மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 4 டிச 2020

தாமிரபரணி புஷ்கரத்தில் ஆளுநர்!

தாமிரபரணி புஷ்கரத்தில் ஆளுநர்!

நெல்லையில் நடைபெறும் மகா புஷ்கர விழாவைத் தொடங்கி வைத்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தாமிரபரணி ஆற்றில் நீராடி வழிப்பட்டார்.

குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும் போது ஒவ்வொரு ஆண்டும் அந்த ராசிக்கு உரிய நதியில் புஷ்கர விழா நடத்தப்படும். இந்நிலையில் இந்த ஆண்டு குருபகவான் விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்ததையடுத்து, அந்த ராசிக்குரிய தாமிரபரணி ஆற்றில் புஷ்கர விழா நடைபெறுகிறது. மகா புஷ்கர விழா, இன்று (அக்டோபர் 11) தொடங்கி இம்மாதம் 22 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தமிழகத்தில் 144ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த விழாவுக்காக தாமிரபரணி நதியில் நீராட நாடு முழுவதிலுமிருந்து துறவிகள், சித்தர்கள், ஆன்மிகவாதிகள் என பலரும் வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில் விழாவில் கலந்துகொள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சென்னையில் இருந்து சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் தென்காசி வந்தார். அவரை நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா, தென் மண்டல ஐ.ஜி.சண்முக ராஜேஸ்வரன், உள்ளிட்டோர் வரவேற்றனர். .

பின்னர் தென்காசியில் இருந்து குற்றாலத்தில் உள்ள விருந்தினர் மாளிகைக்குச் சென்ற அவர் அங்கிருந்து தாமிரபரணி புஷ்கர விழாவில் கலந்து கொள்வதற்காகச் சென்றார்.

சுமார் 11.45 மணியளவில் புஷ்கர விழாவைத் தொடங்கிவைத்த ஆளுநர் தாமிரபரணி ஆற்றில், ராஜராஜேஸ்வரி திருச்சி ஸ்வாமிகள் மண்டபம் படித்துறையில் புனித நீராடி வழிப்பட்டார்.

இவ்விழாவைத் தொடர்ந்து, திருநெல்வேலி செல்லும் ஆளுநர் இன்று மாலை ஜடாயத்துறையில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்ளவுள்ளார். அதன்பின்னர், திருவிடை மருதூரில் மாலை 7 மணிக்கு நடைபெறும் மகா ஆரத்தி விழாவிலும் பங்கேற்கிறார். இதைதொடர்ந்து நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவுள்ளார்

ஆளுநர் வருகையையொட்டி நெல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon