மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 11 ஜூலை 2020

பேரிடர்: இந்தியாவுக்கு 80 பில்லியன் டாலர் இழப்பு!

பேரிடர்: இந்தியாவுக்கு 80 பில்லியன் டாலர் இழப்பு!

இந்தியாவில் கடந்த 20ஆண்டுகளில் இயற்கைப் பேரிடர்களால் மட்டும் சுமார் 80 பில்லியன் டாலர் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபை ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்குக் கடும் அச்சுறுத்தலாகப் பருவ நிலை மாற்றங்கள் இருந்து வருகிறது. உதாரணமாக, சமீபத்தில் கேரளாவில் கொட்டித்தீர்த்த பெருமழையால் சுமார் 20,000 கோடி பொருளாதார இழப்பு ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது. நேற்று (அக்டோபர் 10), இயற்கைப் பேரிடர்களால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு குறித்து ஐக்கிய நாடுகள் சபை ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் நிகழ்ந்த இயற்கைப் பேரிடர்களால் சுமார் 80 பில்லியன் டாலர் பொருளாதார இழப்பு நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1998 - 2017ஆம் ஆண்டு வரை, இந்தியா சந்தித்த பேரிடர்களால் ஏற்பட்ட உயிரிழப்புகளும், பொருளாதார இழப்பும் அதிகம் என இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரிடர்களால் கடும் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 5ஆவது இடத்தில் உள்ளது.

உலகம் முழுவதும் கடந்த 20 ஆண்டுகளில் பருவ நிலை மாற்றத்தால் ஏற்பட்ட பேரிடர்களால் 1.3 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 4.4 பில்லியன் மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். கடந்த 20 ஆண்டுகளில், உலக அளவில் பேரிடரால் ஏற்பட்டுள்ள இழப்பு மட்டும் சுமார் 3 ட்ரில்லியன் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

1978 - 1997 காலகட்டங்களில் நிகழ்ந்த பேரிடர்களால் ஏற்பட்ட இழப்பை விட, 1998 - 2017ஆம் ஆண்டு வரை ஏற்பட்ட பேரிடர்களால் அதிக இழப்பை உலக நாடுகள் சந்தித்துள்ளன. குறிப்பாக, பூகம்பங்கள் மற்றும் சுனாமியால் அதிகப்படியான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. வெள்ளம், புயல் மற்றும் வறட்சியால் பொருளாதார இழப்புகள் மற்றும் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை என அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுபோன்ற பேரிடர்களால், ஐரோப்பிய கண்டத்தில் உள்ள பிரான்ஸ் 48 பில்லியன் டாலரும், ஜெர்மனி 58 பில்லியன் டாலரும், இத்தாலி 57 பில்லியன் டாலரும் இழப்புகளைச் சந்தித்துள்ளன.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon