மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

48 முதுநிலை மருத்துவர்களின் பட்டங்கள் ரத்து!

48 முதுநிலை மருத்துவர்களின் பட்டங்கள் ரத்து!

அங்கீகரிக்கப்படாத 48 முதுநிலை மருத்துவர்களின் பட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக மருத்துவ கவுன்சில் நேற்று(அக்-10) அறிவித்துள்ளது.

நேற்று தமிழக மருத்துவ கவுன்சிலின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தின் முடிவில் மருத்துவக் கவுன்சிலின் தலைவர் டாக்டர் பி.செந்தில் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:

48 முதுநிலை மருத்துவர்களின் அங்கீகரிக்கப்படாத பட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இவர்கள் எந்த மருத்துவமனையின் சிறப்புத்துறைகளில் பணிபுரிவதோ, எந்த கல்லூரியிலும் வகுப்பு எடுப்பதோ தடை செய்யப்படுகிறது. அவர்களின் முதுநிலை மருத்துவ பட்டங்கள் மற்றும் லைசன்ஸ்கள் ரத்து செய்யப்படுகிறது. அவர்களின் பட்டங்களை பரிசீலித்து, அவை அங்கீகரிக்கப்படாத பட்டங்கள் என்று உறுதி செய்யப்பட்டபின்னர், இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில் 3 பேர் அங்கீகரிக்கப்படாத பட்டங்களை பயன்படுத்தி சிறப்பு மருத்துவமனைகளில் பணியாற்றியதால் அவர்களுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.

வேலுாரைச் சேர்ந்த பி சங்கர் என்பவர் புனேவிலுள்ள ஒரு இடைத்தரகர் மூலமாக 6 லட்ச ரூபாய் கொடுத்து அமெரிக்காவிலிருந்து அங்கீகரிக்கப்படாத ஒரு பல்கலைக்கழகத்திலிருந்து முதுநிலை மருத்துவ பட்டத்தை பெற்றுள்ளார். துாத்துக்குடியைச் சேர்ந்த ராஜேஷ் திலக் மற்றும் ஜஸ்மின் திலக் ஆகிய இரு மருத்துவர்களும் இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகரிக்கப்படாத மருத்துவ பட்டங்களை பயன்படுத்தியுள்ளனர்.

ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக்கல்லூரியிலும் விநாயகா மருத்துவக் கல்லூரியிலும் 2012ற்கு பின்னரே விபத்து மற்றும் அவசர மருந்துத்துறையில் எம்டி பட்டத்திற்கான வகுப்புகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் அந்த துறைகளுக்கான பட்டங்களை 2009இல் அளித்துள்ளனர் . .இவை பரிசோதனையில் கண்டறியப்பட்டு அந்த பட்டங்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon