மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 16 ஜூலை 2020

சிலை முறைகேடு: கவிதா சஸ்பெண்ட்!

சிலை முறைகேடு: கவிதா சஸ்பெண்ட்!

சிலை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கவிதாவைப் பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் 117 கிலோ எடையுள்ள சோமாஸ்கந்தர் சிலை சேதமடைந்ததைத் தொடர்ந்து, புதிதாகச் சிலை செய்யப்பட்டது. அந்த சிலையில் தங்கம் சேர்ப்பதில் முறைகேடு நடந்துள்ளதாகப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த மோசடியில் அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்குத் தொடர்பு உள்ளதாகக் கூறி, கடந்த ஜூலை 31ஆம் தேதியன்று சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அவரைக் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் ஆணையர் கவிதா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

கடந்த 4ஆம் தேதியன்று சிலைக் கடத்தல் வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, “சிலை முறைகேடு வழக்கில், இந்து அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். ஆனால், அவரைத் தமிழக அரசு பணியிடை நீக்கம் செய்யவில்லை. அவரைப் பணியிடை நீக்கம் செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று மனுதாரர் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கவிதாவைப் பணியிடை நீக்கம் செய்து இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் செயலாளர் வெங்கடேஷ் ஆணை பிறப்பித்துள்ளார். நேர்மையான அதிகாரி கவிதாவைப் பணியிடை நீக்கம் செய்திருப்பதற்குக் கண்டனம் தெரிவிப்பதாகக் கூறியுள்ளது இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் சங்கம்.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon