர்கள் அளிக்கும் பொருட்களையும் சேவைகளையும் சார்ந்தே இந்த முறைசார் பொருளாதாரம் உள்ளது. இந்தப் பங்களிப்பு அங்கீகரிக்கப்படாததால், பொருளாதாரத்தில் தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் அதிகரிப்பது போன்ற மாயத் தோற்றத்தை இது ஏற்படுத்துகிறது. இது மிகவும் தவறானதாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ந்தாலே அது அனைவருக்கும் வேண்டிய "நல்ல வேலைகளை" உருவாக்கிவிடும் என்ற தவறான நம்பிக்கையில் அரசுக் கொள்கையை இது நீடிக்கச் செய்கிறது.

(கட்டுரை ஆசிரியர் பொருளாதாரவியல் பேராசிரியர்)

நன்றி: இந்துஸ்தான் டைம்ஸ்

தமிழில்: பா.சிவராமன்

புதன், 10 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon