மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 11 அக் 2018

நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் பயணம்: ராகுல் சந்தேகம்!

நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் பயணம்: ராகுல் சந்தேகம்!

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் பயணம் குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்தேகம் எழுப்பியுள்ளார்.

ரஃபேல் போர் விமானம் வாங்குவதற்காக பிரான்ஸுடன் இந்தியா ஒப்பந்தம் செய்ததில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறும் நிலையில், தேர்தலுக்கான பிரச்சாரக் கூட்டத்தில் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்களையும், கேள்விகளையும் ராகுல் காந்தி முன்வைத்து வருகிறார்.

இந்த நிலையில் ரஃபேல் போர் விமானங்கள் விநியோகத்தைத் துரிதப்படுத்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் மூன்று நாட்கள் பயணமாக பிரான்ஸ் நாட்டுக்கு நேற்று பயணம் மேற்கொண்டார். அங்கு பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் பிளாரன்ஸ் பார்லியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இருநாட்டு நல்லுறவு பாதுகாப்பு தொடர்பான பல முக்கிய அம்சங்கள் இந்தப் பேச்சுவார்த்தையில் இடம் பெறுவதுடன் ரஃபேல் விமானங்களின் கொள்முதல் குறித்தும் ஆலோசிக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, ரஃபேல் விமானங்கள் வாங்க முடிவு எடுத்தது தொடர்பான விவரங்களை சீலிடப்பட்ட கவரில் வைத்துத் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் சென்றது குறித்து ராகுல் காந்தி நேற்று (அக்டோபர் 10) தனது ட்விட்டர் பக்கத்தில் சந்தேகம் எழுப்பியுள்ளார். அதில், "ரஃபேல் ஒப்பந்தம் முடிவு குறித்து விளக்கமளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது மிகவும் எளிமையானது. பிரதமர் முடிவு செய்துவிட்டார் அவரது முடிவை நியாயப்படுத்தும் செயல்முறைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கான வேலைத் தொடங்கியுள்ளது. இதற்குத் தொடர்புடைய வகையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரான்ஸ் செல்கிறார்” என்று பதிவிட்டுள்ளார்.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon