மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 21 அக் 2020

விஜய்யின் விவேக முடிவு: அச்சத்தில் அட்லி!

விஜய்யின் விவேக முடிவு: அச்சத்தில் அட்லி!

விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள சர்கார் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தை நவம்பர் 6ஆம் தேதி, தீபாவளியன்று வெளியிடுவதற்கான வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில், அடுத்து ‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் – அட்லி கூட்டணி இணையப் போவதாகவும், இந்தப் படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஏஜிஎஸ் நிறுவனம் இயக்குநர் அட்லிக்கு முன்தொகை கொடுத்து, அவருக்கு அலுவலகம் கொடுத்து பட வேலைகள் நடந்துகொண்டிருந்தன. இந்நிலையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ அர்ச்சனா கல்பாத்தி, “விஜய் சாரின் அடுத்த படத்தை நாங்கள் தயாரிப்பதாகப் பொய்யான விஷயங்கள் வெளியாகியுள்ளன. விஜய் சாரை வைத்துப் படம் தயாரிப்பது என்பது எங்கள் கனவு. எப்போதுமே அது எங்கள் விருப்பமாக இருக்கிறது. எனவே, விரைவில் அப்படியொரு விஷயம் நடக்கும் என எதிர்பார்க்கிறோம். அதற்காகக் காத்திருக்கிறோம்” என்று சொல்லியிருக்கிறார். இதனால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எல்லா விசயங்களும் பேசி முடித்த பிறகு இப்போது திடீரென ஏஜிஎஸ் நிறுவனம் இப்படி மாற்றிச்சொல்ல காரணம் என்ன?

விஜய் சொல்லித்தான் அட்லியை ஒப்பந்தம் செய்து அவருக்காக ஏஜிஎஸ் நிறுவனம் செலவு செய்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், அட்லி சொன்ன கதையில் சிக்கல் இருக்கிறதென்றும் அதை சரி செய்துகொண்டு அறிவிப்பு செய்யலாம் என்றும் விஜய் நினைத்ததால் தயாரிப்பு தரப்பிலிருந்து இப்படி ஒரு அறிவிப்பு வந்திருக்கிறதென்று கூறப்படுகிறது. கதைச் சிக்கல் சரியாகவில்லையென்றால் இயக்குநரை மாற்றி அறிவிக்கும் வாய்ப்பும் இருக்கிறதென்கிறார்கள். அதேவேளை அட்லி இதுவரை இயக்கி வெளியான எல்லா படங்களும் ஏதோ ஒரு தமிழ்ப் படத்தின் தழுவலாகவே இருக்கிறது என ஊடகங்களில், சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகி வந்திருக்கிறது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான மெர்சல் மூன்று முகத்தின் கதை என்று கூறி அப்படத்தின் உரிமையை வாங்கியுள்ள தயாரிப்பாளர் கதிரேசன் அட்லி மீது புகார் கொடுத்து தயாரிப்பாளர் சங்கத்தில் சமீபத்தில் பஞ்சாயத்து நடைபெற்றது. இதில் மெர்சல் படத்திற்காக அட்லி வாங்கிய சம்பளத்தில் 30% பங்கினை கதிரேசன் அவர்களுக்கு நஷ்ட ஈடாக கொடுக்கவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. இம்முடிவை அட்லி ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் திரைப்பட அமைப்புகள் அவர் மீது தொழில் ஒத்துழையாமை என்ற முடிவை எடுக்கக்கூடிய சூழ்நிலை உள்ளது. இவற்றையெல்லாம் அறிந்து கொண்ட விஜய் அட்லிக்கு அடுத்த பட வாய்ப்பை வழங்கத் தயங்குவதாக கூறப்படுகிறது.

இவை அனைத்தும் திரையுலகில் உலா வரும் செய்திகள். இவற்றின் உண்மைத்தன்மையை சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே உறுதி செய்ய இயலும்.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon