மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 18 ஜன 2021

குயின்ட் அலுவலகத்தில் ஐடி ரெய்டு!

குயின்ட் அலுவலகத்தில் ஐடி ரெய்டு!

தனது வீடு மற்றும் குயின்ட் அலுவலகத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகப் பத்திரிகையாசிரியர்கள் சங்கத்திடம் தெரிவித்துள்ளார் பத்திரிகையாளர் ராகவ் பாஹ்.

இந்திய ஊடகங்களில் முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களான நெட்வொர்க் 18 குழுமம், குயின்ட் உள்ளிட்டவற்றை நிறுவியவர் ராகவ் பாஹ். இவரது குயின்ட் இணைய செய்தித்தளத்தில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள் வெளியாகி வருகின்றன. டிஜிட்டல் மற்றும் மாற்று ஊடகங்களை விரும்புபவர்களின் தேர்வுகளில் ஒன்றாக இருந்து வருகிறது குயின்ட்.

இதன் ஆசிரியரான ராகவ் பாஹ், இன்று (அக்டோபர் 11) பத்திரிகையாசிரியர்கள் சங்கத்துக்கு ஒரு தகவல் அனுப்பினார். அதில், தனது வீடு மற்றும் குயின்ட் அலுவலகத்தில் இன்று அதிகாலை முதல் வருமான வரித் துறை அதிகாரிகள் சர்வே நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.

“நாங்கள் வருமான வரித் துறைக்கு இணக்கமாக நடந்து வருகிறோம். இது தொடர்பான அனைத்து நிதி ஆவணங்களையும் சமர்ப்பிக்கத் தயாராக இருக்கிறோம். ஆனால், எங்களது இமெயில் மற்றும் ஆவணங்களைச் சோதனையிடுகிறோம் என்ற பெயரில், பத்திரிகைத் தகவல்களை அதிகாரிகள் ஆராயக் கூடாது. அப்படிச் செய்தால், அதற்கான தகுந்த நடவடிக்கைகளை நாங்கள் நாட வேண்டிய சூழல் உருவாகும்.

இந்த விவகாரத்தில் பத்திரிகையாசிரியர்கள் சங்கம் எங்களுக்குத் துணை நிற்கும் என்று நம்புகிறேன். அப்படி இல்லையென்றால், எதிர்காலத்தில் பல ஊடகங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற, இது முன்னோடி ஆகிவிடும். அதேபோல, எங்களது ஆவணங்கள் எதையும் அவர்கள் (வருமான வரித்துறையினர்) தங்களது ஸ்மார்ட் போன்களில் பதிவு செய்யக்கூடாது” என்றும் கூறினார்.

வரி ஏய்ப்பு சம்பந்தமாக குயின்ட் அலுவலகம் மற்றும் ராகவ் பாஹ் வீட்டில் சோதனை நடத்தி வருவதாக, பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அசுதோஷ், ராகவ் பாஹ் மிகவும் நம்பிக்கையான ஊடக ஆளுமைகளில் ஒருவர் என்று குறிப்பிட்டுள்ளார். மோடியின் அரசை விமர்சிப்பதற்காகவும், அரசின் முடிவுகளை எதிர்ப்பதற்காகவும், அவர் தரும் விலையே இந்த வருமான வரிச் சோதனை என்று தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக, குயின்ட் இணையதளமானது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவைக் கடுமையாக விமர்சித்து வருகிறது.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon