மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 29 நவ 2020

பூரி கோயில்: போலீசாருக்கு கட்டுப்பாடு!

பூரி கோயில்: போலீசாருக்கு கட்டுப்பாடு!

பூரி ஜெகன்னாதர் கோயிலில் அக்டோபர் 3ஆம் தேதியன்று நடந்த வன்முறையைக் கவனத்தில் எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், அக்கோயிலுக்குள் போலீசார் ஆயுதங்கள் மற்றும் காலணிகள் அணிந்து செல்லத் தடை விதித்துள்ளது.

ஒடிசா மாநிலம் பூரியிலுள்ள ஜெகன்னாதர் கோயிலில் கடந்த 3ஆம் தேதியன்று, பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்யும் முறை சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜெகன்னாதர் சேனா என்ற அமைப்பு சார்பில் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. அமைதியாக நடைபெற்ற இப்போராட்டத்தில், திடீரென்று கலவரம் வெடித்தது. இதனால், இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரியதர்ஷன் பட்நாயக் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, சில இடங்களில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் 2 காவல் நிலையங்கள் சூறையாடப்பட்டன.

இதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடக் கோரியும், கோயிலுக்குள் போலீசார் காலணிகளுடன் நுழைந்தாகவும் சமூகக் கலாச்சார அமைப்பொன்றின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று (அக்டோபர் 10) நீதிபதிகள் மதன் பி லோகூர், தீபக் குப்தா ஆகியோர் முன்பு நடந்தது. அப்போது, கலவரம் நடந்தபோது போலீசார் துப்பாக்கி மற்றும் காலணியுடன் கோயிலுக்குள் நுழைந்தனர். இதனால் கோயிலின் புனிதம் பாதிக்கப்படும் என மனுதாரரின் வழக்கறிஞர் கூறினார்.

இதையடுத்து, கோயிலுக்குள் போலீசார் துப்பாக்கி மற்றும் காலணியுடன் நுழையக் கூடாது என்று தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon