மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 11 ஜூலை 2020

எம்.ஜி.ஆர். சிகிச்சை ஆவணங்களைக் கேட்கும் ஆணையம்!

எம்.ஜி.ஆர். சிகிச்சை ஆவணங்களைக் கேட்கும் ஆணையம்!

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் சிகிச்சை ஆவணங்களை வரும் 23ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென அப்பல்லோ நிர்வாகத்துக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மரண மர்மத்தைக் கண்டறிய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆணையத்தில் சசிகலாவின் உறவினர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் ஆஜராகி விளக்கம் அளித்துவருகின்றனர். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாக அப்பல்லோ நிர்வாகத்திடமும், மருத்துவர்களிடமும் ஆணையம் தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறது.

2016ஆம் ஆண்டு ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்றுவந்தபோது, அவரை வெளிநாடு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டுமென பல்வேறு தரப்பிலிருந்தும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் ஜெயலலிதா வெளிநாடு அழைத்துச் செல்லப்படவில்லை. இதற்கிடையே கடந்த மாதம் தேனியில் நடைபெற்ற திமுக-காங்கிரஸுக்கு எதிரான கண்டனப் பொதுக் கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவை சிகிச்சைக்காக அமெரிக்கா கூட்டிச் செல்லலாம் என்றேன். ஆனால் அப்பல்லோ நிர்வாகம் தங்கள் மீது நம்பிக்கை இல்லையா என்று கூறி மறுத்துவிட்டது என்று குற்றம் சாட்டியிருந்தார்.

எம்.ஜி.ஆர். சிகிச்சை ஆவணங்கள்

இந்த நிலையில் 1984ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த ஆவணங்களை வரும் 23ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டுமென அப்பல்லோவுக்கு விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உடல்நலக் குறைவால் அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த எம்.ஜி.ஆர்., மேல் சிகிச்சைக்காக 1984ஆம் ஆண்டு அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், ‘எம்.ஜி.ஆரை வெளிநாடு அழைத்துச் செல்ல எதன் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது, அமைச்சரவையின் முடிவு யார் மூலம் மருத்துவமனைக்குத் தெரிவிக்கப்பட்டது’ உள்ளிட்ட விவரங்களையும் சமர்பிக்க அப்பல்லோ நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆரை வெளிநாடு அழைத்துச் சென்ற நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச் செல்வதில் எங்கு சிக்கல் ஏற்பட்டது என்பதை அறிவதற்காக எம்.ஜி.ஆரின் சிகிச்சை ஆவணங்கள் கேட்கப்பட்டுள்ளன. சுமார் 34 ஆண்டுகளுக்கு பின்னர் எம்.ஜி.ஆரின் ஆவணங்கள் கோரப்பட்டுட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon