மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 11 ஜூலை 2020

கோவாவில் காங்கிரஸின் போராட்ட தீபாவளி!

கோவாவில் காங்கிரஸின் போராட்ட தீபாவளி!

கோவா மாநிலத்தில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி எட்டு ஊழல் புகார்களை சுமத்தி பிரம்மாண்ட பேரணி நடத்தி ஆளுநரிடம் புகார் மனு கொடுத்துள்ளது.

கோவாவில் முதல்வராக இருக்கும் பாஜகவின் மனோகர் பாரிக்கர் இப்போது உடல் நலக் குறைவால் சிகிச்சையில் இருக்கிறார். இந்நிலையில் கோவாவின் அரசியல் நிலைமையில் நிலையற்ற தன்மை காணப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தில் கோவா மாநில காங்கிரஸ் சார்பில் நேற்று (அக்டோபர் 10) தலைநகர் பனாஜியில் பிரம்மாண்டப் பேரணி பொதுக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அம்மாநில ஆளுநர் மிருதுளா சின்ஹாவிடம் எட்டு ஊழல் தொடர்பாக புகார் அளித்துள்ளது காங்கிரஸ். இது தேசிய அளவில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிற விஷயமாகிவிட்டது.

மனோகர் பாரிக்கர் ராணுவ அமைச்சர் ஆவதற்கு முன்பு கோவா முதல்வராக இருந்தபோது நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஒரு லட்சத்து 41 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படும்படி நடந்துகொண்டார் என்று காங்கிரஸ் புகார் கூறியது. பாரிக்கருக்கு பிறகு கோவா முதல்வரான லட்சுமண் பர்சேகர் லோக் ஆயக்தாவில், ‘சுரங்க ஒதுக்கீட்டில் பாரிக்கர் என்ன செய்தாரோ அதையேதான் நாங்கள் பின்பற்றினோம். நாங்கள் புதிதாக எந்த முடிவும் எடுக்கவில்லை’ என்று கூறினார். அப்போது இதுபற்றி பரபரப்பு எழுந்தது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் உட்கட்சி விவகாரத்தால் மீண்டும் கோவாவுக்கு முதல்வரானார் பாரிக்கர்

இந்த நிலையில் கோவாவின் பாஜக ஆட்சியில் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல், கடற்கரை சுத்தப்படுத்துவதில் ஊழல், பாமாயில் ஊழல், சூதாட்ட க்ளப் ஊழல், ஸ்மார்ட் சிட்டி ஊழல் உள்ளிட்ட எட்டு ஊழல்களை அம்பலப்படுத்தும் வகையில் காங்கிரஸ் நேற்று நடத்திய பேரணியில் எட்டு சவப்பெட்டிகள் ரெடி செய்யப்பட்டன.

கோவாவின் முன்னாள் முதலமைச்சர் காங்கிரசைச் சேர்ந்த பன்டோத்கர். இவர் பெயரில் இருந்த பல இடங்களை இடிப்பதிலும் பெயரை மாற்றுவதிலும் முனைப்புடன் இருந்தவர் மனோகர் பரிக்கர். பன்டோத்கர் பெயரில் இருந்த புகழ் பெற்ற ஸ்டேடியத்தை பிஜேபி அரசு இடித்துத் தள்ளியது. அதை நினைவுபடுத்தும் வகையில் பனாஜியில் பன்டேத்கர் பெயரிலான ஸ்டேடியமிருந்த அதே இடத்தில் இருந்து பேரணி மாலை நான்கு மணிக்குதுவங்கியது.

பாஜக ஆட்சிக்கு மக்கள் வெகுண்டெழுந்து நடத்தும் இறுதி ஊர்வலம் இது என்பதை சிம்பாலிக்காக உணர்த்த பாஜகவின் புகழ்பெற்ற எட்டு ஊழல்களின் பெயரை ஒட்டி எட்டு சவப்பெட்டிகள் செய்துவரப்பட்டு ஊர்வலத்தில் தூக்கிவரப்பட்டது மீடியாக்களின் கவனத்தை கவர்ந்தது...

ஊர்வலத்தில் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களும் பல்லாயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும் கலந்துகொண்டனர். காங்கிரஸ் அல்லாத பல நூற்றுக்கணக்கான பொதுநல அமைப்புக்கள் சிறுபான்மை நல இயக்கங்கள் என கோவாவின் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கலந்துகொண்டனர். “கோவா வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை” என்று காங்கிரஸ்காரர்களே வியந்தனர்.

முதல்வர் மனோகர் பாரிக்கரால் ‘லுங்கிவாலா’ என்று சட்டமன்றத்திலேயே ஆறேழு முறை அழைக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த அகில இந்திய காங்கிரஸின் கோவா மாநில பொறுப்பாளர் டாக்டர் செல்லக்குமாரின் திட்டமிடலோடு இந்த பேரணி நடந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

இரண்டரை மணி நேரம் நடந்த பேரணியின் முடிவில், “ மனோகர் பரிக்கரின் ஊழலாட்சியை கலைக்கவேண்டும், சட்டமன்றத்தை உடனடியாக கூட்டி ஆளும் கட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்ல வேண்டும், ஊழல் செய்தவர்களை கைது செய்து சிறையிலடைக்கவேண்டும்” ஆகிய கோரிக்கைகள் மனுவாகக் கொடுக்கப்பட்டது. ஆளுநரை கோவா மாநில காங்கிரஸ் தலைவர் கிரிஸ் சௌடேங்கர், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சந்திரகாந்த் கவ்லங்கர், கோவா மாநில காங்கிரஸ் பொறுப்பாளரும் அகில இந்திய செயலாளருமான டாக்டர் செல்லகுமார் உள்ளிட்டோர் சந்தித்து மனுவை அளித்தனர்.

இதன் பின் மாலை ஆறு மணிக்கு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மேடை முகப்பில் பாஜகவின் எட்டு முக்கிய ஊழல்களை குறிக்கும்வகையில் எட்டு சவப்பெட்டிகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு ஜாகர் என்று பெயர் சூட்டியிருந்தார் டாக்டர் செல்லக்குமார்... இந்தப் பெயரின் அர்த்தம் என்ன டாக்டர் என்று கேட்டோம்.

“கோவாவில் வாழும் கொங்கனி மக்களின் தீபாவளித் திருநாள் போன்றது ஜாகர் பண்டிகை. ஜாதி மத இன மொழி வேறுபாடுகளை களைந்து தீய சக்திகளை தீக்கு தின்னக்கொடுத்து விடியலுக்கான ஆரம்ப நாளை திருவிழாவைப்போல ஆனந்தமாய் கொண்டாடுகின்றனர். அந்த நாளுக்கு அந்த நிகழ்வுக்கு பெயர்தான் ஜாகர் என்பது. அதனால் தான் கோவா மக்களை இருட்டில் தள்ளும் பாஜக ஆட்சியை விரட்டியடித்து ஊழலில்லாத ஒளிமயமான வலிமையான நல்லாட்சியை காங்கிரஸ் தரும் என்ற நம்பிக்கையை கோவா மக்களிடம் ஏற்படுத்தவே ஜாகர் என்ற வார்த்தையை தேர்வு செய்தோம்” என்று கூறினார்.

கோவாவில் காங்கிரஸின் இந்த எழுச்சியைப் பார்த்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போன் போட்டு மாநில காங்கிரஸ் தலைவர், செல்லகுமார் உள்ளிட்டோரைப் பாராட்டியதோடு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் மாநிலங்களில் இதேபோன்று பாஜகவின் ஊழலைப் பட்டியலிட்டு பேரணி நடத்தவும் உத்தரவிட்டிருக்கிறாராம்.

-ஆரா

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon