மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 11 ஜூலை 2020

தேனிப் பொண்ணு மடோனா

தேனிப் பொண்ணு மடோனா

கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் முதன்முறையாக சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் மடோனா செபாஸ்டியன்.

சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான எஸ்.ஆர்.பிரபாகரன் தற்போது இயக்கும் படம் கொம்பு வச்ச சிங்கம்டா. இவர் இயக்கிய இது கதிர்வேலன் காதல், சத்ரியன் ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. இந்நிலையில் சுந்தரபாண்டியன் கதையின் தொடர்ச்சியாக மீண்டும் சசிகுமாரை கதாநாயகனாகக் கொண்டு கொம்புவச்ச சிங்கம்டா படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்தின் நாயகி யார் என்பது முடிவுசெய்யப்படாமல் இருந்த நிலையில் தற்போது மடோனா செபாஸ்டியன் இணைந்துள்ளார்.

தேனி பகுதியை மையமாகக் கொண்டு சுந்தரபாண்டியன் படம் உருவாகியிருந்தது. அந்தக் கதையின் நீட்சி என்பதால் அதில் கதாநாயகியாக நடித்த லட்சுமி மேனனைப்போல் மடோனா பாவாடை தாவணி அணிந்து அசல் கிராமத்துப் பெண்ணாகவே நடிப்பார் என எதிர்பார்க்கலாம். தனுஷ் இயக்கத்தில் வெளியான ப.பாண்டி, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஜுங்கா ஆகிய படங்களில் ஏற்கெனவே மடோனா கிராமத்து தோற்றத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் இந்தப் படத்தின் மூலம் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆரவ், சூரி, யோகி பாபு, மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு திபு நிணன் தாமஸ் இசையமைக்கிறார். காரைக்குடி, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில் நவம்பர் 3ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon