மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 11 ஆக 2020

யானை காட்டில் வாழும் மிருகம்!

யானை காட்டில் வாழும் மிருகம்!

மாசினி யானைக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவச் சிகிச்சை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, ஒரத்தநாடு கால்நடை மருத்துவமனை முதல்வருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. யானை காட்டில் வாழும் மிருகம் என்றும், அதனை மக்கள் உபயோகத்திற்குப் பயன்படுத்தக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 2018ஆம் ஆண்டு மே 25ஆம் தேதியன்று பாகன் கஜேந்திரனை மிதித்துக் கொன்றது யானை மாசினி. காட்டில் வளர்ந்த யானையை கோயிலுக்குக் கொண்டு வந்ததால், அதற்கு திடீரென்று கோபம் ஏற்பட்டதாகக் காரணம் கூறப்பட்டது. அதனால், யானைகளை வனப் பகுதி தவிர மற்ற இடங்களுக்குக் கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவானது நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஸ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தது. அப்போது, இது குறித்து இந்து சமய அறநிலையத் துறை பதில் மனுவைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தனர் நீதிபதிகள்.

இந்த வழக்கு விசாரணை நேற்று (அக்டோபர் 10) மீண்டும் நடந்தது. யானைகளைக் கோயிலில் வளர்ப்பது பாரம்பரியமான வழக்கம். அதை முற்றிலும் தடுக்க முடியாது என்று இந்து சமய அறநிலையத் துறை பதில் மனு தாக்கல் செய்தது. யானை மாசினிக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், யானை இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்தது. “பல ஆண்டுகளாக யானைகள் கோயில்களில் வளர்க்கப்படுகின்றன. இதற்குத் தடை விதிக்க முடியாது” என்று தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது.

“யானை காட்டில் வாழும் மிருகம்; நாட்டில் வாழும் மிருகம் கிடையாது. மக்கள் உபயோகத்திற்கு யானைகளைப் பயன்படுத்தக் கூடாது” என்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதிஸ்குமார் தெரிவித்தனர். மாசினி யானைக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவச் சிகிச்சை குறித்து, வரும் 29ஆம் தேதியன்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்று ஒரத்தநாடு கால்நடை மருத்துவமனை முதல்வருக்கு உத்தரவிட்டனர்.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon