மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 9 ஆக 2020

பதிவுத் துறை அதிகாரிகள் சொகுசு வாழ்க்கை!

பதிவுத் துறை அதிகாரிகள் சொகுசு வாழ்க்கை!

தமிழகத்தில் பத்திரப் பதிவு அலுவலகங்களில் ஆவணங்களைப் பத்திரப்படுத்தும் நடைமுறை குறித்து விளக்கமளிக்குமாறு பத்திரப் பதிவுத் துறை ஐஜிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பம்மல் பகுதி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை வழங்கக் கோரி, பூபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில், சைதாப்பேட்டை சார்பதிவாளர் ஆஜராக வேண்டுமென்று நீதிபதி கிருபாகரன் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.

நேற்று (அக்டோபர் 10) இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது நேரில் ஆஜரான சார்பதிவாளரிடம், ஆவணங்கள் எப்படி பாதுகாக்கப்படுகின்றன என்று நீதிபதி கிருபாகரன் கேள்வியெழுப்பினார். பெரிய உறை ஒன்றில் ஆவணங்கள் பாதுகாக்கப்படுவதாக, அவர் பதிலளித்தார்.

ஆவணங்கள் சேதமடைவதால், சொத்துக்களின் உண்மையான உரிமையாளர்கள்கேள்விக்குள்ளாக்கப்படுவதாகத் தெரிவித்தார் நீதிபதி கிருபாகரன். ஆவணங்களைப் பாதுகாக்க எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து, பதிவுத் துறை ஐஜி வரும் நவம்பர் 1ஆம் தேதியன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

பத்திரப் பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தித் தாக்கல் செய்த அறிக்கையை மேற்கோள் காட்டிய நீதிபதி கிருபாகரன், பதிவுத் துறை அதிகாரிகள் வெளிநாடு, சொகுசு கார் என்று சுகபோக வாழ்க்கை வாழ்வதாகக் குற்றம்சாட்டினார். 2016ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட சோதனைகள் மற்றும் கைது செய்யப்பட்ட நபர்களின் விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டார்.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon