மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 16 ஜூலை 2020

ரஃபேல் கொள்முதலில் ரிலையன்ஸ் கட்டாயம்: பிரான்ஸ் ஏடு!

ரஃபேல் கொள்முதலில் ரிலையன்ஸ் கட்டாயம்: பிரான்ஸ் ஏடு!

ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்யும் ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டும் எனில் இந்தியாவின் பங்குதாரராக ரிலையன்ஸ் நிறுவனம் இருக்க வேண்டும் என்பது கட்டாயம் என டசால்ட் நிறுவனத்தின் ஆவணங்கள் தெரிவிப்பதாக பிரான்ஸ் நாட்டின் ஏடான மீடியா பார்ட் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்யும் விவகாரம் மத்திய அரசுக்கு மிகப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் 2007ஆம் ஆண்டு புதிய போர் விமானங்களை கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டது.

இது தொடர்பான ஒப்பந்தம் கோரப்பட்ட போது பிரான்ஸின் டசால்ட் நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் பங்கேற்றன. இறுதியாக பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கிடைத்தது. இந்தியா டசால்ட் நிறுவனத்திடம் இருந்து வாங்க திட்டமிட்டிருந்தது 126 போர் விமானங்கள். இதில் 18 விமானங்களை டசால்ட் நிறுவனம் வழங்கிவிடும்.

இதர 108 விமானங்கள் டசால்ட் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் எரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் இந்த போர் விமானங்களைத் தயாரித்து வழங்கும் எனத் திட்டமிடப்பட்டது. இதற்கான ஒப்பந்தமும் 2014ல் கையெழுத்தானது.

இதைத் தொடர்ந்து மத்தியில் பாரதிய ஜனதா அரசு ஆட்சிக்கு வந்தது. 2015ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் சென்றது முதல் மையம் கொள்ளத் தொடங்குகிறது ரஃபேல் புயல். அப்பயணத்தின்போது, பிரான்ஸிடமிருந்து 36 போர் விமானங்களை இந்தியா வாங்கும் எனத் தன்னிச்சையாக அறிவிக்கிறார் பிரதமர் மோடி.

பின் டசால்ட் நிறுவனத்துடன் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தமே காலாவதி என அறிவித்தது மத்திய அரசு 2016ஆம் ஆண்டு டெல்லிக்கு பிரான்ஸ் அதிபராக இருந்த ஹாலண்டே வருகை தந்த போது புதியதாக ரஃபேல் போர் விமான கொள்முதலுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இந்த ஒப்பந்தத்தின் சரத்துகள்தான் ரஃபேல் புயலை தீவிரமடையச் செய்தன.

அதாவது,

*காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்ய நிர்ணயிக்கப்பட்ட தொகை ஒரு விமானத்திற்குரூ600 கோடி. ஆனால் மத்தியில் பாஜக அரசு அமைந்த பின்னர் போடப்பட்ட ஒப்பந்தத்தில் இது ரூ1400 கோடி என மாற்றப்படுகிறது.

*காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துக்கு (ஹெச்ஏஎல்) டசால்ட் தொழில்நுட்பம் வழங்கப்படும் என்பது ஒப்பந்தம். பாஜக அரசின் ஒப்பந்தப்படி பிரான்ஸிலேயே அனைத்து போர் விமானங்களும் தயாரிக்கப்படும். இதில் இந்திய தனியார் நிறுவனங்களும் இடம்பெறும் என மாற்றப்பட்டது.

*மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹெச்ஏஎல்க்கு போர் விமானங்கள் தயாரிக்கும் தகுதி இல்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.

*புதிய ஒப்பந்தப்படி ரிலையன்ஸ் குழுமம் இந்த கொள்முதலில் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியது எனப் போட்டுடைத்தார் பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே

*ரிலையன்ஸ் குழுமத்துக்குப் போர் விமானக் கொள்முதலில் அனுபவமே இல்லை என்கிறபோது எப்படி அந்த நிறுவனத்தைக் கட்டாயம் சேர்க்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியது? என்பது எதிர்க்கட்சிகளின் கேள்வி.

இந்தக் கேள்விகளை முன்வைத்து ரஃபேல் புயலை இழுத்து வந்து அரசியல் கரையைக் கடக்க வைக்க எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதனிடையே ரஃபேல் விமானங்கள் கொள்முதல் ஒப்பந்தத்தை இறுதி செய்ய மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில்தான் பிரான்ஸின் மீடியா பார்ட் ஊடகமானது பரபரப்பான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது, அதில், சர்ச்சைக்குரிய டசால்ட் நிறுவன ஆவணங்களின்படி ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டும் எனில் ரிலையன்ஸ் குழுமம் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும் என டசால்ட் ஆவணங்கள் தெரிவிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதனால் ரஃபேல் புயல் இப்போது கரையைக் கடக்காமல் மத்திய அரசுக்கு மிகப் பெரும் சவால்களை உருவாக்கவே செய்யும் என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.

ஆனால், ரஃபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை இந்தியப் பங்குதாரராக சுதந்திரமாகவே தேர்வு செய்தோம்; எந்த கட்டாயமும் கொடுக்கப்படவில்லை என டசால்ட் நிறுவனம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் பரபரப்புக்கிடையே 3 நாள் சுற்றுப்பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அங்கு ரஃபேல் ஒப்பந்தம் குறித்து பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சருடன் விவாதிக்க உள்ளார்.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon