மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

அடிப்படை வசதிகளற்ற பள்ளிக்கு சீல்!

அடிப்படை வசதிகளற்ற பள்ளிக்கு சீல்!

அடிப்படை வசதிகள் இன்றி இயங்கிவந்த காரணத்தினால், திருவண்ணாமலை அருகே காந்தி இன்டர்நேஷனல் மெட்ரிக் பள்ளி மூடி சீல் வைக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அருகே மங்கலம் என்ற ஊரில் காந்தி இன்டர்நேஷனல் மெட்ரிக் பள்ளி என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வந்தது. இந்தப் பள்ளியின் கட்டடம் முழுமையாகக் கட்டி முடிக்கப்படாமலும், முறையான கழிவறை மற்றும் குடிநீர் உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் இயங்கி வருவதாகவும், சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்குத் தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதையடுத்து, அந்தப் பள்ளியில் மாவட்ட நீதிபதி மகிழேந்தி கடந்த சனிக்கிழமையன்று (அக்டோபர் 6) ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, முட்புதர்களோடு காணப்பட்ட பள்ளி வளாகத்தையும், குழந்தைகள் விளையாடும் பகுதியில் அபாயகரமான முறையில் ஒரு கிணறு இருப்பதையும் கண்டார் நீதிபதி. இதனையடுத்து, அப்பள்ளிக்குச் சீல் வைக்க உத்தரவிட்டார்.

இந்தப் பள்ளி மிகவும் சுகாதாரமற்ற முறையில், குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்றும், 50 வகுப்பறைகளில் எந்த அறையிலும் கதவுகளே இல்லை என்றும் தனது ஆய்வின் முடிவில் தெரிவித்தார்.

இதையடுத்து, இந்தப் பள்ளிக்கு நேற்று (அக்டோபர் 10) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார். அதன் பிறகு, அவர் பள்ளியை மூடி சீல் வைத்தார். இந்தப் பள்ளியைச் சேர்ந்த 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் அனைவரும் அவர்கள் விரும்பும் பள்ளியில் சேர்ந்து படிக்கலாம் என்றும், இதற்கான கடிதம் அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

புதன், 10 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon