மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 4 ஏப் 2020

மசூதியில் பெண்கள்: வழக்கு தொடர முடிவு!

மசூதியில் பெண்கள்: வழக்கு தொடர முடிவு!

மசூதியில் பெண்களை அனுமதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாகத் தெரிவித்துள்ளது கேரளாவைச் சேர்ந்த முஸ்லிம் பெண்கள் மன்றம்.

கடந்த மாத இறுதியில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து மசூதியில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் அடுத்த வாரம் வழக்கு தொடர இருப்பதாகத் தெரிவித்துள்ளார் முஸ்லீம் பெண்கள் மன்றத்தின் தலைவர் வி.பி.ஜுஹுரா.

இது குறித்து வி.பி.ஜுஹுரா கூறுகையில், சமத்துவத்திற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். “சன்னி மசூதிக்குள் நுழைய பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அவர்களுக்கும் சம உரிமை இருக்கிறது. இறைதூதர் வாழ்ந்த காலகட்டத்தில் பெண்களும் மசூதிக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், எங்களை மட்டும் ஏன் மசூதிக்குள் அனுமதிக்க மறுக்கின்றனர்” என்று கேள்வியெழுப்பினார்.

சில மசூதிகளில் பெண்கள் அனுமதிக்கப்படுவதாகவும், திருவனந்தபுரத்தில் உள்ள பீமாபலி மசூதிக்குப் பெண்கள் செல்வதாகவும் அவர் கூறினார். “ஏன், பெண்கள் ஹஜ் பயணம் செல்வதற்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் உள்ள எந்த மசூதியிலும் பெண்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை.

இந்த பிரச்சினையில் மற்ற மகளிர் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஆதரவை எதிர்பார்க்கிறோம். இதில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. நரபலி, உடன்கட்டை ஏறுதல், தேவதாசி முறை போன்றவற்றிற்குத் தடை விதித்தது போல, சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. அது போன்று, முஸ்லீம் பெண்களையும் மசூதிக்குள் அனுமதிக்கக் கோரி அடுத்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார் வி.பி.ஜுஹுரா.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon