மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

கோமாவில் பெண்: ரூ.5,000 நிதியுதவி!

கோமாவில் பெண்: ரூ.5,000 நிதியுதவி!

கன்னியாகுமரியைச் சேர்ந்த பெண் ஒருவர் தவறான சிகிச்சையின் காரணமாக 18 ஆண்டுகளாக கோமா நிலையில் இருப்பதால், அவரது குடும்பத்துக்கு மாதம் ரூ.5,000 வழங்க வேண்டும் என அம்மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

கன்னியாகுமரி மாவட்டம் பொன்மனை அருகேயுள்ள இடைக்கட்டான்களைப் பகுதியைச் சேர்ந்தவர் ஆதர்ஷா. இவர் சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையைச் சேர்ந்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷுக்குக் கடிதம் அனுப்பினார். அதில், 18 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாயார் ஷோபனா கோமா நிலைக்குச் சென்றதாகத் தெரிவித்திருந்தார். பிரசவத்தின்போது அளிக்கப்பட்ட மயக்க மருந்தினால் அவர் இந்நிலையை அடைந்ததாகவும், தனது தந்தை பிரிந்து சென்றுவிட்ட நிலையில் பாட்டியின் அரவணைப்பில் தான் வாழ்ந்து வருவதாகவும், அதில் அவர் கூறியிருந்தார்.

“என்னுடைய தாயாருக்குத் தவறான சிகிச்சை செய்தது தொடர்பாக, மதுரை நுகர்வோர் நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி தொடர்ந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. எனது படிப்பு மற்றும் தாயாரின் சிகிச்சை செலவுகளுக்குப் பணம் இன்றி நான் தவித்து வருகிறேன்” என்று அந்தக் கடிதத்தில் ஆதர்ஷா தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார். கடந்த செப்டம்பர் 11ஆம் தேதியன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஸ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆதர்ஷாவின் தாயார் ஷோபனாவைக் கோமா நிலையில் இருந்து மீட்க முடியுமா என்றும், இல்லையென்றால் அவரைக் கருணைக்கொலை செய்ய முடியுமா என்றும், ஆசாரிப்பள்ளம் மாவட்ட மருத்துவமனை டீன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஸ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (அக்டோபர் 10) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஷோபனாவின் குடும்பத்துக்கு மாதம் ரூ.5,000 வழங்க வேண்டும் எனக் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டனர் நீதிபதிகள்.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon