மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 16 ஜூலை 2020

வளரும் டிராக்டர் தொழில் துறை!

வளரும் டிராக்டர் தொழில் துறை!

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சிறப்பான வளர்ச்சியைக் கொண்டுள்ள இந்தியாவின் டிராக்டர் தொழில் துறை இந்த ஆண்டின் ஆகஸ்ட் வரையிலான மாதங்களிலும் 22 சதவிகித வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.

இந்த ஆண்டில் பருவமழை போதிய அளவில் இல்லாவிட்டாலும் குஜராத், பிகார், உத்தரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வேளாண் துறையின் சிறப்பான வளர்ச்சியால் டிராக்டர் விற்பனை அதிகமாகவே இருந்துள்ளது. மதிப்பீட்டு நிறுவனமான இக்ராவின் கணிப்புப்படி, ஏப்ரல் - ஆகஸ்ட் மாதங்களில் சிறப்பான வளர்ச்சி இருந்ததால் இந்த நிதியாண்டில் 10 முதல் 12 சதவிகித வளர்ச்சியை டிராக்டர் தொழில் துறை கொண்டிருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்குப் போதிய நிதியாதாரம் கிடைப்பது, வேளாண் வளர்ச்சி போன்ற காரணிகள் இதற்குப் பக்கபலமாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதத்தைப் பொறுத்தவரையில் மகிந்திரா & மகிந்திரா நிறுவனம் மொத்தம் 37,581 டிராக்டர்களை விற்பனை செய்துள்ளது. இதில் உள்நாட்டில் 35,953 டிராக்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதோடு, வெளிநாடுகளுக்கு 1,628 டிராக்டர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. சோனாலிகா நிறுவனம் 12,111 டிராக்டர்களையும், எஸ்கார்ட்ஸ் நிறுவனம் 10,396 டிராக்டர்களையும் விற்பனை செய்துள்ளன. காரிஃப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை பல்வேறு பயிர்களுக்கு உயர்த்தி அறிவிக்கப்பட்டதால் வேளாண் பணிகள் மேம்பட்டு, டிராக்டர்களுக்கான தேவை அதிகரித்துள்ளதாக டிராக்டர் தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon