மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 25 செப் 2020

ஸ்டாலின் மீது ஒரே ஒரு எஃப்ஐஆர்... தீவிரமாகும் அரசு!

ஸ்டாலின் மீது ஒரே ஒரு எஃப்ஐஆர்... தீவிரமாகும் அரசு!

புதிய தலைமைச் செயலகக் கட்டுமானம் தொடர்பாக தமிழக அரசு, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக வரிந்துகட்டிக் கொண்டு செயல்படத் தொடங்கியுள்ளது.

2006-11 திமுக ஆட்சிக் காலத்தில் அப்போதைய முதல்வர் கலைஞர் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தைக் கட்டினார். ஆனால், 2011ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, புதிய தலைமைச் செயலகத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று அறிவித்தார். கோட்டையிலேயே தலைமைச் செயலகம் செயல்பட்ட நிலையில், புதிய தலைமைச் செயலகத்தைப் பன்னோக்கு மருத்துவமனையாக மாற்றினார்.

மேலும், புதிய தலைமைச் செயலகம் கட்டுவதில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்தார் ஜெயலலிதா.

விஜிலென்ஸ் எஸ்பி ஒருவரின் துணையோடு இதுபற்றி விசாரணையைத் தொடங்கிய ரகுபதி ஆணையம், ‘புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் அரசுக்கு 261 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கலாம்’ என்று ஓர் ஆரம்பகட்ட அறிக்கையை அரசுக்கு அனுப்பியது.

அதன் பிறகு ரகுபதி ஆணையம் கட்டுமானப் பணி நடந்தபோது இருந்த பொதுப்பணித் துறை அதிகாரிகள், அலுவலர்களை விசாரிக்க வேண்டிய தேவையில்லை என்று ஒரு நிலைப்பாடு எடுத்தது. அப்போதைய முதல்வர் கலைஞர், பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோரது செயல்பாடுகளால்தான் இந்த இழப்பீடு ஏற்பட்டது என்ற முடிவுக்கு வந்தது ஆணையம்.

இதையடுத்து கலைஞர், துரைமுருகன் ஆகியோருக்கு ஆணையத்தின் முன் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து இவர்கள் சார்பாக வழக்கறிஞர்கள் ஆணையத்துக்குச் சென்றனர். அவர்கள் இருவரும் ஆணையத்தின் முன்பு ஆஜராக தேவையில்லை என்று வாதாடினார்கள். ஆனால், ஆணையம் இதை ஏற்கவில்லை. இந்த நிலையில் 15 நாட்கள் கழித்து, புதிய தலைமைச் செயலகக் கட்டுமான காலத்தில் துணை முதல்வராக இருந்த ஸ்டாலினுக்கும் ரகுபதி ஆணையம் ஒரு சம்மன் அனுப்பியது.

அதாவது திமுக ஆட்சியில் புதிய தலைமைச் செயலகக் கட்டுமானம் தொடர்பாக விரைந்து முடிவெடுத்து அறிவுரைகளை வழங்க ஒரு குழு அமைக்கப்பட்டிருந்தது. முதல்வர், பொதுப்பணித் துறை அமைச்சர், சில ஐஏஎஸ் அதிகாரிகள் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். ஒருமுறை முதல்வர் கலைஞர் டெல்லி சென்றிருந்த நிலையில் அவர் பங்கேற்க இயலாததால் முதல்வரின் சார்பாக துணை முதல்வர் ஸ்டாலின் புதிய தலைமைச் செயலகம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். இதை அடிப்படையாக வைத்துக்கொண்டு ஒரே ஒரு கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலினுக்கும் சம்மன் அனுப்பியது ரகுபதி ஆணையம்.

கலைஞர், துரைமுருகன், ஸ்டாலின் ஆகியோரை மட்டும் ஆணையம் டார்கெட் செய்வதாகவும், இது பாகுபாடான விசாரணை எனவும் ரகுபதி ஆணையத்தில் திமுக வழக்கறிஞர்கள் வாதாடினார்கள். ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாத அப்போதைய ரகுபதி ஆணையம், ‘மூவரும் ஆஜராகியே தீர வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

இதையடுத்து , ‘ரகுபதி ஆணையம் பாகுபாடுகளுடன் நடந்து கொள்கிறது. ஆணையம் வழங்கிய அழைப்பாணைக்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று திமுக வழக்கறிஞர்கள் கலைஞர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார்கள். அதில் ரகுபதி ஆணையத்தில் விசாரணைக்குப் பங்கேற்க தடை ஆணை பெற்றார் கலைஞர். அதைத்தொடர்ந்து துரைமுருகனும், ஸ்டாலினும் தடையாணை பெற்றார்கள்.

இந்த நேரத்தில்தான் மௌலிவாக்கம் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாகவும் அதே ரகுபதி தலைமையில் இன்னோர் ஆணையம் விசாரித்து வந்தது. ஆனால், அந்த விவகாரத்தை விட புதிய தலைமைச் செயலக விவகாரம் தொடர்பாக விசாரணையைத் தீவிரப்படுத்தியது ரகுபதி ஆணையம்.

இதையடுத்து திமுக மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது. ஏற்கெனவே ரகுபதி ஆணையத்தின் சம்மனுக்குத் தடைகோரிய திமுக இம்முறை, “ரகுபதி விசாரணை ஆணையம் என்பது விசாரணை ஆணைய சட்டத்தை மீறி அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படுகிறது. எனவே, எங்கள் மீது ரகுபதி ஆணையம் நடவடிக்கை எடுப்பதற்குத் தடை விதிக்க வேண்டும்” என்று உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இம்மனுவின் மீது, இம்மனுவில் முகாந்திரம் இருப்பதாகவும் கலைஞர், துரைமுருகன், ஸ்டாலின் ஆகியோர் மீது புதிய தலைமைச் செயலக விவகாரத்தில் விசாரணை கமிஷன் நடவடிக்கை எடுப்பதற்கு இடைக்காலத் தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம். இது நடந்தது 2014 ஆம் ஆண்டில்.

இதன்பின் ரகுபதி ஆணையத்தின் செயல்பாடுகள் எதுவுமே நடக்கவில்லை. திடீரென்று கடந்த ஜூலை மாதம் கலைஞர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தபோது, விசாரணை ஆணையத்தால் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று இடைக்காலத் தடை விதிக்கப்பட்டதில் கருணாநிதியின் மீதான தடையை மட்டும் எதிர்த்து அரசுத் தரப்பு உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு செய்தது.

இரு தரப்பு வாதங்களுக்குப் பின் ஆகஸ்ட் 3ஆம் தேதி உயர் நீதிமன்றம், நீதிபதி ரகுபதி ஆணையம் முறையாகச் செயல்படவில்லை. இந்த ஆணையத்துக்காகத் தமிழக அரசு 5 கோடி ரூபாய் அளவில் மக்கள் பணத்தை செலவு செய்திருப்பதாகவும் கண்டனம் தெரிவித்தது. மேலும் ரகுபதி ஆணையம் திரட்டியுள்ள தகவல்கள், ஆவணங்களைத் தமிழக அரசு தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் அனுப்பி, அதில் உள்ள முகாந்திரங்கள் அடிப்படையில் குற்றவியல் சட்டம், ஊழல் தடுப்பு சட்ட நடைமுறையின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

“ஆகஸ்ட் 3ஆம் தேதி இந்த உத்தரவு வந்தபோது கலைஞர் மிகவும் கவலைக்கிடமாக இருந்தார். இந்த நிலையில் அவர் மீது எப்படியாவது ஒரு வழக்கைப் பதிவு செய்துவிட வேண்டும் என்று அரசுத் தரப்பு முனைப்பு காட்டிய நிலையில் கலைஞர் ஆகஸ்ட் 7ஆம் தேதி காலமானார். கலைஞர் இறக்கும்போதும் அவர் மீது ஓர் ஊழல் வழக்கு நிலுவையில் இருக்க வேண்டும் என்ற அரசின் நோக்கம் நிறைவேறாமல் போய்விட்டது. கலைஞர் மீது ஏதும் ஊழல் வழக்குகள் இல்லாததால்தான் அவருக்கு மெரினாவில் இடம் கேட்டு நீதிமன்றத்தில் திமுகவால் போராட முடிந்தது” என்கிறார்கள் திமுக வழக்கறிஞர் அணியினர்.

இதன் பின் ஒன்றரை மாதம் கழித்து துரைமுருகன், ஸ்டாலின் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்குவதற்கான முயற்சிகள் அரசுத் தரப்பு நீதிமன்றத்தை அணுகியது.

தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஆகஸ்ட் 3ஆம் தேதி நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் அதை இந்த வழக்கில் சேர்க்கும்படியும் கோரினார். நீதிமன்றம் இதையும் ஏற்றுக்கொண்டது. ஆக, இப்போது ரகுபதி ஆணையத்தின் ஆவணங்கள், தகவல்கள் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையிடம் சென்றுவிட்டன.

இந்தப் பின்னணியில் புதிய தலைமைச் செயலகக் கட்டுமானத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக ஸ்டாலின் மீதும், துரைமுருகன் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் இப்போது தீவிரமாக இருக்கிறார்கள் லஞ்ச ஒழிப்புத் துறையினர்.

இதற்கிடையேதான் திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று (அக்டோபர் 10ஆம் தேதி) சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “ரகுபதி ஆணையம் என்பது காலாவதியான ஓர் ஆணையம். அது இப்போது இல்லா நிலையில் இருக்கிறது. அதன் ஆவணங்கள், தகவல்களை எந்தவித பரிசீலனையும் செய்யாமல் தமிழக அரசு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாற்றியது தவறு. அந்த அரசாணையையே ரத்து செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, தமிழக அரசுக்கு இது தொடர்பாக வரும் வெள்ளிக்கிழமை பதில் அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

ஸ்டாலின் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பாக ஒரே ஒரு எஃப்ஐஆர் பதிவு செய்துவிட்டால் அதை வைத்து அவரது அரசியல் வாழ்வுக்குப் பெரும் இடைஞ்சலை ஏற்படுத்திவிடலாம் என்று தீவிரமாக முயன்று கொண்டிருக்கிறது அதிமுக அரசு. இதைத் தடுக்க சட்டத்தின் ஒவ்வொரு நிலையிலும் தீவிரமாக முயன்று கொண்டிருக்கிறது திமுக வழக்கறிஞர்கள் தரப்பு.

வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் இதற்கான தெளிவு கிடைக்கலாம்!

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon