மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 11 ஜூலை 2020

ஆந்தாலஜி பாணியில் சில்லு கருப்பட்டி!

ஆந்தாலஜி பாணியில் சில்லு கருப்பட்டி!

பூவரசம் பீப்பி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஹலிதா ஷமீம் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

தமிழ் சினிமாவில் பெண் இயக்குநர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அறிமுகமாகும் பெண் இயக்குநர்கள் ஒன்றிரண்டு படங்களுடன் இயக்குவதை நிறுத்திக்கொள்வதே நடந்து வருகிறது. சுதா கொங்கரா உள்ளிட்ட சில இயக்குநர்களே தொடர்ந்து இதில் ஈடுபட்டு வருகின்றனர். கவனம் ஈர்க்கும் பெண் இயக்குநரான ஹலிதா ஷமீம் பூவரசம் பீப்பி என்ற சுயாதீன திரைப்படத்தைக் குழந்தைகளை மையமாக வைத்து உருவாக்கியிருந்தார். மனோஜ் பரமஹ்மசா ஒளிப்பதிவு செய்ததுடன் தயாரித்திருந்தார். 2014ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தைத் தொடர்ந்து ஹலிதா தனது அடுத்த படத்தை ஆந்தாலஜி பாணியில் இயக்குகிறார்.

‘சில்லு கருப்பட்டி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் நான்கு குறும்படங்களை உள்ளடக்கி திரைப்படமாக உருவாகி வருகிறது. மூன்று கதைகள் ஏற்கெனவே படமாக்கப்பட்ட நிலையில் இறுதிப் பகுதியின் படப்பிடிப்பு அடுத்த வாரம் படமாக்கப்படவுள்ளது. சமகாலப் பிரச்சினைகளை மையமாகக்கொண்டு யதார்த்த பாணியில் இந்தப் படம் தயாராகி வருகிறது. மனோஜ் பரமஹம்சா, அபிநாதன் ராமானுஜம், விஜய் கார்த்திக் கண்ணன் என மூன்று ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றியுள்ளனர். பிரதீப் குமார் இசையமைக்கிறார். லீலா சாம்சன், சாரா அர்ஜுன், நிவேதிதா சதீஷ், மணிகண்டன் ஆகியோர் நடிக்கின்றனர்.

பூவரசம் பீப்பி படத்தைத் தொடர்ந்து ஹலிதா, மின்மினி என்ற படத்தைத் தொடங்கினார். பாபநாசம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த எஸ்தர் அனில் மற்றும் பூவரசம் பீப்பி படத்தில் நடித்த சிறுவர்களை வைத்து அந்தப் படத்தின் படப்பிடிப்பு மூன்று ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. படத்தின் இரண்டாம் பாதியில் அந்தச் சிறுவர், சிறுமிகள் வளர்ந்த நிலையில் காட்ட வேண்டும் என்பதற்காக தற்போது அதன் படப்பிடிப்பை தொடராமல் உள்ளார். அடுத்த ஆண்டு மின்மினி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதன், 10 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon