மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 11 ஜூலை 2020

ரன்வீர் ஷா ஜாமீன்: வழக்கு ஒத்திவைப்பு!

ரன்வீர் ஷா ஜாமீன்: வழக்கு ஒத்திவைப்பு!

தொழிலதிபர் ரன்வீர் ஷா முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கானது, வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தொழிலதிபர் ரன்வீர் ஷாவின் வீடு மற்றும் பண்ணை வீடுகளில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் 224 பழங்காலச் சிலைகள் உட்படப் பல கலைப்பொருட்கள் சிக்கின. இதைத் தொடர்ந்து, அவரது நண்பர் பெண் தொழிலதிபர் கிரணுக்குச் சொந்தமான வீட்டின் வளாகத்தில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 23 கலைப்பொருட்களைச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இருவரிடமும் மொத்தம் 247 பழங்காலக் கலைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த சிலைகள் எங்கிருந்து எடுக்கப்பட்டன என்று சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக, கும்பகோணத்தில் உள்ள சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் ரன்வீர் ஷா ஆஜராக வேண்டும் என்று அவருக்குச் சம்மன் அனுப்பட்டது. ஏற்கனவே, அவர் வெளிநாட்டுக்குச் செல்வதைத் தடுக்க ‘லுக்அவுட் நோட்டீஸ்’ கொடுக்கப்பட்டிருந்தது.

ரன்வீர் ஷா விசாரணையில் ஆஜர் ஆகாததால், அவருக்கு 2ஆவது முறையாகச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதே போன்று, பெண் தொழிலதிபர் கிரணுக்கும் போலீசார் சம்மன் அனுப்பினர். இவர்கள் இரண்டு பேரும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (அக்டோபர் 11) விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிலைக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட தீனதயாளனுக்கும் ரன்வீர் ஷாவுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிவித்தார் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர். ரன்வீர் ஷாவை 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

தொழிலதிபர் ரன்வீர் ஷா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்களிடம் உள்ள சிலைகள் வாங்கப்பட்டதற்கான ரசீதுகள் இருப்பதாகவும், அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யக் கால அவகாசம் வேண்டும் எனவும் வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon